கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து: மனிதர்களிடம் பரிசோதனை தொடக்கம் மற்றும் பிற செய்திகள்

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

பிரிட்டனில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை மனிதர்களுக்கு கொடுத்துப் பரிசோதிக்கும் பணி தொடங்கியது.

இந்த மருந்தினை தங்கள் உடலில் செலுத்தி பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள விரும்புகிற தன்னார்வலர்களுக்கு மருந்து செலுத்துவது தொடங்கிவிட்டது. அடுத்த சில வாரங்களில் 300 பேர்களுக்கு இந்த மருந்து செலுத்தப்படும். லண்டன் இம்பீரியல் கல்லூரிப் பேராசிரியர் ராபின் ஷட்டாக் குழுவினர் இந்தப் பரிசோதனையை நடத்துகிறார்கள்.

முன்னதாக விலங்குகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்பதும், பயனுள்ள வகையில் நோயெதிர்ப்பு எதிர்வினையைத் தூண்டுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக வல்லுநர்கள் ஏற்கெனவே மனிதர்களிடம் பரிசோதனையைத் தொடங்கிவிட்டனர்.

கொரோனாவுக்கு உலகின் பல இடங்களில் இது போல தனித்தனியாக சுமார் 120 தடுப்பு மருந்து ஆராய்ச்சித் திட்டங்கள் நடந்து வருகின்றன.

நிதி துறையில் பணியாற்றும் 39 வயது கேத்தி என்பவர் இந்த தடுப்பு மருந்தினை முதலில் ஏற்றி பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள முன்வந்தவர்களில் ஒருவர். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்காற்றவேண்டும் என்பதற்காகவே இந்த பரிசோதனைக்கு முன்வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த முதல் கட்டப் பரிசோதனையில் அடுத்ததாக அக்டோபர் மாதம் 6 ஆயிரம் பேருக்கு இந்த மருந்து செலுத்தி பரிசோதனை நடத்தப்படும்.

பிரிட்டனிலும் பிற நாடுகளிலும் இந்த தடுப்பு மருந்து 2021 தொடக்கத்தில் கிடைக்கும் என்கிறது இம்பீரியல் கல்லூரி ஆய்வுக் குழு.

புதிய வகை

தடுப்பு மருந்து

பட மூலாதாரம், IMPERIAL COLLEGE

வழக்கமான தடுப்பு மருந்துகள், வைரஸை பலவீனப்படுத்தியோ, மாற்றியமைத்தோ அதன் அடிப்படையில் செய்யப்படுவதாக இருக்கும். ஆனால், இம்பீரியல் கல்லூரி ஆய்வுக்குழு புதிய அணுகுமுறையைக் கையாண்டு தடுப்பு மருந்தினை உருவாக்கியுள்ளது.

ஆர்.என்.ஏ. எனப்படும் வைரசின் மரபியல் குறியீட்டின் கூறுகளை இவர்கள் செயற்கையாக உருவாக்கியுள்ளார்கள். வைரஸைப் போலவே தோன்றும் இதனை சிறிதளவு உடலில் செலுத்துவார்கள்.

அப்போது, இந்த ஆர்.என்.ஏ. கூறு தம்மைத் தாமே பெருக்கிக்கொள்ளும். வைரசின் வெளிப்புறம் உள்ள கூர்மையான புரத அமைப்பை படியெடுத்துக்கொள்ளும்படி உடலின் உயிரணுக்களுக்கு இது உத்தரவிடும்.

இதன் மூலம், கொரோனா வைரசை அடையாளம் காணவும், அதனை எதிர்த்துப் போராடவும் உடலின் நோயெதிர்ப்பு அமைப்புக்கு இந்த தடுப்பு மருந்து பயிற்சி அளிக்கும். அதே நேரம், இதன் மூலம் தடுப்பு மருந்து செலுத்திக்கொள்வோருக்கு கோவிட்-19 நோய் ஏற்பட்டுவிடாதபடியும் பாதுகாப்பு ஏற்பாடு இருக்கும்.

மிக நுண்ணிய அளவிலான வைரசின் ஆர்.என்.ஏ. குறியீடு மட்டுமே தடுப்பு மருந்தாக செலுத்தப்படும். ஒரு லிட்டர் செயற்கை ஆர்.என்.ஏ. 20 லட்சம் பேருக்கு மருந்து தயாரிக்கப் போதுமானது என்கிறார் பிபிசி மருத்துவச் செய்தியாளர் ஃபெர்குஸ் வால்ஷ்.

Presentational grey line

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்துக்குத் தடை

போக்குவரத்து

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மாவட்டங்களுக்கு இடையில் இ - பாஸ் இல்லாமல் பயணம் செய்வதற்கு தடைவிதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூன் 30ஆம் தேதிவரை இந்த தடை அமலில் இருக்கும்.

Presentational grey line

'பதஞ்சலி நிறுவனத்துக்கு கொரோனா வைரஸ் மருந்து தயாரிக்க அனுமதி இல்லை'

பதஞ்சலி

பட மூலாதாரம், Getty Images

சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ள நிலையில், தாங்கள் பதஞ்சலி நிறுவனத்துக்கு மருந்து தயாரிக்க அனுமதி எதையும் வழங்கவில்லை என்று உத்தராகண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது.

பதஞ்சலி நிறுவனத்தின் மருந்து உற்பத்தி நிலையம் உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

Presentational grey line

இந்திய- சீன எல்லை மோதல்: ரஷ்யா யார் பக்கம் நிற்கும்?

ரஷ்யா

பட மூலாதாரம், Getty Images

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜி படையினரை, ரஷ்ய சோவியத் படையினர் வென்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இந்த 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை அனுசரிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்ளவுள்ளார். மேலும் ரஷ்யாவின் உயர் ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபடப் போகிறா

Presentational grey line

சாத்தான்குளம் தந்தை மகன் சிறையில் பலி: குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிதியுதவி

சிறை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை - மகன் காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த நிலையில் அவர்களது குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் அளிப்பதாகவும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: