கோழிக்கோடு விமான விபத்து: ஓடுபாதையை தாண்டிய விமானம் சரிந்து விழுந்த தடயங்கள் #GroundReport

பட மூலாதாரம், Madan Prasad/BBC Tamil
- எழுதியவர், மு. ஹரிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையம் எனப்படும் கரிப்பூர் விமான நிலையத்தின் பின்புறம், தாய்தேசம் காணும் கனவுகளை சுமந்து வந்த 184 பயணிகளின் உடமைகளும், சிலரின் உடல் உறுப்புகளும் சிதறிக்கிடந்துள்ளன.
வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த விமான விபத்தின் தடையங்களோடு, அப்பகுதியில் அடுத்தநாள் காலை விடியத் துவங்கியது.
விமான நிலையத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த உயரமான கருங்கல் தடுப்புச் சுவரை விமானத்தின் முன்பாகம் முட்டி உடைத்ததால், சுவரின் ஒரு பகுதி முழுவதும் இடிந்த நிலையில் காட்சியளித்தது.
விமானத்தின் இறக்கை பாகங்கள் திசைக்கொன்றாக துண்டிக்கப்பட்டு கிடந்தன. பின் பகுதியில் பெருமளவு சேதமில்லாத போதும், விமானத்தின் நடுப்பகுதி குறுக்குவெட்டில் வெட்டபப்பட்ட உருளைபோல் உடைந்திருந்தது.
பிரம்மாண்டமான விமானம் ஒன்று பல துண்டுகளாக சிதைந்து கிடந்த அந்த காட்சி, விபத்தின்போது அதில் பயணித்தவர்கள் அனுபவித்த அச்சத்தையும், வலியையும் இவற்றை பார்ப்பவர்களுக்கும் கடத்துகிறது.
உயரமான மலை போன்ற ஓடுதளப் பகுதியிலிருந்து, விமானம் சறுக்கி விழுந்ததற்கான தடையங்களை சரிவுப்பகுதியில் மிகத்தெளிவாக காணமுடிகிறது.

பட மூலாதாரம், Madan Prasad/BBC Tamil
ஓடுதளத்தின் முடிவுப்பகுதியை விபத்துக்குள்ளான விமானத்தின் சக்கரங்கள் அதிவேகமாக கடந்து, மலைச்சரிவில் விழுந்து ஓடியதற்கான அடையாளங்களாக சரிவுப்பகுதி துவங்கும் உச்சியில் புதிதாக இரண்டு பள்ளங்கள் உருவாகியுள்ளன.
சரிவுப்பகுதி முழுவதும் ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுகின்றன. இவை, விமானத்தின் சக்கரங்கள் மற்றும் இறக்கைகள் போன்ற பாகங்களால் ஏற்பட்டிருக்ககூடும் என கணிக்க முடிகிறது.
மலைபோன்ற சரிவுப்பகுதியின் நடுவே வேகத்தடை போன்ற மண்தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலிருந்து கீழ்நோக்கி அதிவேகத்தில் பாய்ந்து வந்த விமானம், இந்த மண்தடுப்பில் மோதியதும் அதன் நடுப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

பட மூலாதாரம், Madan Prasad/BBC Tamil
மேலும், கீழ்நோக்கி பாய்ந்து உடைந்த விமானம் சமதளப்பகுதியில் குத்தி நொறுங்கியதோடு, தடுப்புச் சுவரில் மோதி நின்றுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் காக்பிட் எனப்படும் விமானத்தின் முன்பகுதி முழுவதும் மிகக்கடுமையாக சேதமடைந்துள்ளது.
இவை அனைத்தையும் உறுதி செய்யும்விதமாகவே மீட்புப்பணியில் ஈடுபட்ட பொதுமக்களின் தகவல்களும் உள்ளன. கனமழையால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றபோதும், மழைபெய்ததால் தான் தீவிபத்து தவிர்க்கப்பட்டது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், Madan Prasad/BBC Tamil
சிதைந்து கிடக்கும் விமானத்தை ஒட்டி அமைந்துள்ள வாசலிலும், தடுப்புச் சுவர் இடிந்த இடத்திலும் யாரையும் அனுமதிக்காத வகையில் கேரள காவல்துறையினர் மற்றும் மத்திய ரிசர்வ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விமானத்தின் உடைந்த பாகங்களை முக்கிய அமைச்சர்களும், அதிகாரிகளும் விமான நிலையத்தின் உட்புறம் வழிகாக வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. உரிய ஆய்விற்கு பிறகு விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று நம்பப்படுகிறது. ஆனால், விமானங்கள் இங்கு தரையிறங்கும் காட்சியை, இப்பகுதி மக்கள் பயத்தோடு பார்க்கும் நிலையை உருவாக்கியுள்ளது இந்த விபத்து.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












