தமிழ்நாடு முழுவதும் இன்று பேருந்து போக்குவரத்து: எத்தனை பேருந்துகள்? - இன்றைய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
சில இந்திய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணையப் பக்கங்களில் வெளியான முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: தமிழகம் முழுவதும் இன்று பேருந்து போக்குவரத்து இயக்கம்
தமிழகத்தில் 166 நாட்களுக்கு பிறகு மாநிலம் முழுவதும் இன்று பேருந்துபோக்குவரத்து தொடங்குகிறது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 8-ம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. ஒவ்வொரு கட்ட ஊரடங்கு உத்தரவின் போதும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, ஏற்கனவே தமிழகம் முழுவதும் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சென்னை மண்டலம் மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலம் ஆகிய 2 மண்டலங்களையும் தவிர்த்து பிற மண்டலங்களில் பேருந்து போக்குவரத்து ஜூன் 1-ந் தேதி முதல் தொடங்கப்பட்டது. எனினும் பேருந்துகள் அந்தந்த மண்டலங்களுக்குள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

பின்னர், ஜூன் 26-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை சென்னை மண்டலம் தவிர்த்து ஏனைய மண்டலங்களில் பேருந்து போக்குவரத்து நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கொரோனா தொற்று வேகமாக பரவியதால், ஜூலை 1-ந் தேதி முதல் அனைத்து பேருந்து போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டன.
அதன் பிறகு, கடந்த 1-ந் தேதி முதல் மாவட்டங்களுக்குள் மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. இந்த நிலையில், இன்று(திங்கட்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்து தொடங்கும் என்று அரசு அறிவித்தது. அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை என நீண்டதூர இடங்களுக்கு 1,100 பேருந்துகளை இயக்கி வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
மேலும் விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகங்களில் இருந்தும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து இன்று முதல் தொடங்குகிறது. இதில் சென்னையில் இருந்து மட்டும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 260 பேருந்துகள் உள்பட பிற அரசு போக்குவரத்து கழக பஸ்களையும் சேர்த்து 800 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதற்காக கோயம்பேடு பணிமனையில், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் மற்றும் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு, கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. மேலும், என்ஜின்கள், பேட்டரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. பேருந்துகளின் இருக்கைகளும் சரி செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அரசு பஸ்களில் முன்பதிவு விவரம் குறித்து அரசு விரைவு பஸ் போக்குவரத்து கழக அதிகாரி, "அரசு விரைவு பேருகளில் பயணம் செய்ய இதுவரை 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர். அதில், நாளை (இன்று) மட்டும் பயணம் செய்ய 4 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். பயணிகளின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும். நள்ளிரவு 12 மணி முதல் பஸ்கள் இயக்கப்படும். ஆனால், பயணிகள் வந்தால் மட்டுமே பஸ்கள் இயக்கப்படும்.பெரும்பாலும், கோயம்பேட்டில் இருந்து தலா 24 பயணிகளுடன் பேருந்துகள் புறப்படும். சமூக இடைவெளியை கடைபிடித்து பஸ்சில் இருக்கைகள் இருந்தால் நடுவழியில் பயணிகள் ஏற்றிக் கொள்ளப்படுவார்கள்," என்று தெரிவித்தார்.
இந்து தமிழ் திசை: குழந்தைகள் மீதான பாலியல் குற்றம் பல மடங்கு அதிகரிப்பு

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் பல மடங்கு அதிகரித்து வருவது தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது என்கிறது இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி.
"2013-ம் ஆண்டுக்கு பிறகு ஆண்டுக்கு சராசரியாக 16 குற்றங்கள் வழக்குகளாக பதியப்பட்டுள்ளன. 2019-ல் இது 25 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் அல்லாத இடங்களிலும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் மிக அதிகமாகி உள்ளன.
அதாவது, 2013-ம் ஆண்டு 419 ஆக இருந்த பதியப்பட்ட பாலியல் குற்றங்கள், 2014-ல் 1,055 ஆக உயர்ந்துள்ளது. இது 2015-ல் 1,546 ஆகவும் 2016-ல் 1,585 ஆகவும் 2018-ல் 2,052 ஆகவும் 2019-ல் 2,410 ஆகவும் அதிகரித்து வருவது ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த ஆண்டில் ஜூலை வரை 2000-க்கும் மேற்பட்ட பாலியல் குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளன," என்று தகவல் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்கள் கூறுவதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
பாலியல் குற்றங்கள் பெண் குழந்தைக்குதான் நடக்கும் என்பது தவறு. இந்தியா போன்ற நாடுகளில் பாலியல் குற்றங்களை 30 சதவீத ஆண் பிள்ளைகளே எதிர்கொள்கின்றனர் என்று பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு செய்துவரும் சமூக ஆர்வலர் வி.முருகேசன் கூறியதாகவும் விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
தினமணி: கேரள நிதி அமைச்சருக்கு கொரோனா

பட மூலாதாரம், Getty Images
கேரள நிதியமைச்சர் எம். தாமஸ் ஐசக்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநில நிதியமைச்சர் எம். தாமஸ் ஐசக். இவருக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தாமஸ் ஐசக்கிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவரது அலுவலக ஊழியர்களும் ஆன்டிஜென் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
ஆனால் அவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. அதேசமயம் அமைச்சருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் அமைச்சரின் அலுவலகம் கிருமி நாசினி கொண்டு நாளை சுத்தம் செய்யப்பட உள்ளது.
கேரள அமைச்சரவையில் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












