Beirut Blast "மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்த அணுசக்தி இல்லாத மிகப் பெரிய வெடிப்பு" மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், EPA
லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலுள்ள துறைமுகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த மாபெரும் வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், துறைமுக நிர்வாக அதிகாரிகள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வெடிப்பில் சிக்கி இதுவரை குறைந்தது 135 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 4,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், லெபனானில் இரண்டு வாரங்களுக்கு அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
துறைமுகத்தில் இருந்த கிடங்கில் உரிய பாதுகாப்பு இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் எடை கொண்ட அமோனியம் நைட்ரேட் காரணமாகவே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறுகிறார் அந்த நாட்டு அதிபர் மைக்கேல் ஆன்.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள லெபனான் சுங்கத்துறை தலைவர் பத்ரி தாஹிர், "இந்த வெடிப்புக்கு காரணமான வேதிப் பொருட்களை துறைமுகத்திலிருந்து வெளியேற்றுமாறு எங்களது துறை சார்பில் முன்னரே கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. இதற்கான காரணத்தை கண்டறிவதை வல்லுநர்கள் வசம் விட்டுவிடுகிறோம்" என்று கூறுகிறார்.
விவசாயத்தில் உரம் தயாரிக்கவும், வெடி மருந்து தயாரிக்கவுமே அமோனியம் நைட்ரேட் பயன்படுகிறது.
இதைத்தொடர்ந்து நேற்று கூடிய லெபனான் அமைச்சரவையின் அவசர கூட்டத்தில் பேசிய அதிபர் மைக்கேல் ஆன், "நேற்று இரவு பெய்ரூட் எதிர்கொண்ட கோர சம்பவத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இது பெய்ரூட்டை பேரழிவு தாக்கிய நகரமாக மாற்றிவிட்டது" என்று கூறினார்.
புகை, இடிபாடுகள் என அடைந்து இடர்பாடுகளையும் கடந்து பாதிக்கப்பட்டவர்களுக்காக சம்பவ இடத்திற்கும், மருத்துவமனைக்கும் உதவ சென்ற மக்களை நான் பாராட்டுகிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா மீது வீசப்பட்ட அணு குண்டு சக்தியில் பத்தில் ஒரு பங்கு இது இருந்திருக்கலாம் என்று பிரிட்டனின் ஷெஃபீல்ட் பல்கலைக்கழக வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர். மேலும், மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய அணுசக்தி அல்லாத வெடிப்புகளில் இதுவும் ஒன்றாகும் என்பதில் சந்தேகமில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

"அனைத்தும் ராமருக்கு உரியது, ராமர் அனைவருக்கும் உரியவர்" - நரேந்திர மோதி

பட மூலாதாரம், ANI
அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று (புதன்கிழமை) நிறைவடைந்தது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார்.
ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியதற்காக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமர் மோதிக்கு நன்றி தெரிவித்த அவர், "500 ஆண்டு கால போராட்டம், ஜனநாயக வழியிலும், அரசமைப்புக்கு உட்பட்டும் முடிவுக்கு வந்திருக்கிறது," என்று மேலும் கூறினார்.
விரிவாக படிக்க: அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை : “அனைத்தும் ராமருக்கு உரியது, ராமர் அனைவருக்கும் உரியவர்”

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்தது

பட மூலாதாரம், Getty Images
இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்றத் தேர்தலின் வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.
நேற்று (புதன்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த வாக்களிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றிருந்தன. நாடு முழுவதும் 12 ஆயிரத்து 985 வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
விரிவாக படிக்க: இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்தது - வன்முறைகள் அற்ற தேர்தலாக பதிவு

ஓராண்டு காலமாக காஷ்மீரின் அரசியல் கட்சிகள் மெளனம் காப்பது ஏன்?
சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி காலையில், காஷ்மீர் யூனியன் பிரதேசமாக ஆகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஓர் ஆண்டு கடந்துவிட்ட போதிலும்கூட, இதுவரை எந்த அரசியல் செயல்பாடும் தெரியவில்லை. அரசியல் கட்சிகள் கட்டுண்டு கிடப்பது, பல தசாப்தங்களில் முதல் முறையாக நடந்திருப்பதாக, பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
காஷ்மீரின் அரசியல், செயற்கை சுவாச கருவியில் பொருத்தப்பட்டுள்ளது போல உள்ளது. காஷ்மீரின் நடப்பு அரசியல் நிலைமையை, அதன் வரலாற்று பின்னணியில் பார்ப்போம்.

"திமுக குடும்பக் கட்சியாக மாறிவிட்டது" - சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம்

பட மூலாதாரம், TWITTER
திமுக குடும்ப கட்சியாக மாறிவிட்டது என சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்று (புதன்கிழமை) மதியம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, தன்னை தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கியுள்ள தி.மு.கவின் தலைமைக்குத் தைரியம் இருந்தால் தன்னை கட்சியிலிருந்து முழுமையாக நீக்கட்டும், அது நடந்தாலும் தனக்குக் கவலையில்லை எனவும் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












