கொரோனா அச்சம்: முதியவரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் - அடக்கம் செய்த தன்னார்வலர்கள்

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்

இந்து தமிழ் திசை - முதியவர் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், அடக்கம் செய்த தன்னார்வலர்கள்

மதுரையில் கொரோனா வைரஸ் அச்சத்தால் சீல் வைக்கப்பட்ட பகுதியில் உயிரிழந்த முதியவரின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்த நிலையில், தன்னார்வலர்கள் முன்னின்று அடக்கம் செய்ததாக இந்து தமிழ் திசை நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் மதுரையில் செல்லூர் பகுதியில் சில தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டிருந்தது.

இப்பகுதிகளில் செஞ்சிலுவை சங்கத்தினர் மற்றும் சில தன்னார்வு அமைப்பினர் கொரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சீல் வைக்கப்பட்ட பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் உடல்நலக்குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்.

இறந்தவரின் உடலை வீட்டுக்கு எடுத்த வர வேண்டும் என அவரின் மனைவி விருப்பம் தெரிவித்தார்.

இதையடுத்து முறையான அனுமதி பெற்று அவரது உடல் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது.

சமூகஇடைவெளியை பின்பற்றி அவரது உடலை பார்க்க உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் யாரும் கொரோனா அச்சத்தால் வரவில்லை. இறந்தவரின் மனைவி மட்டுமே வந்தார்.

உறவினர்கள் யாரும் வராத சூழலில், தன்னார்வலர்களே இறந்தவரின் உடலை மயானத்துக்கு எடுத்து சென்றனர். இறந்தவரின் மனைவியை மயானத்துக்கு அழைத்து சென்று இறுதி சடங்குகள் செய்ய ஏற்பாடு செய்தனர் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி - மக்களை கண்காணிக்க ரோபோ

சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை கண்காணிப்பதற்காக கேமராவுடன் கூடிய ரோபோவை காவல்துறை அறிமுகம் செய்துள்ளது என்கிறது தினமணியின் செய்தி.

கொரோனா பாதித்தோர் அதிக அளவில் வசிக்கும் பகுதிகளை பெருநகர சென்னை மாநகராட்சி தனிமைப்படுத்தி வருகிறது. வேறு நபர்களுக்கு கொரோனா பரவிடக்கூடாது என்பதற்காக மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது. இங்கு அந்நியர்கள் செல்வதை தடுக்கும் வகையிலும் அந்தப் பகுதியில் இருப்பவர்கள் வெளியே செல்லாமல் இருக்கும் வகையிலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்த பகுதிகளை கண்காணிக்கும் வகையில் சென்னை பெருநகர காவல்துறை கண்காணிப்பு கேமராவுடன் ரோபோவை வியாழக்கிழமை அறிமுகம் செய்தது. நான்கு சக்கரங்களுடன் இயங்கும் வகையில் சிறிய கார் வடிவில் இருக்கும் இந்த ரோபோவின் முன்பகுதியில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கேமராவில் பதிவாகும் காட்சியை நேரலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வெளியே இருக்கும் காவலர், தன்னிடம் இருக்கும் ஒளி திரையில் பார்த்து, அங்கிருந்து ரோபோவை இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என மேலும் விவரிக்கிறது அச்செய்தி.

டைம்ஸ் ஆஃப் இந்தியா - கர்நாடகாவில் 4-ஆம் தேதி மதுபான கடைகள் திறக்கப்படலாம்

இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் மே 4-ஆம் தேதியன்று முடிவடையும் நிலையில், கோவிட்-19 தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் வணிக மற்றும் தொழில்துறை ரீதியிலான பணிகளை தொடங்கிட கர்நாடக அரசு விருப்பம் காட்டுவதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

கோவிட்-19 பாதிப்பற்ற பகுதிகளில் ஏற்கனவே சில தொழில் துறைகள் இயங்க அனுமதி தரப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதிப்பற்ற பகுதிகளில் மதுபான கடைகள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட வணிகங்களை மீண்டும் இயங்குவதற்கு அனுமதிக்க கர்நாடக மாநில அரசு திட்டமிட்டு வருகிறது.

அதேவேளையில் கொரோனா பாதிப்புள்ள பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பற்ற மற்றும் பாதிப்பு உள்ள பின்பற்ற வேண்டியவை குறித்த வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிடுவதற்கு மாநில அரசு காத்திருக்கிறது.

இந்த வாரத்தின் தொடக்கம் முதல், சில ஐ.டி. சார்ந்த நிறுவனங்கள், மற்றும் பிற நிறுவனங்கள் சில பணியாற்ற கர்நாடக மாநில அரசு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியிருந்தது என மேலும் விவரிக்கிறது அச்செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: