கொரோனா வைரஸ்: இந்தியாவில் தினம் 10 லட்சம் பேருக்கு பரிசோதனை – நரேந்திர மோதி சொல்வது சாத்தியமா?

பட மூலாதாரம், EPA
- எழுதியவர், சுருதி மேனன்
- பதவி, உண்மை சரிபார்க்கும் குழு, பிபிசி
உலகின் மிக மோசமான நோய்த் தொற்றால் ஏற்பட்டுள்ள சவாலைக் கையாளுவதற்கு, அடுத்த சில வாரங்களில் தினமும் 10 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யும் அளவுக்கு, திறன்களை மேம்படுத்தப் போவதாக பிரதமர் நரேந்திர மோதி உறுதியேற்றுக் கொண்டார்.
ஆனால் அவரால் அதைச் சாதிக்க முடியுமா, அந்த பரிசோதனைகள் நம்பகமானவையா?
இந்தியாவின் தினசரி பரிசோதனை எவ்வளவு?
ஆகஸ்ட் தொடக்கத்தில், நாடு முழுக்க வாராந்திர அடிப்படைகளில் பார்த்தால், தினமும் சராசரியாக அரை மில்லியன் பரிசோதனைகள் நடத்தப்படுவது தெரிய வந்துள்ளது என்று "Our World in Data" என்ற சர்வதேச ஒப்பீட்டுத் தளம் கூறியுள்ளது.
இந்திய அரசு தினமும் வெளியிட்டு வரும் தகவல்கள் இதைவிட சற்று அதிகமானவையாக உள்ளன.
இது பெரிய எண்ணிக்கை. ஆனால், இந்திய மக்கள்தொகையின் அடிப்படையில் இதைப் பார்க்க வேண்டும்.
ஒவ்வொரு, ஒரு லட்சம் பேருக்கும் தினமும் 36 பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
தென்னாப்பிரிக்காவில் இது 69 என்றும், பாகிஸ்தானில் 8 என்றும், பிரிட்டனில் 192 எனவும் உள்ளது.
இப்போதுள்ள வசதியை இரட்டிப்பாக்கி, 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்ட நாட்டில், தினமும் ஒரு மில்லியன் பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் வகையில், வசதிகளை உருவாக்க வேண்டும் என்பது பிரதமர் மோதியின் விருப்ப நோக்கமாக உள்ளது.
இந்தியா எந்த மாதிரியான பரிசோதனைகளை நடத்துகிறது?
பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பது, கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஓர் அங்கம் என்ற நிலையில், அது எந்த மாதிரியான பரிசோதனை என்பது முக்கியமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலகெங்கும் பரவலாக பி.சி.ஆர் முறை கையாளப்படுகிறது. வழித்தெடுக்கும் (ஸ்வாப்) சாம்பிளில் இருந்து மரபணு பொருளை பிரித்துப் பார்ப்பதாக இந்தச் சோதனை முறை உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ரசாயனங்களைப் பயன்படுத்தி மரபணு பொருளில் இருந்து புரதம் மற்றும் கொழுப்பை நீக்கிவிட்டு, அந்த சாம்பிள் அல்லது மாதிரி, இயந்திரத்தின் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப் படுகிறது.
இதுதான் பரிசோதனைக்கான சிறந்த தரநிலை என்று கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இதற்கு அதிக செலவாகும். மாதிரிகளைப் பரிசோதிக்க 8 மணி நேரம் தேவைப்படும்.
மாதிரியை ஆய்வகத்துக்கு கொண்டு செல்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதைப் பொருத்து, பரிசோதனை முடித்து அறிக்கை தயாரிக்க ஒரு நாள் ஆகும்.
மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு, மலிவான மற்றும் விரைவாக முடிவை அறிய உதவக் கூடிய துரித ஆன்டிஜென் பரிசோதனை முறைக்கு அதிகாரிகள் மாறி வருகின்றனர். இது உலகெங்கும் நோய்க்குறி கண்டறிதல் அல்லது துரித பரிசோதனை என்று அழைக்கப்படுகிறது.
இது அந்த வைரஸில் இருக்கும் ஆன்டிஜென், பிரத்யேகமான புரதத்தைப் பிரித்துப் பார்த்து 15 முதல் 20 நிமிடங்களில் முடிவை அளித்துவிடும்.
ஆனால், இதன் மீதான நம்பகத்தன்மை குறைவுதான். 50 சதவீதம் அளவுக்கு தான் இது சரியான முடிவைத் தரும்.
வைரஸ் பரவல் தீவிரமாக உள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகள் மற்றும் சுகாதார முகாம் பகுதிகளுக்கானதாக இவை உருவாக்கப்பட்டன.
கடந்த காலத்தில் உங்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டதைக் காட்டும் நோய் எதிர்ப்பு கிருமிகளைக் கண்டறிதல் என்பதில் இருந்து மாறுபட்டு உங்களுக்கு இப்போது தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டியது அவசியம்.
தென்கொரியா, இந்தியா மற்றும் பெல்ஜியத்தில் உருவாக்கப்பட்ட 3 ஆன்டிஜென் பரிசோதனை முறைகளுக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அங்கீகாரம் அளித்துள்ளது.
நோய்த் தாக்குதல் இல்லை என்ற உண்மையான நிலையில் முடிவை அளிக்கும் வாய்ப்பு 50 முதல் 84 சதவீதம் வரையில் தான் உள்ளது என்று ஐசிஎம்ஆர் மற்றும் எயிம்ஸ் நடத்திய சுதந்திரமான மதிப்பீடுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
``உண்மையில் நோய் பாதிப்புக்கு ஆளானவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை இந்த ஆன்டிஜென் பரிசோதனை முறை கண்டுபிடிக்காமல் விட்டுவிடும் வாய்ப்பு உள்ளது'' என்று இந்தியாவின் பொது சுகாதார அறக்கட்டளை அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் கே. ஸ்ரீநாத் பிபிசியிடம் தெரிவித்தார்.
வழித்தெடுக்கும் பொருளின் (ஸ்வாப்) சாம்பிள் பரிசோதனை நல்லதாக இல்லாமல் போகலாம், அந்த நபருக்கு ஏற்பட்டுள்ள வைரஸ் பாதிப்பின் தீவிரம் அல்லது பரிசோதனை உபகரணத்தின் தரம் போன்ற காரணங்களால் இந்த நிலை ஏற்படலாம்.
இந்தப் பரிசோதனையில் நோய் பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தாலும், அறிகுறிகள் ஏதும் இருந்தால் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனையும் செய்ய வேண்டும் என்று ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

துரித பரிசோதனை உலகெங்கும் பரிந்துரைக்கப்படுகிறதா?
துரித அல்லது நோய்க்குறி அறிதல் பரிசோதனைகள் வைரஸ் பாதிப்பைக் கண்டறிய ஆன்டிஜென்களைப் பயன்படுத்தவோ அல்லது பயன்படுத்தாமலோ போகலாம்.
பிரிட்டனில் மிகவும் பொதுவான துரிதப் பரிசோதனையில், தவறு நேர்வதற்கு 20 சதவீத வாய்ப்புகள் உள்ளன.
ஆனால் ஆக்ஸ்போர்டு நானோப்போர் உருவாக்கியுள்ள துரித பரிசோதனை உபகரணங்கள் 98 சதவீதம் அளவுக்கு சரியான முடிவைத் தருவதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் சுதந்திரமான ஆய்வு நடத்தி இதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.
இந்த துரிதப் பரிசோதனைகளில் ஆன்டிஜென்கள் பயன்படுத்தப்படுவதில்லை, மரபணு பொருள் தான் பயன்படுத்தப்படுகிறது. எனவே அதிக நம்பகத்தன்மை கொண்டது. துரிதப் பரிசோதனையில் உங்களுக்கு நோய் பாதிப்பு இல்லை என்று வந்தாலும் பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்க உணவு மற்றும் ரசாயன மருந்துகள் நிர்வாகத் துறை ஆகியவை ஆலோசனை கூறியுள்ளன.
கடைகளில் நீங்களே ஒரு உபகரணத்தை வாங்கி, உங்கள் மூக்கு அல்லது உமிழ்நீரை வழித்தெடுத்து சில நிமிடங்களில் பரிசோதனை முடிவை நீங்களே அறிந்து கொள்வதைப் போன்ற ஒரு உபகரணத்தை உருவாக்க அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது.
கருத்தரித்திருப்பதை உறுதி செய்வதைப் போன்ற எளிய பரிசோதனை முறையை உருவாக்க இந்த முயற்சி நடைபெறுகிறது.
ஆனால், அவற்றின் செயல் திறன் நல்ல ஆய்வகத்தின் பரிசோதனை முடிவைப் போல தரமானதாக இருக்க வேண்டும் என்று, அதுபோன்ற உபகரணங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான எப்.டி.ஏ. வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

பட மூலாதாரம், Reuters
அமெரிக்காவில் ஏற்கெனவே BD மற்றும் Quidel-ன் ஆன்டிஜென் பரிசோதனை உபகரணத் தொகுப்புகள் பயன்படுத்தப் படுகின்றன. அவற்றின் செயல்திறன் முறையே 71 சதவீதம் மற்றும் 81 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அது இந்தியாவில் பயன்படுத்தும் சாதனங்களின் செயல்திறனைவிட அதிகம்.
இந்திய மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் விடுபட்டுப் போகிறார்களா?
பரிசோதனை நடைமுறைகளை தாங்களாகவே முடிவு செய்து கொள்ளும் நிலையில் உள்ள இந்தியாவின் பல மாநிலங்கள், துரிய ஆன்டிஜென் பரிசோதனை முறைக்கு மாறிக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் நடைபெறும் மருத்துவப் பரிசோதனைகளில் 30 சதவீதம் அளவுக்கு ஆன்டிஜென் பரிசோதனைகளாக உள்ளன என்று ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது.
டெல்லியில்தான் முதன்முறையாக ஜூன் மாதத்தில் ஆன்டிஜென் அடிப்படையிலான பரிசோதனை நடைபெற்றது. பிறகு வேறு பல மாநிலங்கள் அதைக் கடைப்பிடித்தன. ஜூன் 18 ஆம் தேதி டெல்லியில் இந்த பரிசோதனை தொடங்கியது. ஜூன் 29 வரையில், வெளியில் தெரிவிக்கப்பட்ட தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
ஜூன் 29 முதல் ஜூலை 28 வரையிலான தகவல்களை நாங்கள் பார்த்தோம். டெல்லியில் நடந்த 5,87,590 பரிசோதனைகளில் 63 சதவீத பரிசோதனைகள் ஆன்டிஜென் முறையிலானவை என தெரிய வந்துள்ளது.
ஆன்டிஜென் பரிசோதனையை டெல்லி அதிகரித்தது
ஆன்டிஜென் பரிசோதனையில், தொற்று இல்லை என முடிவு வந்தவர்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே பிசிஆர் பரிசோதனை செய்து கொண்டனர் என்றும் நோய் பாதிப்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டவர்களில் 18 சதவீதம் பேர் பிசிஆர் பரிசோதனை செய்து கொண்டதாகவும் தகவல் தொகுப்புகள் தெரிவிக்கின்றன.
தலைநகரில் இந்த நோயின் தாக்கத்துக்கு ஆளானதாக பதிவு செய்யப்படும் எண்ணிக்கைகள், கடந்த சில வாரங்களாக குறைந்து வருகின்றன. நோய் பாதித்த பலரும் விடுபட்டுப் போயிருப்பார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதிக அளவில் பிசிஆர் பரிசோதனைகளைச் செய்யும்படி பரிசோதனை மையங்களுக்கு அதிகாரிகள் இப்போது அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், ஹாட்ஸ்பாட்கள் மற்றும் சுகாதார முகாம்களில் மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, இப்போதும் 50 சதவீதத்துக்கும் அதிகமாக ஆன்டிஜென் பரிசோதனைகளே செய்யப்படுகின்றன என்றும் தகவல் தொகுப்புகள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் ஜூலை மாதத்தில் ஆன்டிஜென் பரிசோதனை முறை தொடங்கப்பட்டது. 30 மாவட்டங்களில் தினம் 35 ஆயிரம் பரிசோதனைகள் நடத்துவது என்ற இலக்குடன் அந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. அந்த இலக்கை அவர்களால் அடைய முடியவில்லை என்பதுடன், ஆன்டிஜென் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது.
ஆன்டிஜென் பரிசோதனைகளை கர்நாடகா அதிகரிக்கிறது
தற்போது கிடைத்துள்ள தகவல் தொகுப்பின்படி பார்த்தால், ஜூலை கடைசி வாரத்தில் நடந்த சோதனைகளில் நோய்த் தொற்று இல்லை என கூறப்பட்டவர்களில் 38 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இருந்து, பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும், அவர்களுக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டதாகவும் தெரிகிறது.
தெலங்கானா மாநிலத்தில் கடந்த ஜூலை மாதத்தில் ஆன்டிஜென் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டன.
தினமும் நடைபெறும் பிசிஆர் மற்றும் ஆன்டிஜென் பரிசோதனைகளின் எண்ணிக்கை என மாநில அரசு தகவல் வெளியிடாவிட்டாலும், 31 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் பிசிஆர் பரிசோதனை செய்யும் வசதிகளும், 320 அரசு மையங்களில் ஆன்டிஜென் பரிசோதனை வசதிகளும் உள்ளன.
இந்தியாவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில், முதலில் மும்பையில் ஆன்டிஜென் பரிசோதனை தொடங்கப்பட்டது. கோவிட்-19 அறிகுறி உள்ளவர்களில் 65 சதவீதம் பேருக்கு, இந்தச் சோதனையில் நோய் பாதிப்பு இல்லை என்று தெரிய வந்து, அவர்கள் பின்னர் பிசிஆர் பரிசோதனையில் நோய் பாதிப்பை உறுதி செய்து கொண்டனர்.
துரித பரிசோதனையில் சில நன்மைகள் இருப்பதாக பொது சுகாதாரத் துறை நிபுணர் டாக்டர் அனுபம் சிங் கூறுகிறார்:
``வேகமாக நோய் பாதிப்பைக் கண்டறிய முடிகிறது. தீவிரமாக நோயைப் பரப்பும் நிலையில் உள்ளவர்களை, சீக்கிரத்தில் கண்டறிய இது உதவுகிறது'' என்கிறார் டாக்டர் அனுபம் சிங்.
ஆனால் நோய்த் தொற்றுள்ள பலரையும் இது தவறவிட்டுவிடுகிறது என்பது குறித்து அவர் கவலை தெரிவிக்கிறார்.
``பிசிஆர் பரிசோதனைகளுக்கு அதிக முதலீடும்,கட்டமைப்பு வசதிகளும் தேவை. எனவே மரணங்களைக் குறைப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர். அதிக பாதிப்பு உள்ளவர்களைக் கண்டறிவதற்கு முன்னுரிமை தருகின்றனர்'' என்கிறார் டாக்டர் சிங்.
நிறைய பேருக்குப் பரிசோதனை என்ற இலக்கை எட்டவும், நிறைய பரிசோதனைகள் நடத்த வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நிறைவேற்றவும் ஆன்டிஜென் பரிசோதனை முறை உதவும்.
ஆனால், நோய் பாதிப்பின் உண்மையான தீவிரத்தை வெளிக்காட்டுவதாக அது இருக்காது என்ற ஆபத்து உள்ளது. பிசிஆர் பரிசோதனைகளையும் தொடர்ந்து செய்யாவிட்டால் இந்த ஆபத்து இருக்கும்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
- இந்திய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு என்ன? மன்மோகன் சிங் வழங்கும் 3 யோசனைகள்
- முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று
- ரஷ்யாவில் எம்பிபிஎஸ் படிக்கும் 4 தமிழக மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
- ராஜேந்திர சோழன்: 1,000 ஆண்டுகள் முன்பு இந்தியாவை, கீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன்
- இலங்கை தேர்தல்: இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரச்சனைகள் தீருமா?
- EIA 2020: "தேசத்தை கொள்ளையடிப்பதே இதன் நோக்கம்" - ராகுல் காந்தி குற்றஞ்சாட்டு
- சாத்தான்குளம் தந்தை மகன் சிறை மரண வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ. கொரோனாவுக்கு பலி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












