மது போதைக்காக கிருமிநாசினியைக் குடித்த கோவை இளைஞர் பலி

மது

பட மூலாதாரம், Getty Images

கோவையில் மதுபோதைக்கு அடிமையான வாலிபர் கைகளை கழுவ பயன்படுத்தப்படும் கிருமிநாசினியை (சானிடைசர்) குடித்ததால் உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் அமலாகியுள்ள ஊரடங்கால் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள சூலூரில் வசித்து வந்த 35 வயதாகும் இளைஞர் ஒருவர், கடந்த இரண்டு நாட்களாக கிருமிநாசினியை குடித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை வாந்தி எடுத்தவரை அவரது மனைவி கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

"உயிரிழந்த நபர் திருப்பூரைச் சேர்ந்தவர். கடந்த ஒரு மாதமாக தனது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகளோடு சூலூரில் வசித்து வந்துள்ளார். கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் வேலை செய்து வந்த இவருக்கு, அவரது நிறுவனத்தில் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள கிருமிநாசினி வழங்கப்பட்டுள்ளது. மது பழக்கத்திற்கு அடிமையான இவர், மது கிடைக்காததால் கடந்த இரண்டு நாட்களாக கிருமிநாசினியை குடித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று காலை கிருமிநாசினியை குடித்திருக்கிறார். அதன் விளைவாக இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளனர்," என போலீசார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சூலூர் காவல்நிலைய இதை போலீசார் சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: