நிஜ காதல் கம்ப்யூட்டர் வைரஸ்: இருபது ஆண்டுகளுக்கு பின் உண்மையை ஒப்புக் கொண்ட நபர் மற்றும் பிற செய்திகள்

நிஜ காதல் கணினி வைரஸ்

உலகின் முதல் மிகப்பெரிய கணினி வைரஸை உருவாக்கிய நபர், தாம் செய்த குற்றத்தை இருபது ஆண்டுகளுக்குப் பின் ஒப்புக் கொண்டுள்ளார். காதல் வைரஸ் என்று அழைக்கப்பட்ட அந்த வைரஸ் கண்டங்களைத் தாண்டி உலகின் பல கணினிகளைத் தாக்கியது.

இப்போது 44 வயதாகும் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒனெல் டி கஸ்மேன் எனும் அந்த நபர் தாம் அந்த காதல் வைரஸை சர்வதேச அளவில் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கவில்லை, பிறர் கணினி பாஸ்வேர்டை திருடி இணையத்தை இலவசமாக பயன்படுத்தவே அந்த வைரஸை உருவாக்கினேன் என்கிறார்.

தாம் உருவாக்கிய வைரஸ் கண்டங்களைத் தாண்டி பல கணினிகளைத் தாக்கியதற்காக தாம் வருந்துவதாகக் கூறுகிறார். மே 4, 2000 ஆம் ஆண்டு அந்த வைரஸ் பரவியது. உங்களுக்கான காதல் கடிதம் (LOVE-LETTER-FOR-YOU) என்று மின்னஞ்சல் வரும். அதை கிளிக் செய்தால் அந்த வைரஸை கணினியைத் தாக்கும். இப்படியாக அந்த வைரஸ் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த வைரஸ் ஒரே நாளில் 4.5 கோடி கணினிகளைத் தாக்கியது.

தடுப்பூசி இல்லாமல் போகும் அபாயத்தில் பல லட்சம் குழந்தைகள்

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு "உயிர் காக்கும் தடுப்பூசிகள்" கிடைக்காமல் போகும் அபாயம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவிட்-19 நோய்த்தொற்று பரவலால் உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மருந்துகளை விநியோகிக்க முடியாத சூழ்நிலை நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அத்தியாவசிய தடுப்பூசிகளின் இருப்பு முற்றிலும் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ்: ஒரே நாளில் அதிகபட்ச எண்ணிக்கை அதிகரிப்பு

தமிழகத்தில் புதிதாக 231 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2757ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டவர்களில் 174 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

இன்று தொற்று உறுதியான 174 பேரில் மூன்றரை, நான்கு மற்றும் ஆறு வயதாகும் மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் பிறந்து 14 நாட்களே ஆன, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் குழந்தையும் அடக்கம்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் ஊரடங்கு - அரசு அறிவித்துள்ள தளர்வுகள் என்ன?

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த, மத்திய அரசு நீடித்த ஊரடங்கை வரும் மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்க தமிழக அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு தனியாகவும், பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளுக்கு தனியாகவும் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

பள்ளிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் செயல்படுவதில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த தடைகள் பின்பற்றப்படும் என்றும் வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள், கேளிக்கை கூடங்கள், உயிரியல் பூங்காக்கள், தங்கும் விடுதிகள் போன்றவை இயங்க தடை நீடிக்கவேண்டும் என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் இலங்கையில் உண்டாகியுள்ள அரசியல் குழப்பம்

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், கோவிட்-19 தொற்றின் பரவலால் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் மார்ச் 2ஆம் தேதி ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷவினால் கலைக்கப்பட்டதுடன், ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வேட்பு மனுத் தாக்கல் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பித்திருந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: