கொரோனா வைரஸ் பரிசோதனை: 'இறந்துபோன வைரஸ்களை கணக்கில் காட்டும் பி.சி.ஆர் டெஸ்ட்'

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரேச்சல் ஷ்ரேயர்
- பதவி, பிபிசி
கொரோனா வைரஸை கண்டறிய நடத்தப்படும் பிசிஆர் பரிசோதனை மிகவும் உணர்திறன் மிக்கது என்றும், அது இறந்த வைரஸ்களையும் கணக்கில் கொள்ள கூடும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பெரும்பாலான நோயாளிகளுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஒரு வாரத்திற்கு மட்டுமே இருந்தாலும், அவர்கள் ஒரு வாரத்திற்கு பிறகு நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளும்போது தொற்று இருப்பதாக முடிவு வருகிறது.
இதன் காரணமாக, கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் அளவுக்கு அதிகமாக கணக்கிடப்பட்டு வரலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் சில வல்லுநர்கள், பிசிஆர் பரிசோதனையை விட நம்பகமான பரிசோதனை முறையை உருவாக்க முடியும் என்பது நிச்சயமற்றது என்று கூறுகின்றனர்.
இதுதொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் குழுவை சேர்ந்த பேராசிரியர் கார்ல் ஹெனேகன், நோய்த்தொற்று பரிசோதனை என்பது வெறும், "ஆம்/ இல்லை" என்ற முடிவை கொடுக்கும் வகையில் இல்லாது, வைரஸின் செறிவை காண்பிக்க கூடியதாக இருக்க வேண்டும். இதன் மூலம், மிக குறைந்த அளவிலான வைரஸினால் நோய்த்தொற்று உள்ளதாக முடிவுகள் கிடைப்பதை தவிர்க்க முடியும் என்கிறார்.
இறந்த வைரஸின் இருப்பை அடையாளம் காண்பதன் மூலம், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை சீராக இருந்தபோதிலும், நோய்த்தொற்றுப் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணத்தை பகுதியளவு தெரிந்துகொள்ள முடியுமென்று அவர் கூறுகிறார்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி குழுவொன்று, நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் 25 வைரஸ் மாதிரிகளை ஆய்வகத்தில் கொண்டு அது வளருகிறதா என்று பரிசோதித்தனர்.
'வைரல் கல்ச்சர்' எனப்படும் இந்த வைரஸ் வளர்ப்பு முறையின் மூலம் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட பரிசோதனைகளில் பரவக்கூடிய வைரஸ்களை கொண்டு மட்டும் முடிவுகள் தெரியவந்தனவா அல்லது ஆய்வகத்திலோ அல்லது மனிதரிலோ வளராத இறந்துபோன வைரஸ்களும் கணக்கில் கொள்ளப்பட்டனவா என்பது குறித்து தெரியவரும்.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று எப்படி உறுதிசெய்யப்படுகிறது?
கொரோனா வைரஸின் மரபுப்பொருளை ரசாயனத்தை கொண்டு பெரிதுபடுத்தி அதை உறுதிசெய்யும் பிசிஆர் என்னும் சோதனையே கோவிட்-19 நோய்த்தொற்றை கண்டறியும் வழியாக உள்ளது.
ஆனால், இந்த பரிசோதனையின் மூலம் நோய்த்தொற்று பாதிப்பு உள்ளதா, இல்லையா என்ற கேள்விக்கு "ஆம் அல்லது இல்லை" என்ற பதில் கிடைக்கிறதே தவிர, பரிசோதனை மாதிரியில் எவ்வளவு வைரஸ் இருந்தது என்றோ அல்லது அது பரவக்கூடிய நிலையில் இருக்கிறதா என்றோ தெரியவதில்லை.

பட மூலாதாரம், Getty Images
அதாவது, தற்போதுள்ள பரிசோதனை முறையில் உள்ள பிரச்சனை என்னவென்றால், பரவும் நிலையில் உள்ள அதிகப்படியான வைரஸ்களை உடலில் கொண்ட ஒருவருக்கும், ஏற்கனவே நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு குணடைந்து இறந்த நிலையில் உள்ள வைரஸின் சிறு பகுதிகளை உடலில் கொண்டவருக்கும் என இவருக்குமே "ஆம்" என்ற முடிவு கிடைக்கிறது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து நோய்த்தொற்று பரவும் வீதம் அவர் பாதிக்கப்பட்டதிலிருந்து ஒரு வாரத்திற்கு பிறகு குறைவதை ஆதாரங்கள் வெளிக்காட்டுவதாக பேராசிரியர் ஹெனேகன் கூறுகிறார்.
ஆனால், நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் அனைவருக்கும் பரவக்கூடிய நிலையில் வைரஸ் உள்ளதா என்பதை உறுதிசெய்வது இயலாத காரியம் என்று கூறும் அவர், இந்த சிக்கலான முடிவை எடுப்பதற்குரிய ஒரு வழியை விஞ்ஞானிகள் கண்டறிந்தால், தவறான நோய்த்தொற்று பரிசோதனை முடிவுகளை தவிர்க்க முடியுமென்று குறிப்பிடுகிறார்.
இதன் மூலம், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவருக்கு நோய்பாதிப்பு உள்ளதாக தவறான பரிசோதனை முடிவுகள் கிடைப்பதை தவிர்க்க முடியும்.
இதன் மூலம், தேவையற்ற வகையில் மக்களை அதிக நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதை தவிர்ப்பதோடு, கொரோனாவின் உண்மையான பாதிப்பின் அளவை கண்டறிய முடியும் என்று பேராசிரியர் ஹெனேகன் மேலும் கூறுகிறார்.
கொரோனா வைரஸ் சோதனைகளின் முடிவுகளை மதிப்பிடுவதற்கு வைரஸ் வளர்ப்புமுறை ஒரு பயனுள்ள வழி என்று ஒப்புக்கொண்டுள்ள இங்கிலாந்து பொது சுகாதார அமைப்பு, சமீபத்தில் இந்த வழியில் தாங்கள் பகுப்பாய்வை மேற்கொண்டதாக தெரிவித்தது.
தவறான பரிசோதனை முடிவுகளின் அபாயத்தைக் குறைக்க தாங்கள் ஆய்வகங்களுடன் இணைந்து செயல்படுவதாகவும், ஆனால் வேறுபட்ட பரிசோதனை கருவிகள் பயன்பாட்டில் உள்ளதால், இதில் ஒருமித்த முடிவுக்குவர முடியவில்லை என்று அது மேலும் கூறியது.
ஆனால், நோயாளி ஒருவரின் பரிசோதனை மாதிரியில் இருந்து பெறப்பட்ட வைரஸை ஆய்வகத்தில் வளர்ப்பது என்பது "பொருத்தமான வழியல்ல" என்று ரீடிங் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் பென் நியூமேன் கூறுகிறார்.
கடந்த மார்ச் மாதத்தில் வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியின் எமிலியா-ரோமக்னா பிராந்தியத்தை சேர்ந்த தொற்றுநோயியல் வல்லுநரான பேராசிரியர் பிரான்செஸ்கோ வென்ச்சுரெல்லி, நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உடலிலுள்ள வைரஸ் எத்தனை நாட்களுக்கு பரவும் தன்மையுடன் இருக்கிறது என்பது குறித்து "உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இல்லை" என்று கூறுகிறார்.
இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வுகளில், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 10 சதவீத நோயாளிகளுக்கு நோய்ப்பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து எட்டு நாட்களுக்கு பிறகும்கூட வைரஸ் பரவக்கூடிய நிலையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
பிரிட்டனுக்கு முன்பே கொரோனா பாதிப்பில் உச்சத்தை அடைந்த இத்தாலியில், பலருக்கு நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு குணமான பின்னரே நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதால், "பல வாரங்களுக்கு அளவுக்கு அதிகமாக நோய்த்தொற்று பாதிப்புகள் பதிவாகின."
லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் பேராசிரியர் பீட்டர் ஓபன்ஷா, பி.சி.ஆர் பரிசோதனை மிகவும் உணர்திறன் வாய்ந்த "மீதமுள்ள வைரஸ் மரபணு பொருளைக் கண்டறியும் முறை" என்றும் "இது நோய்த்தொற்றுக்கான சான்று அல்ல" என்றும் அவர் கூறுகிறார்.
ஆனால் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் நோய்ப்பாதிப்பு ஏற்பட்ட பத்து நாட்களுக்கு மேல் பரவக்கூடிய வைரஸ்களை கொண்டிருப்பதில்லை என்ற கருத்தை பெரும்பாலான மருத்துவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












