கூட்டுறவு வங்கிகள்: ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

கூட்டுறவு வங்கிகள்

பட மூலாதாரம், Getty Images

தினத்தந்தி: ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வருகிறது கூட்டுறவு வங்கிகள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாடு முழுவதும் 1,540 கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டுவர ஒப்புதல் அளிக்கப்பட்டது.

1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளும், 58 மாநில கூட்டுறவு வங்கிகளும் என மொத்தம் 1,540 கூட்டுறவு வங்கிகள், ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும். இதன்மூலம், இதர வர்த்தக வங்கிகள் போலவே அவை செயல்படும்.

இதற்காக குடியரசுத் தலைவர் விரைவில் அவசர சட்டம் பிறப்பிப்பார் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். இந்த முடிவால், மேற்கண்ட கூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்துள்ள பொதுமக்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்றும், ஊழல்கள் தடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த வங்கிகளில் மொத்தம் 8 கோடியே 60 லட்சம் முதலீட்டாளர்கள் உள்ளனர். அவர்களது சேமிப்பு பணம் ரூ.4 லட்சத்து 85 ஆயிரம் கோடி, அந்த வங்கிகளில் உள்ளது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

இந்து தமிழ் திசை: வருமானவரித் தாக்கல், ஆதார்-பான் எண் இணைப்புக்கு காலக்கெடு நீட்டிப்பு

வருமானவரி

பட மூலாதாரம், Getty Images

2018-19ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தவற்கான காலக்கெடுவை வரும் ஜூலை 31-ம் தேதிவரை நீட்டித்தும், ஆதார்-பான் எண் இணைப்புக்கான அவகாசம் வரும் 2021-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரை நீடித்தும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நேரடிவரிகள் வாரியம் (டிபிடிடி) நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

2018-19-ம் ஆண்டுக்கான வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜூன் 30-ம் தேதி வரை வழங்கப்பட்டு இருந்தது. இது மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு, ஜூலை 31-ம் தேதிவரை அவகாசம் வழங்கப்படுகிறது. வருமானவரிச் சட்டத்தின் படி, 80சி, 80டி 80ஜி பிரிவில் முதலீடு, மருத்துவக்காப்பீடு, நன்கொடை ஆகியவற்றை கணக்கில் காட்டி கழிவுபெறலாம்.

மேலும், 2018-19-ம் ஆண்டு அசல் மற்றும் திருத்தப்பட்ட வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவும் வரும் ஜூலை 31ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-20 நிதியாண்டுக்கான டிடிஎஸ், டிசிஎஸ் விவரங்களை அளிப்பதற்கான காலக்கெடு வரும் ஜூலை 31-ம் தேதி வரையிலும், டிடிஎஸ், டிசிஎஸ் சான்றிதழ்களை அளிப்பதற்கான அவகாசம் ஆகஸ்ட் 15-ம் தேதிவரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது

ஆதார் கார்டை, பான் எண்ணுடன் இணைக்கும் காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2021-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரை ஆதார், பான் எண் இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

தி இந்து (ஆங்கிலம்): பல்கலைக்கழக இறுதியாண்டு தோ்வுகளை ரத்து செய்ய பரிந்துரை

பல்கலைக்கழக இறுதியாண்டு தோ்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (கோப்புப்படம்)

நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் இதர உயா்கல்வி நிறுவனங்களில் பயிலும் இறுதியாண்டு மாணவா்களுக்கான இறுதி பருவத் தோ்வுகளை ரத்து செய்ய மத்திய அரசுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) பரிந்துரைத்துள்ளதாக தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போதைய சூழலில் தோ்வுகளை நடத்துவது, லட்சக்கணக்கான மாணவா்களின் நலனை ஆபத்துக்கு உள்ளாக்கிவிடும் என்று ஹரியாணா பல்கலைக்கழக துணைவேந்தா் ஆா்.சி.குஹத் தலைமையிலான குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. முந்தைய பருவத் தோ்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், உள்ளக மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவா்களுக்கு மதிப்பெண் வழங்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பல்கலைக்கழக மாணவா்களுக்கான வகுப்புகள் தொடங்குவதை, ஜூலையிலிருந்து ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்திவைக்க வேண்டும். அதேபோல், புதிய மாணவா்களுக்கான வகுப்புகளை, ஆகஸ்டிலிருந்து அக்டோபருக்கு ஒத்திவைக்கலாம் என்று யுஜிசி பரிந்துரைத்துள்ளது என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :