கொரோனா வைரஸ்: சென்னையில் 900ஐத் தாண்டிய கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில் 138 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் ஒரே நாளில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் நோயாளிகள் அதிகரிப்பது இதுவே முதல் முறை.

இதன் மூலம் தமிழ்நாட்டில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,323ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை (மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருபவர்களின் எண்ணிக்கை) நேற்று 922 ஆக இருந்த நிலையில், இன்று 1035ஆக உயர்ந்துள்ளது. இன்று நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பவர்களில் 97 பேர் ஆண்கள். 64 பேர் பெண்கள்.

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து கொரோனோவிலிருந்து குணமடைந்து 48 பேர் வெளியேறியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,258ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றால் இன்று உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. ஆகவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக நீடிக்கிறது.

இன்று நோய்த் தொற்று ஏற்பட்டவர்களில் 138 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால், சென்னையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 906ஆக உயர்ந்துள்ளது.

மதுரை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா 5 பேரும் காஞ்சிபுரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா மூன்று பேரும், பெரம்பலூரில் இருவரும் அரியலூர், கடலூர், ராணிப்பேட்டை, சேலம் மாவட்டங்களில் தலா ஒருவரும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது தமிழ்நாட்டில் ஈரோடு, கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நோயாளிகள் யாரும் இல்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: