சௌதி அரேபியா - பாகிஸ்தான் இடையே மோதல்: இந்தியா ஏன் காரணமாகிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஷுமைலா ஜாஃப்ரி
- பதவி, பிபிசி உருது, இஸ்லாமாபாத்
சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கடந்த ஆண்டு பாகிஸ்தான் வந்தபோது "முகமது பின் சல்மான் பாகிஸ்தானில் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெற்றுவிடுவார்; அந்த அளவுக்கு அவர் இங்கு பிரபலமாக உள்ளார்," என்று பாகிஸ்தானஅ பிரதமர் இம்ரான் கான் கூறினார்.
பாகிஸ்தானில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை போலவே, நட்புறவுடன் பதிலளித்த முகமது பின் சல்மான், "பாகிஸ்தான் மக்கள் தன்னை 'சௌதி அரேபியாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் தூதராக கருதிக் கொள்ளலாம்" என்று கூறினார்.
சௌதி பட்டத்து இளவரசரின் பாகிஸ்தான் பயணத்தின்போது 20 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மோசமான பாதிப்பை எதிர் கொண்டிருந்த பாகிஸ்தான் பொருளாதாரத்துக்கு இவை மிகவும் உதவிகரமாக இருந்தன.
இதைத் தொடர்ந்து சௌதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு உறவில் புதிய தொடக்கம் ஏற்பட்டதாக கருதப்பட்டது.
காஷ்மீர் கருத்தால் சர்ச்சை
அவரது பயணத்துக்கு 18 மாதங்களுக்கு பின்னர், அதாவது இந்த மாத தொடக்கத்தில், ஜம்மு-காஷ்மீருக்கு இந்திய அரசு வழங்கிய சிறப்பு மாநில அந்தஸ்தை நீக்கியதன் முதலாம் ஆண்டு பாகிஸ்தானில் அனுசரிக்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சியின்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி காஷ்மீர் விவகாரத்தில் சௌதி அரேபியா , இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என வெளிப்படையாகவே விமர்சித்தார்.
"சௌதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவு இருக்கிறது. மெக்கா மற்றும் மதினாவில் புனிதத்தை பாதுகாப்பதற்காக பாகிஸ்தானியர்கள் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். நமது நட்பு நாடான சௌதி அரேபியாவிடம் ஒன்றை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உங்களுக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் பாகிஸ்தான் முஸ்லிம்கள், காஷ்மீர் விவகாரத்தில் நீங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள். பாகிஸ்தான் முஸ்லிம்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ அதை நீங்கள் செய்ய வேண்டும். அதை சௌதி அரேபியா செய்யாவிட்டாலும், நம்மால் காத்துக் கொண்டிருக்க முடியாது என நான் இம்ரானிடம் கூற வேண்டியிருக்கும். நாம் சௌதி உடனோ சௌதி இல்லாமலோ முன் நகர்ந்து சென்றாக வேண்டும்," என்று அவர் கூறினார்.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் வெளிப்படையான இந்தப் பேச்சு வெளியுறவு வட்டாரங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
'அது அவரது சொந்தக் கருத்து'
சௌதி அரேபிய அரசு மட்டுமல்ல பாகிஸ்தானில் இருக்கும் சௌதி அரேபிய ஆதரவாளர்களும் இந்த பேச்சை விரும்பவில்லை.

பட மூலாதாரம், PAK PM OFFICE
சில அரசியல்வாதிகள், மதக் குழுக்கள் மற்றும் ஊடகங்கள் இவை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் சொந்தக் கருத்து என்று கூறின.
ஆனால் சிலரோ இதைப் பிரிவினைவாத குழுக்களின் 'லாபியின் தாக்கம்' என்று கூறினர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சௌதி அரேபிய அரசுடன் பாகிஸ்தானுக்கு எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லை என்றும் நெருக்கமான நட்புறவு நீடிப்பதாகவும் கூறினார்.
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வெளியுறவுக்கொள்கை இருக்கும். சௌதி அரேபிய அரசுக்கும் அவர்களுக்கென்று ஒரு வெளியுறவுக்கொள்கையை இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கான சௌதி அரேபிய தூதர் நவாஸ் சையித் அல் மாலிக்கி, பாகிஸ்தானில் உள்ள தனது நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களை தொடர்பு கொண்டு நிலைமையை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.
அவற்றில் முக்கியமானது, அவர் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வாவை ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமையகத்தில் சந்தித்து பேசியது.
இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு - சௌதி - மலேசியா
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி, இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பையும் (ஓஐசி) விமர்சித்துப் பேசி இருந்தார். இந்த கூட்டமைப்புக்கு அதிக அளவில் நிதி வழங்குபவராக சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது முதல் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்ட பாகிஸ்தான் முயன்று வருகிறது. இதுவரை அந்த முயற்சி பலனளிக்கவில்லை.
"இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்புக்கு பணிவுடன் நான் ஒன்றைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை உங்களால் கூட்ட முடியவில்லை என்றால் கஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டத்தை இந்த கூட்டமைப்பின் மூலமாகவோ அல்லது இதற்கு வெளியிலோ கூட்டவேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமரிடம் நான் கூறுவேன்," என்று அவர் கூறியிருந்தார். துருக்கி மற்றும் மலேசியாவையே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
டிசம்பர் 2012 இல் கோலாலம்பூரில் நடைபெற்ற இஸ்லாமிய நாடுகளின் உச்சி மாநாட்டில் அப்போதைய மலேசியப் பிரதமர் மகாதீர் முகமதுவின் அழைப்பின் பெயரில் இம்ரான்கான் கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் துருக்கி, இந்தோனீசியா, கத்தார், பாகிஸ்தான் உள்ளிட்ட ஒத்த கருத்துடைய இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்புக்கு வெளியே சௌதியின் தலையீடு எதுவும் இல்லாமல் முஸ்லிம் நாடுகள் ஒன்று சேர்ந்து ஓர் அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சியாக இது பார்க்கப்பட்டது.
தொடக்கத்தில் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் திடீரென இதில் இருந்து விலகினார். இதற்கு காரணம், சௌதி அரேபியா தந்த அழுத்தம்.
தங்கள் தலைமை இல்லாமல் அரசியல் ரீதியாகவோ, அயலுறவு ரீதியாகவோ, ராணுவ ரீதியாகவோ பாகிஸ்தான் போன்ற ஒரு பெரிய இஸ்லாமிய நாடு வேறு அமைப்பில் இருப்பதை சௌதி அரேபியா விரும்பவில்லை.
சௌதி அரேபியாவின் அழுத்தத்தின் பெயரிலேயே கோலாலம்பூர் உச்சி மாநாட்டிலிருந்து விலகும் முடிவை எடுத்ததாக குரேஷி கூறினார்.
"சௌதி அரேபியா எங்களை அதிலிருந்து விலக வற்புறுத்தியது. கனத்த இதயத்துடன் இதை நாங்கள் மலேசியாவிடம் விளக்க முற்பட்டோம். இதை எதிர்மறையாக எடுத்துக் கொள்ளாமல் எங்களுடைய கட்டாயங்கள் மற்றும் பிரச்சனைகளை புரிந்து கொண்ட மகாதீர் முகமதுவுக்கு நான் எனது மரியாதையை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.
காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறதா இல்லையா என்பதை முடிவு செய்து தெளிவாக கூற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் கருத்து தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள அந்நாட்டு வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர், கடந்த காலங்களில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு பாகிஸ்தானுக்கு ஆற்றிய பங்கு குறித்து பாராட்டிப் பேசினார்.
"இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பிடம் பாகிஸ்தான் மக்கள் அதிக எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச அளவில் இந்த அமைப்பு முக்கிய பங்காற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். இதுதொடர்பான எங்களது முயற்சிகள் தொடரும்; இதில் முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகிறோம் " என்று அவர் தெரிவித்தார்.
சௌதி அரேபியா, இந்தியா மற்றும் அமெரிக்கா
சௌதி அரேபியா குறிப்பாக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவான நிலையில் இருப்பது தெளிவானது என்றும் அதில் வியப்பேதும் இல்லை என்றும் கூறுகிறார் பகுப்பாய்வாளர் கினா மேர்.

பட மூலாதாரம், Getty Images
"சௌதி அரேபியா மற்றும் இந்தியா இடையே வலிமையான வர்த்தக உறவு இருக்கிறது. சௌதி அரசு பாகிஸ்தானுடன் செய்யும் வர்த்தகத்தைவிட இந்தியாவுடன் செய்யும் வர்த்தகத்தின் அளவு அதிகம். இஸ்லாமிய சமுதாயம் மற்றும் பிறர் என இரு துருவங்களாக இந்த உலகம் இப்போது பிரிந்திருக்கவில்லை."
"ஒவ்வொரு நாடும் புதிய கூட்டணியை உருவாக்கும், தங்கள் தேச நலனுக்கு ஏற்ற கொள்கைகளை வகுக்கும் 'பல துருவ உலகமாகவே' தற்போது இந்த உலகம் இருக்கிறது. இந்த சூழலில் சௌதியின் அடையாளம் என்பது இஸ்லாமியர்களின் புனித தலங்களை பாதுகாக்கும் நாடாக உள்ளது என்பது மட்டுமே. அமெரிக்கா மற்றும் இந்தியாவுடனான வர்த்தக உறவுகள்தான் சௌதி அரேபியாவின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய தூணாக இருக்கும்," என்று அவர் கூறுகிறார்.
சௌதி அரேபியா உடனான கொள்கையையும் பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிறார் கினா.
"இதன் காரணமாகத்தான் இரான் போன்ற பிற நாடுகளுடன் பாகிஸ்தானால் நல்லுறவை கட்டமைக்க முடியவில்லை. மத்திய கிழக்கு நோக்கி செல்வதைவிட, தாம் இருக்கும் பிராந்தியத்தில் இருக்கும் நாடுகளுடன் இணைந்து இருப்பதை நோக்கியே பாகிஸ்தான் அரசு செயல்பட வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.
சீனா - இரான் தொடர்பு என்ன?
காஷ்மீர் பிரச்சனை மட்டுமல்லாமல், சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை (China - Pakistan Economic Corridor), இரானின் சபாகர் துறைமுகம் வரை நீட்டித்ததில் பாகிஸ்தானின் பங்கும் சௌதி அரேபியா உடனான பிரச்சனைக்கு ஒரு காரணமாக இருக்கிறது என்று பல அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
சபாகர் ரயில்வே திட்டம் இந்தியாவின் உதவியுடன் இரானால் கட்டமைக்கப்பட்டு வந்தது.

பட மூலாதாரம், EPA
ஆனால் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திட்டத்திலிருந்து இரான் இந்தியாவை விலக்கியது. பாகிஸ்தானின் முயற்சிகளை தொடர்ந்து சீன மற்றும் இரான் அரசுகளிடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்படி சபாகர் ரயில்வே திட்டத்தில் சீனா முதலீடு செய்யும். இந்தத் திட்டத்தில் இருந்து இந்தியா விலகி இருந்தால் தனது வர்த்தக மற்றும் அரசியல் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று பாகிஸ்தான் கருதுகிறது.
"இரான் மற்றும் சௌதி அரேபியா ஆகிய நாடுகள் கொள்கை ரீதியாக எதிரிகள். யேமன் முதல் சிரியா வரை அவர்கள் நேரடியாக பங்கேற்காத போர்களை நடத்தி வருகின்றனர். இரான் மற்றும் சீனா இடையிலான இந்த ஒப்பந்தம் சௌதி அரேபியாவுக்கு நிச்சயமாக பின்னடைவாகவே இருக்கும்," என்கிறார் அரசியல் விமர்சகர் டாக்டர் ரிஸ்வான் நசீர்.
அமெரிக்கா இரான் மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. எனவே சீனாவின் 'ஒரு பிராந்தியம் ஒரு சாலை திட்டம்' (One Belt and One Road) வலிமை அடைவதை அமெரிக்காவும் அதன் நட்பு நாடான சௌதி அரேபியா விரும்பாது என்று அவர் கூறுகிறார்.
தனது நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பாகிஸ்தான் இந்த திட்டத்திற்கு உதவியிருக்கிறது. ஆனால் சௌதி அரேபியாவின் கூட்டணியை நாடுகளான அமெரிக்கா மற்றும் இந்தியா இதை சகித்துக் கொள்ளாது என்று அவர் கூறுகிறார்.
இதன் காரணமாகத்தான் பாகிஸ்தானுக்கு சௌதி அரேபியா 2018ல் கடனாக வழங்கிய 3 பில்லியன் டாலர் தொகையை முன்கூட்டியே திரும்பி கேட்பதாக சில வல்லுநர்கள் கருதுகிறார்கள். சீனாவின் உதவியுடன் ஒரு பில்லியன் டாலர் பணத்தை தற்போது பாகிஸ்தான் திரும்ப வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் தலையீடு

பட மூலாதாரம், KBSALSAUD
பாகிஸ்தான் தனது வெளிநாட்டு கடன்களை தவறாமல் கட்டுவதற்காக 2018ம் ஆண்டு 6.2 பில்லியன் டாலர் தொகையை சௌதி அரேபியா வழங்கியது.
இதில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவேத் பஜ்வா முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது. இப்போது இரு நாடுகளுக்கிடையே இருக்கும் கோபத்தை தணிப்பதில் ராணுவம் தலையீடு செய்துள்ளது.
சௌதி அரேபிய தூதரைச் சந்தித்த பின்பு பாகிஸ்தானின் ராணுவ தளபதி பாஜ்வா ரியாத்துக்கு பயணம் மேற்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இது பாதுகாப்பு ஒத்துழைப்புகான வழக்கமான பயணம்தான் என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
"இஸ்லாமிய உலகில் சௌதி அரேபியாவின் முக்கியத்துவம் குறித்து எந்த சந்தேகமும் இல்லை. பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரு நாட்டு மக்களின் இதயங்களிலும் ஒன்றாகவே துடிக்கின்றன. இந்த உறவை கேள்வி எழுப்புவதற்கான தேவையே இல்லை," என்று பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சௌதி - பாகிஸ்தான் மக்களுக்கு பிடித்த நாடு
சௌதி அரேபியாவில் இஸ்லாமியர்களின் புனித தலங்கள் அமைந்திருப்பதாலும் பாகிஸ்தானுக்கு பொருளாதார ரீதியான உதவிகளை சௌதி அரேபியா வழங்கி வருவதால் பாகிஸ்தான் மக்களின் மனதில் சௌதி அரேபியாவுக்கு என்று ஒரு தனி இடம் இருப்பதாக வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
சௌதி அரேபியா நேரடியாக ஈடுபடாவிட்டாலும், மத்திய கிழக்கில் ஈடுபடும் மறைமுகப் போரில் பாகிஸ்தானின் ராணுவ ஒத்துழைப்பும் தேவை.
பாகிஸ்தான் ராணுவத் தளபதியின் சௌதி அரேபிய பயணம் தற்போதைக்கு இரு நாடுகளிடையே இடையில் நீடிக்கும் பிரச்சனையை தவிர்க்க தற்காலிகமாக உதவலாம்.
பொறுப்பற்ற வகையில் பேசியதால் குரேஷி வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தானில் உள்ள சௌதி அரேபிய ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், சிந்திக்காமல் அவ்வாறு அவர் சொல்லி விட்டாரா அல்லது திட்டமிட்டு வேண்டுமென்றே கூறினாரா என்று தெரியவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












