‘பென்னிக்ஸ், ஜெயராஜ் மீது விழுந்த ஒவ்வொரு அடியும், சமூகத்தின் மீதான தாக்குதல்’ - 'லாக்கப்' சந்திரகுமார்

- எழுதியவர், மு.ஹரிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையினரோடு ஏற்பட்ட தகராறு காரணமாக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகிய இருவரும் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்நிலையில் 37 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற தாக்குதல்களை எதிர்கொண்டு தப்பித்துவந்த எழுத்தாளரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான மு.சந்திரகுமார், தனது அனுபவங்களையும், சாத்தான்குளம் விவகாரம் குறித்தும் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.
"1983 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தின் குண்டூரில் நான் வேலை செய்து கொண்டிருந்தபோது, விசாரணைக்காக காவலர்கள் என்னை அழைத்துச் சென்றனர். என்னைப்போன்றே மொழி தெரியாமல், ஆதரவில்லாமல் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 20க்கும் மேற்பட்டோர் விசாரணைக்காக அழைத்துவரப்பட்டிருந்தனர். விசாரணை என்ற பெயரில் நாங்கள் அனைவரும் அடித்து உதைக்கப்பட்டோம்.
எலும்புகள் நொறுங்கும் அளவிற்கு அடி விழுந்தது. செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி எங்களை காவல்நிலையத்தில் சித்ரவதை செய்தனர். ஆனால், எவ்வளவு அடி வாங்கினாலும் ஒப்புக்கொள்ள கூடாது என்ற மனஉறுதியில் நான் இருந்தேன். 5 மாத சிறை தண்டனைக்குப் பிறகு நிரபராதி என நிரூபிக்கப்பட்டு தப்பித்து வந்தேன்.
இந்த அனுபவங்களை 'லாக்கப்' என்ற பெயரில் நாவலாக எழுதினேன். தமிழ் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் எனது நாவலைத் தழுவி 'விசாரணை' என்ற பெயரில் திரைப்படம் இயக்கி வெளியிட்டார். படம் வெளியான பின்னர் காவல்துறையினரின் அதிகாரத் தாக்குதல்கள் குறித்து அனைவரும் பேசத்தொடங்கினர்.


மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருகிறேன். ஆனால், இங்கே ஒரு துளி மாற்றம் கூட நிகழவில்லை என்பதுதான் என்னுள் கோபத்தையும், ஆற்றாமையையும் உண்டாக்குகிறது" என சீற்றத்துடன் பேசத்துவங்கினார் சந்திரகுமார்.
சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்டவை என குற்றம் சாட்டுகிறார் இவர்.
"காவலர்களின் தாக்குதலில் இருந்து தப்பித்துவந்து பல வருடங்கள் ஆனாலும், என் கண் முன் நிகழும் எல்லா பிரச்சனைகளையும், நான் அங்கிருந்து தான் தொடங்குவேன். அந்தவகையில், சித்ரவதை நாட்களில் பென்னிக்ஸும் ஜெயராஜும் அனுபவித்த வலியை என்னால் உணர முடிந்தது. அடிவாங்கி உயிரிழந்த பென்னிக்ஸும் ஜெயராஜும் நான் தான் என தோன்றியது. அவர்கள் மீது விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதல் என கருதுகிறேன்."
"சாத்தான்குளம் சம்பவம் குறித்து தெரியவந்த அடுத்தநொடி 37 வருடங்கள் நான் பின்னோக்கி சென்றுவிட்டேன். காவல்துறையினரின் பிடியில் ஜெயராஜும் பென்னிக்ஸும் என்னென்ன சித்ரவதைகள் அனுபவித்திருப்பார்கள் என என்னால் யூகிக்க முடிந்தது.
காயங்கள் வெளியே தெரியாத வகையில் தான் காவலர்களின் அடி இருக்கும். விதவிதமாக சித்ரவதை செய்து வலி ஏற்படுத்துவார்கள். காவலர்களின் சித்ரவதையில் இருந்து மீண்டு வந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் ஏதாவது ஒரு உடல்நலக்குறைவு அல்லது பாதிப்போடு தான் உயிர் வாழ்வார்கள். உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்து சில ஆண்டுகளில் உயிரிழந்துவிடுவர்.

இப்படி, பல விதமான யுத்திகளில் விசாரணை என்ற பெயரில் காவலர்களின் தாக்குதல் இருக்கும். மருத்துவர்களில் எப்படி குறிப்பிட்ட சிகிச்சைக்கான நிபுணர்கள் இருப்பார்களோ, அதேபோல் விசாரணை என்ற பெயரில் சிக்கியவர்களை அடித்து உதைக்க கைதேர்ந்த காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.
சாத்தான்குளம் விவகாரத்தை பொறுத்தவரை இருவரையும் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அவர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உடலுக்குள் லத்தியை விட்டு சித்ரவதை செய்து, உருக்குலைத்து, ரத்த கசிவு ஏற்படவைத்து உயிரிழக்கச் செய்துள்ளனர். அவ்வாறு செய்தால் உயிரிழந்துவிடுவார்கள் என காவலர்களுக்கு தெரியாமல் இருக்குமா?" என்கிறார் சந்திரகுமார்.
மேலும், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் முக்கிய ஆதாரங்கள் அனைத்தும் சமூகவெளியில் பரவியதால் தான் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறுகிறார் இவர்.
"முன்பெல்லாம் காவல்நிலையம் அல்லது சிறையில் மரணம் ஏற்பட்டால், அந்த தகவல் பொதுமக்களை சென்றடைவதில் பல தடைகள் ஏற்படும். காவலர்களிடமிருந்து தான் தகவல்களை பெற வேண்டும், அதை பிரசூரிக்க செய்தி ஆசிரியரின் அனுமதி வேண்டும்.
ஆனால், இப்போது ஒரு தகவலை ஒரு சில நிமிடத்தில் உலக மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த முடிகிறது. பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மீது தொடுக்கப்பட்ட ரத்தவெறி தாக்குதலின் ஆதாரங்கள் அனைத்தும் நம் அனைவருக்கும் வந்து சேர்ந்தது. தொலைக்காட்சி ஊடகங்கள் இந்த பிரச்சனை குறித்து விவாதித்தன.
காவல்துறையின் அதிகாரம் எளிய மக்களை எப்படி கொன்றது என்பதை அனைவரும் தெரிந்துகொண்டனர். இவ்வாறான தொலைத்தொடர்பு வசதி இல்லாததால், ஆதாரங்கள் வெளிவராமல் ஏராளமான மனித உயிர்கள் காவல்துறையின் அடக்குமுறையால் பலியாகியுள்ளன,"
"சாத்தான்குளம் வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கிறேன். இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது தான் எனது கருத்து. மேலும், காவல்துறையின் கட்டமைப்பில் உள்ள தவறுகளை சரிசெய்ய வேண்டும். பொதுமக்களை தாக்கும் அதிகாரத்தை காவலர்களிடம் வழங்கினால், இதுபோன்ற ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் இங்கு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும்." என தெரிவிக்கிறார் எழுத்தாளர் சந்திரகுமார்.
மனித உரிமை மீறல் குறித்து ஆவனப்படுத்திவரும் எழுத்தாளர் சந்திரகுமார், கோவையில் வசித்து வருகிறார். வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ ஓட்டிவரும் இவரை 'ஆட்டோ சந்திரன்' என்றும் அழைக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












