அலெக்ஸே நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக சந்தேகம்: கோமா நிலையில் ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர்

பட மூலாதாரம், Reuters
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரும், அதிபர் விளாடிமிர் புதினின் தீவிர விமர்சகருமான அலெக்ஸே நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகவும், அதனால் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலெக்ஸே உடலில் விஷம் கலந்திருக்கலாம் என்று அவரது செய்தித்தொடர்பாளரான யர்மிஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ரஷ்யாவின் டாம்ஸ்க் நகரிலிருந்து தலைநகர் மாஸ்கோவிற்கு விமானத்தில் சென்றுகொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கிய நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த விமானம் அவசரமாக சைபீரியாவின் ஓம்ஸ்க் நகரில் தரையிறக்கப்பட்டது.
இந்த நிலையில், சுயநினைவு இழந்த நிலையில் இருக்கும் அலெக்ஸே விமானத்திலிருந்து அவசர மருத்துவ ஊர்தியில் ஏற்றப்படும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மேலும், அதே விமானத்திலிருந்த சக பயணி ஒருவர் அலெக்ஸே வலியால் துடித்ததை தான் கேட்டதாக தெரிவித்துள்ளார்.
இதேபோன்று டாம்ஸ்க் விமான நிலையத்தில் அலக்ஸே தேநீர் அருந்துவதை போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகத்தில் பரவி வருகிறது.

பட மூலாதாரம், EPA
மருத்துமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அலெக்ஸேவுக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டிருப்பதாகவும், மேலும் அவர் கோமா நிலையில் உள்ளதாகவும் அவரது செய்தித்தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் அலெக்ஸேக்கு சொந்தமாக பொருட்களை பறிமுதல் செய்ததாக அவர் மேலும் கூறியுள்ளார்.
தனது கணவரை பார்க்க மருத்துவமனைக்கு வந்த யூலியாவை, உள்ளே அனுமதிக்க முதலில் மறுப்பு தெரிவித்த அதிகாரிகள், பிறகு அனுமதி வழங்கினர்.
இந்த நிலையில், அலெக்ஸின் உடல்நிலை குறித்த விவரங்களை வழங்குவதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுத்து வருவதாக அவரது தனிப்பட்ட மருத்துவர் அனஸ்தேசியா வாசிலியேவா கூறுகிறார்.
ஜெர்மனிக்கு அழைத்துச் செல்வதில் சிக்கல்

பட மூலாதாரம், Getty Images
அலெக்ஸேக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதை தொடர்ந்து, அவரை சைபீரியாவிலிருந்து ஜெர்மனியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என்று ரஷ்ய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சைபீரியாவில் அலெக்ஸேக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவ குழுவினரின் தலைமை மருத்துவர், அலெக்ஸேயை வேறொரு இடத்திற்கு அழைத்துச்செல்லும் நிலையில் அவரது உடல்நிலை இல்லை என்றும் மேலும் சட்ட ரீதியிலான சிக்கல்களை தீர்க்க வேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால், மருத்துவர்களின் இந்த முடிவு "அலெக்ஸேயின் உயிருக்கு நேரடி அச்சுறுத்தல்" என்று அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கு இடைப்பட்ட நேரத்தில், அலெக்ஸேயை ஜெர்மனிக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிப்பதற்காக தனி விமானத்தை அந்த நாட்டை சேர்ந்த செயல்பாட்டாளர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
நேற்று (வியாழக்கிழமை) விமான நிலையத்தில் அலெக்ஸே அருந்திய தேநீரில் இந்த நிலைக்கு காரணமான ஏதாவது கலக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் அவரது அணியினர், அவர் தொடர்ந்து சைபீரிய மருத்துவமனையிலேயே இருப்பது அவரது உயிருக்கு அச்சுறுத்தலாகலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் செய்தித்தொடர்பாளர், அலெக்ஸேயை வெளிநாடு அழைத்துசெல்வது அவசியமென்றால் அதற்கு தேவையான உதவி செய்யப்படும் என்றும் "அவர் விரைவில் குணமடைய வேண்டும்" என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












