விநாயகர் சதுர்த்தி: வீடுகளில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க உயர் நீதிமன்றம் அனுமதி

பட மூலாதாரம், Getty Images
வீடுகளில் வைத்து வழிபடப்படும் விநாயகர் சிலைகளை மெரினா கடற்கரை தவிர்த்த பிற நீர்நிலைகளில் கரைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பொது இடங்களில் சிலைகளை வைக்கவும் ஊர்வலமாகச் செல்லவும் தடை நீடிக்கும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவிருக்கிறது. இந்த நிலையில், ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி தொடர்பாக சில கட்டுப்பாடுகளை விதித்தது.
அதன்படி, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் ஊர்வலமாகச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், கொரோனா ஊரடங்கு காரணமாக விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கவும் ஊர்வலமாக அவற்றை எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்தத் தடையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
நேற்று நீதிபதிகள் சுந்தரேஷ் - ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பாக இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஐந்தாறு நபர்களாகச் சென்று விநாயகர் சிலைகளைக் கரைக்க அனுமதி தர முடியுமா என அரசுத் தரப்பு பதிலளிக்கும்படி கூறி வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.
இன்று இந்த வழக்கில் அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி பதிலளித்தார். அப்போது இது தொடர்பாக ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த வழக்கு ஒன்றில், தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் செல்லும் என்று கூறப்பட்டிருப்பதாக விஜயநாராயணன் சுட்டிக்காட்டினார்.

பட மூலாதாரம், Getty Images
மேலும், 500 பேராகச் சென்று விநாயகர் சிலைகளைக் கரைக்கலாமா என கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு, "ஊர்வலமாகச் சென்று கரைப்பதற்குத்தான் தடை; தனி மனிதர்களாக சென்று கரைக்கத் தடையில்லை" என்று விஜயநாராயணன் தெரிவித்தார்.
ஆனால், மெரினா போன்ற கடற்கரைகளில் சிலைகளை கரைக்க அனுமதிக்க முடியாது என்றும் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், பேரிடரை கருத்தில் கொண்டே தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பாக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என்றும் கூறியது. ஆனால், தனிநபர்கள் வழிபடவோ, வீடுகளில் வழிபட்ட விநாயகர் சிலையை நீர்நிலைகளில் கரைக்கவோ தடை இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதேசமயம், விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க நினைக்காமல் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்து இந்த வழக்கை முடித்து வைத்தனர்.
பிற செய்திகள்:
- ரஷ்யா: விஷம் கொடுக்கப்பட்டதாக சந்தேகம் - கோமா நிலையில் எதிர்கட்சி தலைவர்
- தமிழ் வழியில் படித்து நாசாவின் தலைசிறந்த விஞ்ஞானியான மெய்யப்பனின் வெற்றிக்கதை
- 2ஜி: மீண்டும் விறுவிறுப்படையும் மேல்முறையீட்டு வழக்கு - அரசியல் தாக்கம் ஏற்படுமா?
- தனது சகோதரிக்கு பொறுப்புகளை பகிர்ந்தளித்துவிட்டாரா கிம் ஜாங்-உன்?
- சௌதி அரேபியா - பாகிஸ்தான் இடையே மோதல்: இந்தியா ஏன் காரணமாகிறது?
- சென்னையில் போலீஸ் என்கவுன்டரில் ஒருவர் சுட்டுக் கொலை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












