கேரளா விமான விபத்து : 2010 மங்களூரு விபத்தை நினைவுபடுத்தும் கோழிக்கோடு சம்பவம்

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளான விமான சம்பவத்தை போலவே, 2010-ஆவது ஆண்டில் ஓர் சம்பவம் நடந்துள்ளது.
2010-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி, துபையில் இருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், நொறுங்கி விபத்துக்குள்ளானது. போயிங் 737-800 ரகத்தை சேர்ந்த அந்த விமானம், விழுந்ததில் 152 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்கள் உயிரிழந்தனர். அதில் 8 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.
அந்த விமானமும் தரையிறங்க சில நிமிடங்களில் மலைப்பகுதி அருகே விழுந்து விபத்துக்குள்ளானது.
அத்தகைய சம்பவத்துக்கு நிகராக தற்போதை விமான விபத்து நடந்திருப்பதாக கருதப்படுகிறது.
கோழிக்கோடில் வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளான விமானம், 13 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திடம் அந்த விமானம் 2006-ஆவது ஆண்டில் பயணிகள் சேவைக்காக வழங்கப்பட்டது.
பாகிஸ்தானில் விபத்து

பட மூலாதாரம், Anadolu Agency
கடந்த மே மாதம், பாகிஸ்தானின் கராச்சியில் விமான நிலையத்தை நோக்கி 107 பேருடன் தரையிறங்க வேண்டிய பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் PK-661 பயணிகள் விமானம், திடீரென நிலைதடுமாறி விழுந்த சம்பவத்தில் 98 பேர் பலியானார்கள்.
அதற்கு முன்பாக, 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி, இஸ்லாமாபாதில் இருந்து சித்ரால் என்ற பகுதி நோக்கிச் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 48 பேரும் உயிரிழந்தார்கள்.
மாஸ்கோ சம்பவம்
2019-ஆவது ஆண்டில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோ விமான நிலைய ஓடுபாதையில் தரையிறங்கும்போது திடீரென விமானம் நிலை தடுமாறி விபத்துக்குள்ளான சநம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட 41 பேர் பலியானார்கள்.
எத்தியோப்பியா விபத்து
2019, மார்ச் 10-ஆம் தேதி, கென்யா தலைநகர் நைரோபி நோக்கி 149 பயணிகள், 8 விமான ஊழியர்களுடன் புறப்பட்ட எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம், அடிஸ் அபாபா விமான நிலைய ஓடுபாதையில் இருந்து மேமே புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தார்கள்.
2018-இல் 6 சம்பவங்கள்
2018, அக்டோபர் மாதம், இந்தோனீஷியன் லயன்ஸ் ஏர் விமானம், ஜகார்ட்டா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்ளிலேயே மீண்டும் விமான நிலையத்துக்கு வர அந்த விமானத்துக்கு உத்தரவிடப்பட்டது. அப்போது மீண்டும் திரும்பி வந்தபோது கடலில் விழுந்து அந்த விமானம் விழுந்ததில் 189 பேர் பலியானார்கள்.
இதேபோல, டாக்காவில் இருந்து காத்மண்டூ சென்ற விமானம் விமான நிலையம் அருகே விழுந்து விபத்துக்குள்ளானது.

பட மூலாதாரம், Anadolu Agency
2018-ஆவது ஆண்டு, மார்ச் மாதத்திலும், அதே மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இஸ்தான்புல் சென்ற தனியார் ஜெட் விமானம், மலைப்பகுதியில் மோதியதில் 11 பேர் பலியானார்கள். ரஷ்யாவில் லடாக்கியா மாகாணத்தில் ராணுவ சரக்கு விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியதில் 39 பேர் பலியானார்கள்.
அதே ஆண்டு பிப்ரவரி மாதம், இந்திய விமானப்படையின் இலகு ரக ஹெலிகாப்டர் அஸ்ஸாம் மாநிலத்தின் மஜூலி தீவில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் பலியானார்கள். அதற்கு முன்னதாக, ஜனவரி மாதம் இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் ஐந்து அதிகாரிகளை ஏற்றிச் சென்ற பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டர், மும்பை கடலோர பகுதி அருகே விழுந்து விபத்துக்குள்ளானதில் அந்நிறுவன உயரதிகாரிகள் பலியானார்கள்.
மலேசியா விமானங்கள் சம்பவம்
விமான நிறுவன வரலாற்றிலேயே குறிப்பிடத்தக்க விமான சம்பவமாக, மலேசியன் ஏர்லைன்ஸ் எம்ஹெச்17 ரக விமானம் மற்றும் எம்ஹெச் 370 ரக விமான சம்பவங்களை கூறலாம். எம்ஹெச்17 ரக விமானம், கிழக்கு யுக்ரேனில் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் அதில் பயணம் செய்த 298 பேரும் பலியானார்கள்.
இதேபோல, எம்ஹெச் 370 விமானம் குவாலாலும்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கி சென்ற நிலையில் காணாமல் போனது. அதில் இருந்தவர்களின் நிலை கடைசிவரை அறியப்படாத சம்பவம், உலக விமான போக்குவரத்துத்துறை வரலாற்றிலேயே புதிரான நிகழ்வாகக் கருதப்படுகிறது.
பிற செய்திகள்:
- கேரளா விமான விபத்து: ஏர் இந்தியா விமானம் இரண்டாகப்பிளந்தது; 191 பேரின் கதி என்ன?
- இலங்கை தேர்தல்: அதிக வாக்குகளுடன் தொகுதிகளை கைப்பற்றிய தமிழ் வேட்பாளர்கள்
- கு.க. செல்வம்: திமுகவிடமிருந்து விலகி நிற்பது ஏன்? அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
- அயோத்தி ராமர் கோயில் தமிழகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
- 500 வார்த்தைகளில் அயோத்தியின் 500 ஆண்டுகால வரலாறு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












