கிம் ஜாங்-உன் தனது சகோதரிக்கு பொறுப்புகளை பகிர்ந்தளித்துவிட்டாரா?

பட மூலாதாரம், JORGE SILVA
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தனது சகோதரி கிம் யோ-ஜாங் உட்பட அவரது உதவியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகளை கொடுத்துள்ளதாக தென் கொரியாவின் உளவு அமைப்பு கூறுகிறது.
அதே சமயத்தில், கிம் வசமே நாட்டின் "முழுமையான அதிகாரம்" தொடருவதாகவும், ஆனால் அவர் தனது மனஅழுத்தத்தை குறைப்பதற்காக கொள்கை ரீதியிலான மற்ற பொறுப்புகளை மற்றவர்களிடத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிம்மின் சகோதரியே இப்போது "ஒட்டுமொத்த அரசு விவகாரங்களை வழிநடத்துகிறார்" என்று தென் கொரியாவின் தேசியப் புலனாய்வு அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
இருப்பினும், கடந்த காலங்களில் வட கொரியா குறித்து தென் கொரிய உளவு அமைப்பு வெளியிட்டிருந்த தகவல்கள் தவறானதாக இருந்துள்ளன.
தென் கொரிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இதுகுறித்த தகவல் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. பிறகு இதுகுறித்து தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்களிடம் கூறினர்.

பட மூலாதாரம், Getty Images
"கிம் ஜாங்-உன் தனது முழுமையான அதிகாரத்தை இன்னும் பராமரித்து வருகிறார். ஆனால் அவை சிறிது, சிறிதாக மற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன," என்று அந்த அமைப்பு கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் தென் கொரியா உடனான வட கொரியாவின் கொள்கை ரீதியிலான உறவை பராமரிக்கும் பொறுப்பை இப்போது கிம் யோ-ஜாங் ஏற்றுள்ளார். மேலும் அவர் "நாட்டின் இரண்டாம் நிலை நடைமுறை தலைவர்" என்ற நிலைக்கு வந்திருந்தாலும், அவரை கிம் இன்னும் "தனது வாரிசாக" தேர்ந்தெடுக்கவில்லை என்றும் தென் கொரிய உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
"பதவியின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை நீக்கவும், கொள்கை ரீதியிலான தோல்வி ஏற்பட்டால் குற்றஞ்சாட்டப்படுவதை தவிர்க்கவும்" இதுபோன்று பொறுப்புகளை மற்றவர்களுக்கு அளிக்கும் முடிவுக்கு கிம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், சில ஆய்வாளர்கள் தென் கொரிய உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவல் மீது சந்தேகம் கொண்டுள்ளனர். இந்த நிலையில், இந்த மாதத்தில் நடந்த இரண்டு முக்கியமான கூட்டங்களில் கிம் யோ-ஜாங் பங்கேற்கவில்லை என்று தவகல்கள் தெரிவிப்பதாகவும், இதனால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளதாகவும் என்.கே.நியூஸ் செய்தித்தளம் தெரிவித்துள்ளது.
மூன்று கிம்கள்...

பட மூலாதாரம், BRENDAN SMIALOWSKI
கிம் ஜாங்-உன்னுக்கு அடுத்து வட கொரியாவில் ஆட்சி நிர்வாகத்துக்கு வரக் கூடிய நிலையில் அவருடைய குடும்பத்தில் 3 பேர் உள்ளனர். குடும்ப ஆட்சியைத் தொடர்வதில் அவர்கள் எல்லோருக்கும் வரம்புகள் இருக்கின்றன.
முதலாவது நபரான கிம் யோ-ஜாங், இப்போதைய அதிபர் கிம் ஜோங்-உன் உடைய தங்கை. விஷயங்களை வேகமாகப் புரிந்து கொள்வது, அரசியலில் ஆர்வம் காட்டும் பாங்கு ஆகிய குணங்கள் இவருக்கு இளவயதிலேயே வந்துவிட்டது என்று அவருடைய தந்தையே குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய பாணி செயல் திறன் மிக்கதாக, மிதவாத அணுகுமுறையாக, கவனித்து செயல்படக் கூடியதாக இருப்பதாகக் கருதப்படுகிறது. தன் அண்ணனுடன் மிக இணக்கமான உறவைப் பராமரிக்கிறார் இவர்.
சிங்கப்பூரில் டிரம்ப் - கிம் சந்திப்பு நடந்தபோது, கையெழுத்திடுவதற்கு பேனாவை இந்தப் பெண் தான் கிம்மிடம் கொடுத்தார். அடுத்து ஹனோய் மாநாட்டில், பின்வரிசையில் இருந்த அவர், தன்னுடைய அண்ணன் மிடுக்கான தோற்றத்துடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த போது முன்னால் வந்து நின்றார்.
ஆனால் ஹனோய் உச்சி மாநாட்டுக்குப் பிறகு அவர் தற்காலிகமாக பதவி இறக்கம் செய்யப்பட்டார். அந்த மாநாடு வெற்றிகரமாக அமையவில்லை என்பது தான் அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டாலும், அதை உறுதி செய்ய முடியவில்லை. ஆட்சி நிர்வாகத்தின், அரசாங்க விவகார கமிஷனில் அவர் இடம் பெறவில்லை.
பொலிட் பீரோவில் மாற்று உறுப்பினராக இருக்கிறார். கொரிய உழைப்பாளர் கட்சியின் கொள்கைபரப்பு மற்றும் போராட்டப் பிரிவின் துணை இயக்குநராக இருக்கிறார். இவை புரிந்து கொள்ள முடியாத விஷயங்களாகத் தோன்றலாம். ஆனால் கொள்கைபரப்பு மற்றும் போராட்டப் பிரிவு என்பது ஆட்சி அமைப்பில் கொள்கை அளவிலான முடிவுகளை உறுதி செய்வதாக உள்ளது.

பட மூலாதாரம், Reuters
ஆணாதிக்க ஆட்சி முறை வேரூன்றி இருக்கும் வட கொரியாவில், ஒரு பெண்ணாக அவரால் தலைமைப் பதவியை வகிக்க முடியுமா என்பது கேள்விக்குறியதாக இருக்கிறது. சர்வ வல்லமை படைத்த அதிபர், ராணுவத்துக்கு தலைமை ஏற்கக் கூடியவர் என்ற பொறுப்புகள், பெண்களுக்கு சரிப்பட்டு வரும் என்று அந்த மக்கள் ஏற்பார்களா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
கிம் குடும்பத்தில் உள்ள இரண்டாவது நபர் கிம் ஜோங்-ச்சுல். இவர் கிம் ஜாங் உன்னின் அண்ணன். ஆனால் அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் இவர் ஒருபோதும் ஆர்வம் காட்டியது இல்லை. (அவருக்கு கித்தார் இசைக் கலைஞர் எரிக் கிளாப்டன் மீது மட்டும் பிரியம் உண்டு). அதிகபட்சமாக, கிம் குடும்பத்தின் அடையாளபூர்வமான தொடர்பில் வருபவர் என்பவராக இவரை சொல்லலாம். குழு அமைப்பின் தலைவராக இவரை வைத்துக் கொண்டு, எப்போதாவது உரைகளை வாசிக்கும் பொறுப்பில் வைத்துக் கொள்ளலாம்.
கிம் குடும்பத்தில் உள்ள மூன்றாவது நபர் கிம் பியோங்-இல். இவர் கிம் ஜோங்-இல் -ன் ஒன்றுவிட்ட சகோதரர். கிம் ஜோங்-இல்லின் மாற்றாந்தாயான, கிம் பியோங்-இல் -ன் தாயார், கிம் இல்-சுங்கிற்கு அடுத்து தனது மகன் தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பினார். ஆனால் கிம் ஜோங்-இல் செல்வாக்கு காரணமாக அவருக்கு அது சாத்தியப்படாமல் போயிற்று.
1979ல் கிம் பியோங்-இல் ஐரோப்பாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தூதரக பொறுப்புகள் பலவற்றை அவர் வகித்துள்ளார். கடந்த ஆண்டு தான் அவர் வட கொரியா திரும்பினார். நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றக் கூடிய அளவுக்கு அவருக்கு செல்வாக்கு இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
பிற செய்திகள்:
- தமிழ் வழியில் படித்து நாசாவின் தலைசிறந்த விஞ்ஞானியான மெய்யப்பனின் வெற்றிக்கதை
- 2ஜி: மீண்டும் விறுவிறுப்படையும் மேல்முறையீட்டு வழக்கு - அரசியல் தாக்கம் ஏற்படுமா?
- தங்க வேட்டை: ஒரே நாளில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள் கண்டுபிடிப்பு
- எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை: சமீபத்திய மருத்துவ அறிக்கை என்ன?
- கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளருக்கு தகுதியற்றவரா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












