சட்டப்பிரிவு 370: ஓராண்டு காலமாக காஷ்மீரின் அரசியல் கட்சிகள் மெளனம் காப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரியாஸ் மஸ்ரூர்
- பதவி, பிபிசி உருது சேவை
சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி காலையில், காஷ்மீர் யூனியன் பிரதேசமாக ஆகிவிட்டதாக அறிவிக்கப்பட்டபோது, காஷ்மீரில் அரசியல் பூகம்பம் வெடித்தது.
பிரிவினைவாதிகள் முதலிலேயே கைது செய்யப்பட்டுவிட்டனர். கூடவே, ஜனநாயக நடவடிக்கையில் பங்குபெறும் கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும்கூட வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
ஓர் ஆண்டு கடந்துவிட்ட போதிலும்கூட, இதுவரை எந்த அரசியல் செயல்பாடும் தெரியவில்லை. அரசியல் கட்சிகள் கட்டுண்டு கிடப்பது, பல தசாப்தங்களில் முதல் முறையாக நடந்திருப்பதாக, பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
காஷ்மீரின் அரசியல், செயற்கை சுவாச கருவியில் பொருத்தப்பட்டுள்ளது போல உள்ளது. காஷ்மீரின் நடப்பு அரசியல் நிலைமையை, அதன் வரலாற்று பின்னணியில் பார்ப்போம்.
முதல் அரசியல் கட்சி
82 ஆண்டுகளுக்கு முன்வரை, காஷ்மீரில் எந்த அரசியல் கட்சிகளும் இல்லை. ஜம்முவின் டோக்ரா மஹராஜா ஹரிசிங், அங்கு ஆட்சி செய்துவந்தார். அரசாங்க அடக்குமுறைக்கு எதிராக எப்போது எதிர்ப்பு வெடித்தாலும், அது பலப்பிரயோகத்தால் ஒடுக்கப்பட்டது.
1931ஆம் ஆண்டு இதுபோன்ற சில சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சில காஷ்மீரிகளுக்கு எதிராக சிறைச்சாலையில் விசாரணை நடைப்பெற்றது. அப்போது ஒரு கைதி, தொழுகை நடத்த அழைத்தபோது, டோக்ரா படையினர், அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். கைதிகள் அதை எதிர்த்தார்கள். அப்போது, படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், பெரும் எண்ணிக்கையில் கைதிகள் கொல்லப்பட்டனர்.
அக்காலத்தில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் கல்விபயின்று காஷ்மீரி இளைஞர்கள் காஷ்மீர் திரும்பினார்கள். அவர்களில், ஷேக் அப்துல்லாவும் ஒருவர். அவர், தம்முடன் ஒத்த சிந்தனையுள்ள படித்த நண்பர்களுடன் சேர்ந்து, காயமுற்றவர்களின் உதவிக்காக ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார்.
இந்த நிகழ்வால், காஷ்மீரி மக்களிடையே, அரசியல் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், முதலாவது அரசியல் கட்சியான ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் மாநாட்டு கட்சி உருவானது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

ஜம்முவின் செளத்ரி குலாம் அப்பாஸுக்கும், ஷேக் அல்துல்லாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்ட காரணத்தால், 1938 ஆம் ஆண்டு ஷேக் அப்துல்லா, கட்சியின் பெயரை, தேசிய மாநாட்டு கட்சி என்று மாற்றினார். காஷ்மீர் முழுவதற்குமான பிரதிநிதித்துவ அரசியல் கட்சியாக அது ஆனது.
நூறாண்டுகளில் முதல்முறையாக டோக்ரா ஆட்சியை எதிர்த்த ஷேக் மொஹமத் அப்துல்லா, `ஷேர் -ஏ- காஷ்மீர்` (காஷ்மீரின் சிங்கம்) என்று அழைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட காஷ்மீர் பிரதமர்
இந்திய பாகிஸ்தான் போருக்கு பிறகு காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதி, பாகிஸ்தான் வசம் சென்றுவிட்டது.
போர்நிறுத்தம் என்ற பெயரில், ஒரு தற்காலிக எல்லைக்கோடு வரையப்பட்டது. ஆகவே, காஷ்மீரின், மூன்றில் இரண்டு பகுதி, அதாவது ஜம்மு காஷ்மீர், இந்தியாவின் கீழ், ஓரளவு தன்னாட்சி பிராந்தியமாக மாறியது. தேசிய மாநாட்டு கட்சி, இந்தப்பிராந்தியத்தில், முதலாவது மற்றும் பெரிய அரசியல் கட்சியாக ஆனது.

பட மூலாதாரம், Getty Images
இணைப்பு நிபந்தனைகளின்படி காஷ்மீரின் ஆட்சியாளர், பிரதமமந்திரி என்றும், ஆளுனர் 'சதர் -எ- ரியாசத்' என்றும் அழைக்கப்பட்டனர். ஆனால் சில ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியாவுக்கு எதிரான சதி செய்ததான குற்றச்சாட்டின் பெயரில், காஷ்மீரின் முதல் பிரதமமந்திரி ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டார். அவருடைய நெருங்கிய சகா, பக்ஷி குலாம் மொஹம்மத் , பிரதமமந்திரி ஆக்கப்பட்டார்.
பின்னர் பிரதமமந்திரி பதவி, முதலமைச்சர் என்று ஆக்கப்பட்டது. சதர் -எ- ரியாசத், ஆளுனர் என்று மாற்றப்பட்டது. ஷேக் அப்துல்லா, 11 ஆண்டுகள் வரை சிறையில் இருந்தார். இந்த நிலையில், காஷ்மீரில் அவர் மூலமாக கருத்து வாக்கெடுப்பு இயக்கம் துவக்கப்பட்டது. அவர் விடுதலை செய்யப்பட்டபிறகு, இந்திய அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, அவர் முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். அதற்குள், இந்தியாவின் ஆளும் கட்சியான காங்கிரஸ், காஷ்மீரில், கால் ஊன்றியிருந்தது.
ஷேக் அப்துல்லாவின் ஒப்பந்தம்
மீண்டும் ஆட்சியில் அமர்ந்தபிறகு ஷேக் அப்துல்லா, கோரிக்கை அரசியலை ஆரம்பித்தார். 'தன்னாட்சியை திருப்பிக் கொடு' என்ற தேசிய மாநாட்டு கட்சியின் அடிப்படை கோஷம், மீண்டும் முன்வைக்கப்பட்டது.
இந்த கோஷத்தின் வலுவால், ஷேக் அப்துல்லா, அவரது மகன் ஃபரூக் அப்துல்லா மற்றும் பேரன் ஒமர் அப்துல்லாவும், சுமார் மூன்று தசாப்தங்கள் காஷ்மீரை ஆண்டனர்.

பட மூலாதாரம், Getty Images
ஆயுத கிளர்ச்சி என்ற பெயரில் காவல்துறைக்கு எல்லையற்ற அதிகாரங்கள் அளித்து, மக்களை கொடுமை செய்ததாக, 1998 ல் கார்கில் போருக்கு பிறகு, தேசிய மாநாட்டு கட்சியின் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதே பிரச்சனையை முன்னிறுத்தி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் முஃப்தி மொஹமத் சையித்,காஷ்மீரில், மக்கள் ஜனநாயக கட்சியை ஆரம்பித்தார். நான்காண்டுகளுக்கு உள்ளாக, காஷ்மீரின் முதலமைச்சர் ஆனார்.
அவர், இந்திய பாகிஸ்தான் நட்பு, மரியாதையுடன் அமைதி, சுயாட்சி மற்றும் எல்லைகட்டுப்பாட்டு கோட்டின் இருபுறங்களில் உள்ள காஷ்மீரி மக்களிடையே உறவை புதுப்பித்தல் போன்ற கோஷங்களின் மூலம், மக்களின் உள்ளங்களை கவர்ந்தார்.
அரசியலில் ஸர்ஜிகல் ஸ்ட்ரைக்
சென்ற ஆண்டு, காஷ்மீரில் மீதமிருந்த சுயாட்சி அதிகாரத்தையும் முடிவுக்கு கொண்டுவந்து, அது யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட செயலானது, தேசிய மாநாடு மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியை, குறிவைத்து நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல் போலவே இருந்தது. இரு கட்சிகளின் எல்லா முக்கிய தலைவர்களும், தொண்டர்களும், காவலில் வைக்கப்பட்டனர்.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி, காஷ்மீர் மக்கள் உணர்ச்சிபூர்வமான கோஷங்களால் சுரண்டுப்பட்டு வந்தனர் என்றும் இனி காஷ்மீரில், வளர்ச்சி மற்றும் செழிப்பும் ஏற்படும் என்றும் அறிவித்தது.
பாஜக தவிர கடந்த ஒரு ஆண்டில், எந்த ஒரு அரசியல் கட்சியும் செயல்திறனுடன் இல்லை. பிடிபி கட்சி (மக்கள் ஜனநாயக கட்சி) மீது சினம் கொண்ட சில கட்சி தொண்டர்களும், முன்னாள் அமைச்சர்களும், கடந்த ஆண்டு, நமது கட்சி அதாவது `அப்னி பார்ட்டி` என்ற பெயரில் ஒரு கட்சியை ஆரம்பித்தனர். அதன் தலைவர் அல்தாஃப் புக்காரி, பிரதமர் நரேந்திர மோதியை ஏற்கனவே சந்தித்துவிட்டார்.
"நமது கட்சி யாருடைய கட்சி?"
"அரசியல் முடிந்துவிட்டது என்று யார் சொன்னார்கள் . அரசியல் நடவடிக்கைகளில் எந்த கட்டுப்பாடும் இல்லை. அவர்கள் (தேசிய மாநாடு மற்றும் பிடிபி) மெளனம் கடைப்பிடிக்கின்றனர், இப்போது மெளனமே அவர்களின் அரசியல். மக்களுக்கு பிரச்சனைகள் உள்ளன, நாங்கள் அந்த பிரச்சனைகளை மத்திய அரசிடம் கொண்டுசென்று, அவற்றுக்கு தீர்வு தேடித்தருகிறோம்." என பிபிசியிடம் பேசிய அல்தாஃப் புகாரி தெரிவித்தார்.
இருந்தபோதும், அல்தாஃப் புக்காரி மீது, பேரம் பேசுவதான குற்றச்சாட்டு நிலவுகிறது.

பட மூலாதாரம், Getty Images
"விற்றுவிட்டதாக என்னை சொல்கிறார்கள். அட, விற்பதற்கு என்ன இருக்கிறது, முயற்சி செய்கிறார் என்று சொல்லுங்கள் ." என்கிறார் அவர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாமல், ஜனநாயகம் செழிக்கமுடியாது என்பதை புக்காரி ஒப்புக்கொள்கிறார். ஆனால்,மக்கள் உணர்வுபூர்வமாக சுரண்டப்படக்கூடாது என்று வலியுறுத்துகிறார்.
"எது கிடைக்க வாய்ப்பு உண்டோ அது பற்றி மட்டுமே பேசுகிறேன், எது கிடைக்காதோ அதை நான் ஏன் கேட்கவேண்டும். காஷ்மீரிடமிருந்து பறிக்கப்பட்ட மாநில அந்தஸ்தை திரும்ப பெறுவேன் என்று நான் சொன்னேன், இதை நான் இங்கும் சொல்வேன், தில்லியிலும் சொல்வேன்." என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இப்போது தேசிய மாநாடு மற்றும் பிடிபியின் சிறிய அறிக்கைகள் மட்டுமே செய்தித்தாள்களில், வெளியாகிறது. ஒரு நேரத்தில், டிவிட்டரில் அரசியல் விஷயங்களை பற்றி காரசாரமாக எழுதிய ஒமர் அப்துல்லாவும், இப்போது அரசியல் அல்லாத விஷயங்களை பற்றி மட்டுமே பேசுகிறார்.
ஒமரை விடுதலை செய்யும் வாக்குறுதி அளிக்கப்பட்டதால்தான், ஒமர் அப்துல்லாவின் சகோதரியின் கணவர் சச்சின் பைலட், காங்கிரஸை விட்டு பாஜகவில் இணைந்தார் என்று சத்திஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பகேல், குற்றம்சாட்டியுள்ளார்.
"இங்கு மக்கள் இறக்கவும் தயாராக உள்ளனர் என்பதை மத்திய அரசு கவனிக்கவேண்டும், இப்போதும் பேச்சுவார்த்தை நடத்தி, மக்களின் சுயமரியாதையையும், கண்ணியத்தையும் மீட்டெடுக்க வாய்ப்பு உள்ளது," என பரூக் அப்துல்லாவின் சகோதரர் ஷேக் முஸ்தஃபா கமால் தெரிவித்துள்ளார்.
நிபுணரும், சமூக பணியாளருமான அப்துல் மஜித் ஜர்கர், காஷ்மீரில் அரசியல் வளர்ச்சியை, பிராந்திய மாற்றத்தின் ஒரு பாகமாக பார்க்கிறார்.
"இப்போது சீனாவுடன் நிலைமை சீராகவில்லை. பாகிஸ்தானும், சீனாவும் நெருக்கமாக உள்ளனர். இந்தியாவின் சிறிய அண்டை நாடும்கூட நம்மை மிரட்டுகிறது. இந்த நிலையில், இங்கு அரசியலை செயல்படவிடாமல் அழுத்தி, தில்லி தவறு செய்கிறது." என்கிறார் அப்துல் மஜித் ஜர்கர்.
ஆனால், நீண்ட கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில், உண்மை நிலை, மிகவும் நிச்சயமற்றதாக உள்ளது. இந்த நிலையில் அரசியல் சூழல் எப்படி மற்றும் என்பதை யாராலும் கணிக்க இயலாது.
பிற செய்திகள்:
- காஷ்மீரில் தலைவர்களின் செயல்பாடே இல்லாமல் ஜனநாயகம் எப்படி இருக்கிறது?
- புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய வல்லுனர் குழு: கே.ஏ. செங்கோட்டையன்
- “இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக பெரியளவில் வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை”
- “டிக் டாக் செயலியை வாங்குகிறீர்களா?” - மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் பணம் செலுத்த சொன்ன டிரம்ப்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












