சச்சின் பைலட் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் மற்றும் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கம்

பட மூலாதாரம், Getty Images
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வந்த சச்சின் பைலட் அந்த மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்தும், துணை முதலமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது என ஏ.என்.ஐ செய்தி முகமை கூறுகிறது.
இரண்டாவது நாளாக நடைபெற்ற ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலும் சச்சின் பைலட் கலந்துகொள்ளவில்லை.
இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் அவர் துணை முதல்வர் பொறுப்பில் இருந்தும் கட்சியின் மாநில தலைவர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசோக் கெலோத் முதலமைச்சர் பதவியில் நீடிக்க 106 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
200 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள ராஜஸ்தான் சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற 101 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை.


காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 107 சட்டமன்ற உறுப்பினர்களும் வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் 15 பேரும் ஆதரவளித்து வருகின்றனர்.
தனக்கு 30 பேரின் ஆதரவு இருப்பதாக சச்சின் பைலட் கூறினார். ஆனால் அவருக்கு 16 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களே ஆதரவு அளிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தாம் பாஜகவில் சேரப்போவதாக வெளியான தகவல்களையும் அவர் மறுத்திருந்தார்.
தமது அரசைக் கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சி முயல்வதாக மாநில முதல்வர் அசோக் கெலோத் சனிக்கிழமை குற்றம்சாட்டினார்.
2018 டிசம்பரில் ராஜஸ்தானில் வென்று காங்கிரஸ் ஆட்சியமைத்தபோது சச்சின் பைலட் முதல்வர் ஆக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவருக்கு அப்பதவி வழங்கப்படாததால் அப்போது முதலே அவர் முதல்வர் அசோக் கெலோத் உடன் வெளிப்படையாகவே மோதல் போக்கை கடைபிடித்து வந்தார்.
பிற செய்திகள்:
- அரபு தேசத்தின் முதல் விண்வெளி பயணம்: ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் செல்வது ஏன்?
- பிரான்ஸ்: உருகும் பனிப்பாறையில் கண்டுபிடிக்கப்பட்ட 1966ஆம் ஆண்டு இந்திய செய்தித்தாள்
- அமெரிக்கா - சீனா - பிரிட்டன்: பூகோள அரசியலில் சிக்கிக்கொண்ட ஹுவாவே நிறுவனம்
- புற்றுநோய் அணுக்களை அழிக்கப் பயன்படும் மஞ்சள் - சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












