பினராயி விஜயன் அறிவிப்பு: வெளிநாடுகளில் வேலை இழந்தோருக்கு நிதியுதவி வழங்கும் கேரள அரசு

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

இந்து தமிழ் திசை - வெளிநாடுகளில் வேலை இழந்தோருக்கு நிதியுதவி

வெளிநாடுகளில் வேலை இழந்தோருக்கு உதவ, அவர்களுக்குத் தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட உள்ளதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "கேரளாவில் கடந்த சில தினங்களாக நோய் பரவும் வேகம் மிகவும் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாகக் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருப்பதன் மூலம் நோய் பரவுவது அதிகரித்து வருகிறது. இன்றும் (புதன்கிழமை) திருவனந்தபுரம் மாவட்டத்தில்தான் மிக அதிகமானோருக்கு நோய் பரவி உள்ளது. இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து வேலை இழந்தவர்களுக்கு உதவுவதற்காக, அவர்களுக்குத் தலா 5,000 ரூபாய் நிதியுதவி வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது'' என்று அவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

தினத்தந்தி: 49 ரூபாய்க்கு கொரோனா சிகிச்சை மாத்திரை - இந்தியாவில் சந்தைப்படுத்தும் தனியார் நிறுவனம்

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சைக்கு 49 ரூபாய்க்கு பேவிபிராவிர் என்னும் மாத்திரை விநியோகத்தை லூபின் என்ற இந்திய மருந்து நிறுவனம் தொடங்கி உள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கென எந்த மருந்தும் இன்னும் கண்டுபிடித்து, விற்பனைக்கு வரவில்லை. பிற நோய்களுக்கான மாத்திரை, ஊசி மருந்துகளை அவசர தேவைக்கு ஏற்ப சோதனை அடிப்படையில் பயன்படுத்த இந்தியாவில் அனுமதி அளிக்கப்படுகிறது.

அந்த வகையில் ஜப்பானில் இன்புளூவன்சாவுக்கு வாய்வழி வைரஸ் தடுப்பு மருந்தாக பேவிபிராவிர் மாத்திரை தரப்படுகிறது. இது வைரஸ் நகலெடுப்பை தடுக்கிற ஆர்.என்.ஏ. பாலிமரேசை தேர்ந்தெடுப்பதை தடுக்கிறது.

இந்த மருந்தை கொரோனா வைரஸ் தொற்றின் லேசான மற்றும் மிதமான பாதிப்பில் உள்ளவர்களுக்கு தர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லூபின் என்னும் மருந்து நிறுவனம், பேவிபிராவிர் மாத்திரையை கோவிஹால்ட் என்ற பெயரில் இந்தியாவில் விநியோகிக்க அனுமதி பெற்றிருந்த நிலையில் இந்த மாத்திரை ஒன்று 49 ரூபாய் என்ற விலைக்கு சந்தையிடப்பட்டுள்ளது.

இந்த மாத்திரை 200 மில்லிகிராம் அளவில் 10 மாத்திரைகள் கொண்ட அட்டையாக கிடைக்கிறது. அதேபோன்று, சன் பார்மா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பேபிபிராவிர் மாத்திரையை புளூகார்ட் என்ற பெயரில் மாத்திரை ஒன்றுக்கு 35 ரூபாய் என்ற விலையில் சந்தையிட்டுள்ளது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

தினமணி: "ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் முர்மு ராஜிநாமா"

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் கிரீஷ்சந்திர முர்மு தனது பதவியை புதன்கிழமை இரவு ராஜிநாமா செய்தார். அவர் மத்திய அரசில் புதிய பதவிக்கு செல்ல இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

60 வயதாகும் முர்மு குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். கடந்த ஆண்டு அக்டோபர் 29-இல் அவர் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் துணைநிலை ஆளுநராகப் பதவியேற்றார்.

எனினும், அவரது ராஜிநாமாவுக்கான காரணம் குறித்து அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: