தமிழ்நாடு கொரோனா வைரஸ்: சென்னையை விட்டுச் செல்ல முறைகேடாக இ - பாஸ்: 5 பேர் கைது

பட மூலாதாரம், Getty Images
சென்னையை விட்டு வேறு மாவட்டங்களுக்குச் செல்ல விரும்புபவர்களுக்கு முறைகேடாக இ - பாஸ் வழங்கியதாக முதுநிலை வருவாய் ஆய்வாளர் உட்பட 5 பேரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
சென்னையில் கொரோனா தொற்று அதிகமுள்ள நிலையில், பெரும் எண்ணிக்கையில் மக்கள் சென்னை நகரைவிட்டு வெளியேறிவருகின்றனர்.
சென்னையிலிருந்து வேறு மாவட்டங்களுக்குச் செல்ல இ - பாஸ் எனும் மின் அனுமதிச் சீட்டைப் பெற வேண்டும். ஆனால், சென்னையிலிருந்து எந்த மாவட்டங்களுக்குச் செல்கிறோமோ, அந்த மாவட்டங்களே ஆவணங்களைச் சரிபார்த்து இ - பாஸ் வழங்கிவந்தன.
இந்த நிலையில், இ - பாஸ் தேவையுள்ள பலருக்குக் கிடைக்கவில்லை என்றும் பணம் கொடுத்து சிலர் இ - பாஸ் வாங்கிவிடுவதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை சைபர் கிரைம் காவல்துறை விசாரித்துவந்தது.

அதன்படி, 2,000 ரூபாய் பெற்றுக்கொண்டு இ - பாஸ்களை வாங்கிக்கொடுத்த ஒரு கும்பலை காவல்துறை இன்று கைதுசெய்துள்ளது.
முறைகேடாக இ - பாஸ் வழங்கியது எப்படி?
மனோஜ்குமார், வினோத்குமார், ஜி.எம். தேவேந்திரன் ஆகியோர் கார் ஓட்டுனர்களாக இருந்தவந்தனர். தங்களிடம் வெளிமாவட்டங்களுக்கு செல்ல விரும்புவதாக கூறுபவர்களிடம், தாங்களே இ - பாசும் வாங்கித் தருவதாகச் சொல்லி ஒரு இ - பாஸிற்கு இரண்டாயிரம் ரூபாய் வசூலித்தனர்.
அதற்குப் பிறகு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிய உதயகுமார் என்பவரிடம் இந்த தகவல்களை அளித்தார்கள். அவர், முதுநிலை வருவாய் ஆய்வாளரான குமரன் என்பவரிடம் இந்தத் தகவல்களை அளிப்பார்.


இதற்குப் பிறகு குமரன், அவர்கள் எந்த மாவட்டத்திற்கு செல்ல வேண்டுமோ அந்த மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வருவதைப் போல இ - பாஸை தயார் செய்து தருவார். அந்த இ - பாஸை பயன்படுத்தி, தாங்கள் சென்னையிலிருந்து சொந்த மாவட்டத்திற்குத் திரும்பச் செல்வதாகக் கூறி பலரும் சென்னையிலிருந்து வெளியேறினர். இ - பாஸிற்காக இவர்கள் வாங்கிய தொகையை இந்த ஐந்து பேரும் பகிர்ந்துவந்தனர்.
இப்போது இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு, அவர்களிடமிருந்து செல்போன், சிம்கார்டுகள், மெமரி கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












