You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கமல் ஹாசன் - விஜய் சேதுபதி உரையாடல்: “அரசியலுக்கு வருவதை இவ்வளவு காலம் தள்ளிப்போட்டது ஏன்?”
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ் திசை: அரசியலுக்கு வருவதை இவ்வளவு காலம் தள்ளிப்போட்டது ஏன்? - கமல் விளக்கம்
கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் திரைப்பட கலைஞர்கள் அனைவரும் வீட்டில் உள்ளனர். இந்நிலையில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி இருவரும் 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் 'தலைவன் இருக்கிறான்' என்ற நேரலை கலந்துரையாடலில் பங்கேற்றனர். இதில் விஜய் சேதுபதியின் கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார். அதிலிருந்து ஒரு பகுதி இங்கே:
ஒரு மேடையில் இளையராஜா 'நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும்' என உங்களை கேட்டுக் கொண்டார். ஆனால், அரசியலுக்கு வரப் போவதையொட்டி சினிமாவில் ஒரு வசனம் கூட நீங்கள் பேசவில்லையே, ஏன்?
என்னுடைய எந்த சினிமாவை உற்றுக் கவனித்தாலும் அனைத்திலும் ஒரு கொட்டு இருக்கும். ஏதாச்சும் ஒன்று வைத்திருப்பேன். 'வறுமையின் நிறம் சிவப்பு' காலத்திலிருந்தே தைரியமான சில கருத்துகளை சொல்லியிருப்போம். 'சத்யா' படத்தில் நேரடி அரசியல் பேசப்பட்டிருக்கும். 'தேவர் மகன்' படத்தில் சொல்லாமல் சொல்லியிருப்போம். 'தேவர் மகன்' படத்துக்கு 'நம்மவர்' என்றே நானும் அனந்துவும் பெயர் முடிவு செய்தோம். கவிஞர் வாலிதான் தேவர் மகன்தான் சரியான பெயர் என்றதும் அப்படியே வைத்தோம். அதற்காக பலர் கோபப்பட்டனர். நான் சொல்ல வந்த கருத்தை சொல்ல முடியவில்லை. சாதி சண்டை என்றால் தமிழகத்துக்கு நிறையப் பிடிக்கும். எனது 'ஹே ராம்' படத்தை இன்றைக்கு பார்க்கும் போதும் சில இடங்களில் நாக்கை கடித்துக் கொள்வேன். கொஞ்சம் அளந்து போட்டிருக்கலாமே. காரம் அதிகமாகிவிட்டதே என நினைத்தது உண்டு.
அரசியலுக்கு வருவதை இவ்வளவு காலம் தள்ளிப்போட்டது ஏன்?
அதற்கான சூழலும் வயதும் வர வேண்டும். என்னை பார்த்து 'இவன் வந்துட்டானா?" என்று யாரும் சொல்லக்கூடாது. 'இவர்' என்று சொல்கிற வயதுக்காக காத்திருந்தேன்.
'ஹே ராம்' படத்தின் தணிக்கைக் காக வண்டி நிறைய ஃபைல்கள் எடுத்துக் கொண்டு போனீர்களாமே... உண்மையா சார்?
வண்டி நிறைய என்று சொல்வது சும்மா பேச்சுக்காக சொல்வது. நிறைய ஆதாரம் எடுத்துக் கொண்டு போனேன். தணிக்கையில் நிறைய அவமானங்கள். தணிக்கை துறையிலும் நிறைய நல்லவர்களும், நமக்காகக் கண் கலங்குபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், என்ன செய்வது அது அரசாங்க வேலை. 'ஹே ராம்' படத்தை தணிக்கை அதிகாரிகள் பார்த்ததை விட, ஒரு எம்பி, மறைந்த சுஷ்மா ஸ்வராஜ், சத்ருகன் சின்ஹா என பாஜகவினர் அனைவரும் அந்தப் படத்தை வெளியே விட வேண்டுமா, இல்லையா என்பதை முடிவு செய்ததும்தான் அந்தப் படம் வெளியானது. இது சரித்திரம். அதில் எனக்கு பெரிய அவமானம் என்னவென்றால், சில காங்கிரஸ்காரர்கள் அப்படத்தை காந்திக்கு எதிரான படம் என்று சொல்லி, அப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என குரல் கொடுத்தனர். அதில் வருத்தப்பட்டது காந்தியின் கொள்ளு பேரன் துஷார் காந்தியும் நானும்தான். நான் காந்திக்கு செய்த மிகப்பெரிய மரியாதையாக அதை நினைக்கிறேன்.
தினத்தந்தி: கொரோனா வைரஸ் - 7 டன் மருத்துவ பொருட்களை அமீரகம் அனுப்பியது
கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக இந்தியா வலுவாக போராடுவதற்கு வசதியாக ஐக்கிய அரபு அமீரகம் 7 டன் மருத்துவ பொருட்களை அனுப்பியது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
இந்தியா உள்ளிட்ட 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த கண்ணுக்குத் தெரியாத எதிரிமீது உலக நாடுகள் ஒன்றிணைந்து மாபெரும் போர் நடத்தி வருகின்றன.
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மிக நீண்ட ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்கு முடங்கி இருந்து சமூக இடைவெளியை பின்பற்றி வருகின்றனர்.
இந்தியா, இதில் இன்னும் வலுவாக போராடுவதற்கு ஏற்ற வகையில் ஐக்கிய அரபு அமீரகம் 7 டன் மருத்துவ பொருட்களை நேற்று அனுப்பி வைத்துள்ளது.
7 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள்
இது குறித்து டெல்லியில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தூதர் அகமது அப்துல் ரகுமான் அல்பன்னா கூறி இருப்பதாவது:-
கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா வலுவாக போராட ஏற்ற விதத்தில் 7 டன் மருத்துவ பொருட்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இது கொரோனா வைரசுக்கு எதிரான போரில் 7 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கு உதவியாக இருக்கும்.
கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த முற்படும் நாடுகளுக்கு முக்கியமான ஆதரவினை வழங்குவதற்கு ஐக்கிய அரபு அமீரகம் கடமைப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்தியாவுக்கு எங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் உதவி என்பது, நாம் இருவரும் பல்லாண்டு காலமாக பகிர்ந்து கொண்டு வந்துள்ள ஆழமான மற்றும் சகோதரத்துவ உறவை அங்கீகரிப்பதாகும்.
கொரோனா வைரஸ் தொற்றை எதிர்ப்பது என்பது முதன்மையான, உலகளாவிய அக்கறை ஆகும். இதில் ஐக்கிய அரபு அமீரகம் மற்ற நாடுகளின் முயற்சிகளை வலுப்படுத்தும் நம்பிக்கையில் செயல்படுகிறது.
இதுவரை ஐக்கிய அரபு அமீரகம் 34 நாடுகளுக்கு 348 டன்களுக்கும் அதிகமான மருத்துவ பொருட்களை அனுப்பி உள்ளது. இது 3 லட்சத்து 48 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கு உதவியாக அமையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களைக் கண்காணிக்க ஆளில்லா விமானம்
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் நகரம், அருப்புக்கோட்டை, திருச்சூலி, சிவகாசி மற்றும் திருத்தாங்கல் ஆகிய இடங்களில் மூன்று கேமரா பொருத்திய ஆளில்லா விமானம் கொண்டு மக்கள் நடமாட்டத்தை போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து பேசிய திருத்தாங்கல் உதவி ஆய்வாளர் துரைப்பாண்டி கூறுகையில், "கள்ளச்சாராயம் தயாரிப்பது போன்ற சட்டவிரோத செயல் மாவட்டத்தின் உட்பகுதியிலும் மரங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளிலுமே நடக்கிறது. இந்த ஆளில்லா விமானங்கள் மூலம் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க முடிகிறது. இதுவரை எந்த சட்ட விரோத நடவடிக்கையும் கண்டறியப்படவில்லை. ஆனால் சிவகாசியில் மைதானத்தில் கிரிக்கெட் விளையாட வந்தவர்களை மட்டும் அங்கிருந்து வெளியேற செய்தோம்" என்றார்.
ஒரு கேமரா பொருத்திய ஆளில்லா விமானம் விருதுநகரிலும் மற்றொன்று அருப்புக்கோட்டை மற்றும் திருச்சூலியிலும் கண்காணிக்கப் பயன்பட்டு கொண்டிருக்கிறது. பிற பகுதிகளுக்கு வரும் நாட்களில் கேமரா பொருத்திய ஆளில்லா விமானம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: