சிவகாசியில் புது மணப்பெண் கொலை: தாய், மகன் உள்பட 3 பேர் கைது

தமிழ்நாட்டின் சிவகாசி அருகே ஒன்றரை சவரன் நகைக்காக புது மணப்பெண் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அருகே திருத்தங்கல் பெரியார் நகரை சேர்ந்தவர்கள் செல்வபாண்டியன் - பிரகதி மோனிகா தம்பதி.
இருவருக்கும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் திருமணமானது. இந்த நிலையில், கடந்த 8-ஆம் தேதி கணவர் செல்வபாண்டியன் வழக்கம்போல பட்டாசு ஆலைக்கு பணிக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த பிரகதி மோனிகா, பகல் 2 மணியளவில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்டதுடன் அவர் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தினர்.
பிறகு 3 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்த நிலையில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் வசித்து வரும் வீட்டின் எதிர்புறம் வசிக்கும் கோடீஸ்வரன் (20) மற்றும் அவரது நண்பர் டைசன் என்கிற சேகர் (19) ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் பிரகதி மோனிகாவை கொலை செய்து நகையை கொள்ளையடிக்க திட்டமிட்டாதாகவும், தங்களது திட்டம் தனது தாய் பரமேஸ்வரிக்கும் தெரியும் என கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரான கோடீஸ்வரன் ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து வீட்டில் இருந்த பரமேஸ்வரியை கைது செய்து மூன்று பேர் மீது கொலை, கூட்டுச்சதி, பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தியது, கொள்ளையடித்தது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சிவகாசி கிழக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த னர். பிறகு சிவகாசி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், கோடீஸ்வரன் மற்றும் டைசன் ஆகிய இருவரையும் அருப்புக்கோட்டை சிறைச்சாலையிலும், பரமேஸ்வரியை மதுரை மத்திய சிறைச்சாலையிலும் அடைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இந்த வழக்கை விசாரிக்கும் காவல் அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் கூறுகையில், "கோடீஸ்வரன் மற்றும் டைசன் ஆகிய இருவரிடம் நடத்திய விசாரணையில் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வரும் இவர்கள் பணி இல்லாததால் பண தேவைக்காக எதிர் வீட்டில் வசித்து வரும் புது மணப்பெண் பிரகதி மோனிகா தனிமையில் வீட்டில் இருந்த போது வீட்டுக்குள் சென்று அவரை கழுத்து அறுத்து கொலை செய்து விட்டு, அவரது ஒன்றரை சவரன் தாலி மற்றும் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடியதாக கூறினர்.
மேலும், இந்த கொலையில் கோடீஸ்வரன் தாய் பரமேஸ்வரிக்கும் தொடர்பு இருப்பதாக கூறியதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர். பின் கோடீஸ்வரன் வீட்டில் இருந்து அரிவாள் மற்றும் தங்கநகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்றார் காவல் அதிகாரி.
பிற செய்திகள்
பிற செய்திகள்:
- லெபனான் வெடிப்புச்சம்பவம்: பிரதமர் ஹஸ்ஸன் டியாப் அரசு கூண்டோடு விலகல்
- அயோத்தி ராமர் கோவில் அடிக்கல்: மோதியின் இந்துத்துவ தோற்றம் மேலும் வலுவடையுமா?
- பாகிஸ்தான் வரைபடத்தில் குஜராத்தின் ஜுனாகத் பகுதி: இம்ரான் கான் அரசுக்கு என்ன லாபம்?
- வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு: செய்தியாளர் சந்திப்பை விட்டு சென்ற டிரம்ப்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












