கோழிக்கோடு விமான விபத்து: மருத்துவமனை வளாகத்தில் நடப்பது என்ன? #GroundReport

கேரள விமான விபத்து
    • எழுதியவர், முகமது சபித்,
    • பதவி, பிபிசிக்காக

கோழிக்கோடு நகரத்தில் உள்ள அனைத்து முக்கிய மருத்துவமனைகளும் கலவையான உணர்வுடன் காட்சி தருகின்றன.

மிம்ஸ் மருத்துவமனை, பேபி நினைவு மருத்துவமனை ஆகிய மருத்துவ மையங்களில்தான் நேற்று விமான விபத்தில் காயமுற்றவர்களில் பெரும்பாலானவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சிலருக்குச் சிறிய காயம். அவர்களின் உறவினர்கள் பெரும் துயரத்திலிருந்து தப்பித்த மனநிலையில் இருக்கிறார்கள். மற்றும் சிலர் தங்களது நேசத்துக்கு உரியவர்களின் உடலைப் பெற அங்குக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதைவிட பெரும் துயரம், காயமுற்ற தங்களது உறவினர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பது தெரியாமல் மருத்துவமனைக்கு வெளியே தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கோழிக்கோடு விமான விபத்து: மருத்துவமனை வளாகத்தில் நடப்பது என்ன? #GroundReport

ஏராளமான தன்னார்வலர்கள் குருதி கொடை கொடுக்க மருத்துவமனைக்கு வெளியே காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது 35 பேர் மிம்ஸ் மருத்துவமனையிலும், 25 பேர் பேபி நினைவு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறுகிறது மாவட்ட நிர்வாகம்.

பிபிசியிடம் பேசிய துணை ஆட்சியர் ஹிமா, 39 பயணிகள் மிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 4 பேர் மரணம் அடைந்துவிட்டனர் என்று கூறுகிறார்.

மேலும் நான்கு பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கிறார்.

மிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பயணிகள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்கிறார் ஹிமா.

பேபி
படக்குறிப்பு, பேபி மருத்துவமனை

மிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பயணிகளுக்குப் பொறுப்பு ஹிமா; பேபி நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பயணிகளுக்குப் பொறுப்பு மாவட்ட நிர்வாக மூத்த அதிகாரி அப்துல் ரஹ்மான்.

28 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் இரண்டு பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் வீடு திரும்பிவிட்டார் என்று கூறுகிறார்.

இப்போது சிகிச்சை பெற்று வரும் 25 பேரில், ஒருவரின் நிலைதான் கவலைக்கிடமாக இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார் அப்துல்.

நல்ல செய்திக்காகவும், பிரேதத்திற்காகவும்

மிம்ஸ் மருத்துவமனை வாசலில் மலப்புரத்தை சேர்ந்த கருணாகரன் தமது உறவினர்களுடன் காத்துக் கொண்டிருக்கிறார். விபத்திற்கு உள்ளானவர்களில் அவரது உறவினர் சுதீரும் ஒருவர். நேற்று இரவு சுதீர் காயத்தின் காரணமாகப் பலியானார்.

சுதீருக்குக் கொரோனா இருப்பதாக கூறுகிறார்கள். அவரது இறுதிச் சடங்கு குறித்த தகவலுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறுகிறார்கள் சுதீரின் உறவினர்கள்.

துபாயிலிருந்து புறப்படும் போது பரிசோதனை செய்யப்பட்டதில் சுதீருக்கு கொரோனா இல்லை என்று அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

சுதீர் (46), துபாயில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி இருக்கிறார். கொரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக அண்மையில் அவர் வேலையை இழந்துள்ளார்.

சுதீர்
படக்குறிப்பு, சுதீர்

சுதீர் ஒரு ஒழுக்கமான குடும்பஸ்தன் என கூறுகிறார் அவரது உறவினர் கருணாகரன்.

சுதீருக்கு சகோதர, சகோதரிகள் இல்லை. மனைவி, தாய் மற்றும் இரு குழந்தைகளை தவிக்கவிட்டுச் சென்று விட்டார். ஒரு குழந்தைக்கு ஐந்து வயதும், மற்றொரு குழந்தைக்கு 10 வயதும் ஆகிறது.

கடந்த இரு தசாப்தங்களாக அவர் பல்வேறு வளைகுடா நாட்டில் பணியாற்றி இருக்கிறார். துபாயில் மட்டும் 15 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார்.

கோழிக்கோடு விமான விபத்து: மருத்துவமனை வளாகத்தில் நடப்பது என்ன? #GroundReport

மிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், இளம் தம்பதிகள் கதீஜா நஸ்ரின் (24)மற்றும் அவர் கணவர் இர்ஃபானும் (28) அடக்கம்.

இவர்களது நிலைமை என்னவென்றே மருத்துவமனை வாசலில் காத்துக் கொண்டிருக்கும் அவர்களது உறவினர்களுக்குத் தெரியவில்லை.

இவர்கள் மலப்புரம் பொன்னானியை சேர்ந்ததவர்கள்.

நஸ்ரினின் உறவினர் சிராஜ், " மார்ச் மாதம் கொரோனா சமூக முடக்கத்திற்கு சில நாட்களுக்கு முன்புதான் நஸ்ரின் துபாய் சென்றார். இர்ஃபான் அங்கு மூன்று ஆண்டுகளாக பணியாற்றுகிறார்," என்று தெரிவித்தார்.

இவர்களுக்குக் குழந்தை இல்லை.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்களின் நிலை என்னவென தெரியவில்லை என்கிறார் சிராஜ்.

"உறவினர்கள் சிலர் மருத்துவமனை உள்ளே சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் இன்னும் திரும்பவரவில்லை," என்று கூறுகிறார்.

தன்னார்வலர்கள்

அதிகாரிகள், போலீஸார் மற்றும் குடும்பத்தினரைக் கடந்து, ஏராளமான தன்னார்வலர்கள் மருத்துவமனைக்கு வெளியே காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதில் 56 வயதான கேசவன் நம்பூதிரியும் ஒருவர்.

அரசுப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றிய அவர் அண்மையில்தான் ஓய்வு பெற்று இருக்கிறார். காயமடைந்தவர்களுக்கு ரத்தம் தேவை என்பதை கேள்விப்பட்டதும், அவர் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்குக் குருதி கொடை கொடுக்க தனது மகள் தீர்த்தராஜ் மற்றும் மகன் அக்‌ஷய் ராஜுடன் வந்துள்ளார்.

"விமான நிலைய அதிகாரிகளும் காரணம்"

வெள்ளிக்கிழமை ஏற்பட்ட இந்த விபத்துக்கு விமான நிலைய அதிகாரிகளும் ஒரு விதத்தில் காரணம் என குற்றஞ்சாட்டுகின்றனர் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

விமானநிலையத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்கிறார் கோழிக்கோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே. முரளீதரன்.

விமான நிலைய அதிகாரிகள் உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என குற்றஞ்சாட்டுகிறார் முரளீதரன். இவர் விமான போக்குவரத்து ஆலோசனை குழுவிலும் உறுப்பினராக இருக்கிறார்.

விமான நிலைய இயக்குநரை நான் நேரில் சந்தித்த போதும், விமான நிலையத்திற்கு என்ன தேவை என்பதை அவர் கூறவில்லை என்கிறார் முரளீதரன்.

இது தொடர்பாகக் கருத்து பெறப் பல முறை விமான நிலைய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர்கள் அழைப்பை எடுக்கவில்லை.

இரங்கல்

இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஏர் இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தை கருப்பு நிறத்தில் மாற்றி உள்ளது.

கோழிக்கோடு விமான விபத்து: மருத்துவமனை வளாகத்தில் நடப்பது என்ன? #GroundReport

பட மூலாதாரம், Air India Twitter

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: