ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் முர்மு பதவி விலகல்: பின்னணி காரணம் என்ன?

பட மூலாதாரம், DD Kashmir
- எழுதியவர், எம்.ஏ.பரணிதரன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்திய அரசியலமைப்பின் 370-வது விதியை, ஆளும் மத்திய அரசு ரத்து செய்த ஓராண்டு நிறைவுநாளில், புதிதாக உருவாக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து அதன் முதலாவது துணைநிலை ஆளுநர் ஜி.சி.முர்மு விலகியுள்ளார்.
அவரது பதவி விலகல் கடிதத்தை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதையடுத்து புதிய துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹாவை இந்திய குடியரசுத் தலைவர் நியமித்துள்ளதாக அவரது மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓராண்டில் பதவி விலகல்
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் இந்திய அரசியலமைப்பின் 370-ஆவது விதியை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி இந்திய அரசு ரத்து செய்தது. பின்னர் அந்த மாநிலம், ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.
அந்த நடவடிக்கையின் ஓராண்டு நேற்று நிறைவடைந்த நிலையில், தமது பதவி விலகல் கடிதத்தை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஜி.சி. முர்மு அனுப்பியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளராக 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்ற ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி (ஐஏஎஸ்) அதிகாரியான ராஜீவ் மெஹ்ரிஷியின் பதவிக்காலம் கடந்த மாத இறுதியில் முடிவடைந்தது.
இதையடுத்து, அந்த பதவிக்கு முர்முவை நியமிக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளதாகவும் அது தொடர்பான அறிவிக்கை ஓரிரு தினங்களில் வெளியாகும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பட மூலாதாரம், HINDUSTAN TIMES
ஜம்மு காஷ்மீரின் புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள மனோஜ் சின்ஹா, பாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவர். மேலும், மத்தியில் முந்தைய பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ரயில்வே இணை அமைச்சர், தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
நரேந்திர மோதியுடன் நெருக்கம்
ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த ஜி.சி. முர்மு, 1985-ஆவது ஆண்டு ஐஏஎஸ் பணியில் சேர்ந்தார். அவருக்கு குஜராத் மாநிலப் பணி ஒதுக்கப்பட்டது.
குஜராத் மாநிலத்தில் தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோதி மாநில முதல்வராக பதவி வகித்த காலத்தில், அந்த மாநில கூடுதல் இணை செயலாளர், கூடுதல் செயலாளர், முதன்மை செயலாளர் ஆகிய பதவிகளில் முர்மு பணியாற்றினார்.
அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோதியுடன் அவர் நெருக்கமாக பணியாற்றும் வாய்ப்பு அமைந்தது.
அடுத்தடுத்து வந்த உயர் பதவிகள்

பட மூலாதாரம், HINDUSTAN TIMES
2014-ஆவது ஆண்டில் நரேந்திர மோதி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்ததும், 2015-ஆவது ஆண்டில் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினங்கள் துறை இணைச்செயலாளராக மத்திய அரசுப் பணியில் முர்மு நியமிக்கப்பட்டார். பிறகு அவர் 2017-ஆவது ஆண்டில் மத்திய வருவாய்த்துறை சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டு ஓய்வு பெறும் ஆண்டில் செலவினங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
சர்சசையாகிய கருத்துகள்
ஜம்மு காஷ்மீரின் முதலாவது துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு அமலில் இருந்த ஊரங்கு கட்டுப்பாடுகளின் அங்கமாக முடக்கப்பட்டிருந்த 4ஜி சேவையை மீண்டும் வழங்குவது, மாநிலத்தில் தேர்தல் நடத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் வெளிப்படையாக முர்மு கருத்து வெளியிட்டது, சர்ச்சையாக பார்க்கப்பட்டது.
இந்தப் பின்னணியில் அவரது பதவி விலகல் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இந்த விவகாரத்தையடுத்து, ஜம்முவில் இருந்து புறப்பட்ட முர்மு, இன்று டெல்லி திரும்பி பிரதமர் நரேந்திர மோதியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, அவரை இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளராக நியமிக்கும் உத்தரவு வெளியாகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












