தாஹிர் ஹுசேன்: டெல்லி கலவரத்திற்கு பொறுப்பாளியா, கலவரத்தால் பாதிக்கப்பட்டவரா?

- எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
- பதவி, பிபிசி இந்தி
கடந்த ஐந்து நாட்களாக டெல்லியின் சாந்த் பாக் பகுதியில் அமைதி பறிபோய்விட்டது. அனைவரின் முகத்திலும் பதற்றம் நிலவுகிறது. இரவில் இந்தப் பகுதியின் நிலைமை எப்படி இருக்கும்? மக்கள் நிம்மதியாக உறங்க முடியுமா? அல்லது அச்சத்தின் பிடியில் கண் விழித்திருக்கும் மக்கள் ஆபத்தை தவிர்ப்பதற்காக காத்திருப்பார்களா?
தெருக்களில் சிதறிய கற்கள் மற்றும் செங்கல் துண்டுகள், எரிந்த கடைகளை பார்க்கும்போது அச்சம், கசப்பு, வெறுப்பு என கலவையான எண்ணங்கள் மக்களின் இதயங்களில் உறைந்து போயிருக்கின்றன என்பது தெரிகிறது.
கராவல் பாக் செல்லும் பாதையில் இடிபாடுகள் குவிந்து கிடக்கின்றன. ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினரின் குரல் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறது.
யாரும் சாலையில் நிற்க வேண்டாம், வீடுகளுக்குள் இருக்க வேண்டும் என்ற குரலைக் கேட்டு அனைவரும் வீடுகளுக்குள் சென்று முடங்கிவிட்டனர். இந்துக்களின் சில குழுக்கள் ஒருபுறமும், முஸ்லிம்களின் குழுவினர் மறுபுறமும் உள்ளனர். இந்த இரண்டிற்கும் இடையே ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் முகமது தாஹிர் ஹுசேன் வீடு உள்ளது.
தாஹிர் ஹுசேன் மீதான குற்றச்சாட்டும் கைதும்
டெல்லி மதக் கலவரத்தில் இந்திய உளவுத் துறையில் பணியாற்றும் அங்கித் சர்மா கொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தாஹிர் ஹுசேன் என்பவர் மீது கொலை மற்றும் வன்முறையில் தீவைத்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அங்கித் சர்மா கொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தாஹிர் ஹுசேனுக்கு சொந்தமான தொழிற்சாலையில், டெல்லியின் தடயவியல் துறையினர் ஆதாரங்களை சேகரித்தனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து தாஹிர் ஹுசேன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி வியாழக்கிழமை)அறிவித்தது.
கராவல் நகரில் உள்ள தாஹிர் ஹுசேனின் வீட்டிலிருந்து 20 அடி முன்னே சென்றால் ஒரு வாய்க்கால் உள்ளது, அங்குதான், உளவுத் துறை ஊழியர் அங்கித் சர்மாவின் உடல் புதன்கிழமையன்று கண்டுபிடிக்கப்பட்டது.

தாஹிர் ஹுசேனின் உத்தரவின் பேரில் இப்பகுதியின் அமைதி சீர்குலைந்து போனதாக இந்துக்கள் கூறுகிறார்கள். ஃபார்மா நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஆஷிஷ் தியாகி கராவல் நகரைச் சேர்ந்தவர். பிப்ரவரி 24 மற்றும் 25 தேதிகளில் தாஹிர் ஹுசேன் வீட்டின் கூரையில் இருந்து பெட்ரோல் குண்டுகள் மற்றும் கற்கள் வீசப்பட்டதாக ஆஷிஷ் கூறுகிறார்.
"கற்களையும் பெட்ரோல் குண்டுகளையும் வீசுவதை நான் என் கண்களால் பார்த்தேன். துப்பாக்கிச் சூடும் நடந்தது. ஆனால் அதை செய்தவர்களின் கூட்டத்தில் தாஹிர் ஹுசேனை நான் பார்க்கவில்லை. ஆனால், அவரும் அந்த கும்பலில் இருந்ததாக மக்கள் சொல்கிறார்கள்,'' என்கிறார் ஆஷிஷ்.
அமைதியை உறுதி செய்யும் ஒற்றுமைக் குழுவான 'டெல்லி அமன் ஏக்தா கமிட்டி' என்ற குழுவின் துணைத் தலைவர் யூனுஸ் சலீம் இந்த பகுதியைச் சேர்ந்தவர். தாஹிர் ஹுசேனின் வீட்டிற்குள் கலவரக்காரர்கள் நுழைந்ததாக அவர் கூறுகிறார்.
"கலகக்காரர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்ல முடியாது. உண்மை என்னவென்றால், தாஹிர் காவல்துறையினரால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவரை வெளியேற்றாமல் இருந்திருந்தால், கலகக்காரர்களே அவரைக் கொன்றிருப்பார்கள். அவர் பிப்ரவரி 24 அன்று இந்த வீட்டில்தான் இருந்தார், ஆனால் அவர் வன்முறையாளர்களிடம் சிக்கிக்கொண்டார்," என்று சொல்கிறார் ஆஷீஷ்.

இந்துக்கள் - முஸ்லிம்கள் இடையே கருத்து வேறுபாடு
தாஹிர் ஹுசேன் விவகாரம் தொடர்பாக இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. தாஹிர் ஹுசேன் ஒரு நல்ல மனிதர் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள்.
மறுபுறம், பிபிசியிடம் பேசிய இந்துக்கள் அனைவருமே, தாஹிர் ஹுசேன் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறுகிறார்கள். முஸ்லிம்கள், பாஜக தலைவர் கபில் மிஸ்ரா மீது கோபத்தில் இருந்தால், அப்பகுதியில் உள்ள இந்துக்களோ தாஹிர் ஹுசேன் மீது சீற்றத்தில் இருக்கின்றனர்.
ஆம் ஆத்மி கட்சியில் கபில் மிஸ்ரா இருந்தபோது, கராவல் நகர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015 சட்டமன்றத் தேர்தலில் கபில் மிஸ்ரா வெற்றி பெற்றதற்கு தாஹிர் ஹுசேன்தான் காரணம் என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.
"இந்து சகோதரர்கள் தாஹிர் ஹுசேன் மீது ஏன் கோபப்படுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை" என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த முகமது இக்ரார் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
கபில் மிஸ்ராவுக்கு ஆதரவு கொடுத்து, முஸ்லிகளிடையே வாக்கு சேகரித்து, அவரை எம்.எல்.ஏ.வாக வெற்றிப் பெற செய்தார் தாஹிர் ஹுசேன். 2015 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தாஹிர் ஹுசேனின் இந்த வீட்டில்தான் கபில் மிஸ்ராவுக்கு தேர்தல் அலுவலகம் இருந்தது. இப்போது அவர் பாஜகவுக்குச் சென்று விட்டதால், தாஹிர் கலவரத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறுகிறார்.''
தாஹிர் ஹுசேனுடன் பிபிசி நிருபர் விகாஸ் திரிவேதி பேசினார். 2015 டெல்லி சட்டமன்றத் தேர்தல்களின்போது, தனது சொந்த வீட்டில் தான் கபில் மிஸ்ரா தேர்தல் பிரசார அலுவலகம் வைத்திருந்தார் என்றும் கூறினார். கபில் மிஸ்ராவின் வெற்றியில் தன்னுடைய பங்கு முக்கியமானது, அது அனைவருக்கும் தெரியும் என்றும் தாஹிர் கூறுகிறார்.
தாஹிர் ஹுசேன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், அவற்றின் மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதே பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள தயால்பூர் காவல் நிலைய எஸ்.எச்.ஓ தாரகேஸ்வர் சிங் கூறினார்.

முழுப் பகுதியிலும் மதத்தின் அடிப்படையில் மக்கள் இருவேறு துருவங்களாக பிரிந்திருக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. அங்கித் சர்மாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து சூழ்நிலை மேலும் பதற்றமாகிவிட்டது. கராவல் நகர் சாலையில் இந்துக்களின் ஒரு குழு காலனியின் நுழைவாயிலை மூடிவிட்டு அங்கு நிற்கிறது.
அங்கித் சர்மாவைப் பற்றி விசாரித்தோம். அங்கித் சர்மாவை பலர் இழுத்துச் செல்வதை நேரில் கண்ட்தாக பலரும் கூறுகின்றனர். இழுத்துச் செல்வதை பார்த்த பிறகும் அவரை ஏன் காப்பாற்றவில்லை? என்ற கேள்வியை எழுப்பினோம். இந்த கேள்விக்கு பதிலளிக்கும் மூல்சந்த் என்ற ஒரு பெரியவர், "அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது" என்று கூறுகிறார், அவர்களிடம் ஆயுதங்களும் இருந்தன, அதைப் பார்த்தாலே பயமாக இருந்தது என்றும் அவர் சொல்கிறார்.
தாஹிர் ஹுசேனின் வீட்டின் முன் ஷ்யாம் டீ ஸ்டால் என்ற தேநீர் கடை உள்ளது. இந்த கடையின் ஷட்டர் பாதி மூடிக் கிடக்கிறது. உட்புறம் இருந்து அழுகைக் குரல் ஒலிக்கிறது. நாங்கள் உள்ளே சென்று பார்த்தோம்.
மனைவி தர்மவந்தி, தனது கணவர் ஷியாமை சமதானப்படுத்திக் கொண்டிருக்கிறார். தரையில் அமர்ந்திருக்கும் ஷியாமின் தோளை தட்டிக் கொடுக்கிறார் மனைவி. அவரது கடை சிதறிக்கிடக்கிறது. அங்கு தாக்குதல் நடந்துள்ளது என்பது முதல் பார்வையிலேயே தெரிந்துவிட்டது. இந்தக் கடை முன்பக்கத்திலிருந்து எரிக்கப்பட்டுள்ளது. இது பற்றி விசாரித்தால், அவர்களும் தாஹிர் ஹுசேனின் வீட்டை நோக்கி கைகாட்டுகிறார்கள்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
ஷியாமின் தேநீர்க் கடையில் இருந்து 30 அடி தொலைவில் இருக்கிறார் ராஹத் அலி. அவரிடம் தாஹிர் ஹுசேன் பற்றி கேட்டபோது, அவர் உடைந்துப் போய் கதறி அழுகிறார். "காவல்துறை எங்கே என்று ஏன் யாரும் கேட்கவில்லை?" என்பதே அவரது பிரதான கேள்வியாக இருக்கிறது. தாஹிர் ஹுசேன் வீட்டின் கூரையில் இருந்து இரண்டு நாட்களாக செங்கல், கல் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசி எறியப்பட்டதாக சொல்கிறார்களே, அப்போது காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது? காவல்துறை ஏன் வரவில்லை? நாங்கள் பல முறை போலீஸை அழைத்தோம்.
என் வீட்டில் இருந்த கண்ணாடிகள் சிதறிப் போய் கிடக்கின்றன. என் குழந்தைகள் அவர்களுடைய மாமாவின் வீட்டில் இருக்கிறார்கள். எங்களுடைய சொந்த வீட்டிலிருந்தே வெளியேற்றப்படும் சூழ்நிலை வந்துவிட்டது. நான் யாரைக் குறை சொல்வது? கபில் மிஸ்ராவையா அல்லது வேறு யாரையாவது குற்றம் சொல்லட்டுமா? எது எப்படி இருந்தாலும், வன்முறையைத் தடுப்பது காவல்துறையின் வேலைதானே?" என்று கேள்விக் கணைகளை வரிசையாகத் தொடுக்கிறார் ராஹத் அலி.

கபில் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து முஸ்லிம்களும் கூறுகிறார்கள். மறுபுறம், வன்முறைக் கும்பலுக்கு தாஹிர் ஹுசேன் உதவியதாக இந்துக்கள் கூறுகிறார்கள். சில ஊடக நிறுவனங்கள் மீதும் முஸ்லிம் பகுதிகளில் பெரிய அளவில் கோபம் உள்ளது. "சில தொலைக்காட்சி சேனல்கள் கலவரங்களுக்கு முஸ்லிம்களை பொறுப்பாக்குகின்றன. எங்களை பயங்கரவாதிகளைப் போல சித்தரிக்கிறார்கள்" என்று சொல்கிறார் ஷோயப் என்ற இளைஞர்.
ஒரு சுவரில் இருக்கும் அசாதுதீன் ஒவைசியின் படத்தைக் காட்டி, "இவர்தான் எங்கள் உண்மையான தலைவர். இவர்தான் எங்களுக்காக பேசுகிறார், எங்களுடைய வார்த்தைகளை முன்னெடுத்துச் சொல்கிறார். நாடாளுமன்றம், சாலையில் போராட்டம் என அனைத்திற்கும் எங்களுக்கு ஆதரவாக நிற்பவர் இவர்தான்" என்கிறார் ஷோயப்.
இதைச் சொல்லிவிட்டு முஸ்தஃபாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி நகருக்கு அழைத்துச் செல்கிறார் ஷோயப். முஸ்லிம்கள் பெருமளவில் வாழும் இந்த பகுதியில் ஒரு பழங்கால சிவன் கோயில் உள்ளது. "இவ்வளவு நடந்தபோதிலும், நாங்கள் இந்த கோவிலைப் பாதுகாப்பாக வைத்திருந்தோம்" என்று ஷோயப் கூறுகிறார். இங்கு எல்லா இடங்களிலும் முஸ்லிம்கள் உள்ளனர்.
கலவரக்காரர்கள் எங்கள் மசூதிகளை என்ன செய்தார்கள்? இமாமைத் தாக்கி, மசூதிகளில் காவிக் கொடிகளை வைத்தார்கள். நாங்கள் என்ன பாகிஸ்தானியரா? எங்களை பாகிஸ்தானியர்கள் என்று அடிக்கடி சொல்லி, வம்புக்கு இழுக்கிறார்கள். கபில் மிஸ்ராவினால்தான் இந்த போக்கு மிகவும் அதிகரித்துள்ளது. டெல்லி காவல்துறை சரியான நேரத்தில் வந்திருந்தால், விஷயங்கள் இந்த அளவு மோசமடைந்திருக்காது.

நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால், அவரது பக்கத்து வீட்டில் இருந்த முஸ்லிம் குடும்பம் அங்கிருந்து சென்றுவிட்டதாக என்று ஆஷிஷ் தியாகி வருத்தப்படுகிறார்.
"நாங்கள் ஒன்றாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்." நாங்கள் ஒருவருக்கொருவர் ஒன்றாக உதவியாக இருந்தால்தான் தீர்வு கிடைக்கும். இயல்பான சமயத்தில் அண்டை வீட்டாராக இருந்து கொண்டு நிலைமை மோசமடைந்த உடனே, இந்து மற்றும் முஸ்லிமாக மாறினால் அது சரியா? பாதுகாப்புத் தேடி தங்கள் சமூகத்தினர் இருக்கும் இடங்களுக்கு தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்தால், இந்த ஓட்டம் என்றுமே நிற்காது. அண்டை வீட்டார்கள் அச்சப்படாமல் இங்கேயே இருக்க வேண்டும், நாங்கள் அவர்களுடன், அவர்களுக்கு பாதுகாப்பாக எப்போதும் இருப்போம்".
ஆஷிஷின் விருப்பம் நிறைவேறவில்லை. ராஹத் அலி தனது அண்டை வீட்டில் வசிக்கும் தீபக் வேறு இடத்திற்கு செல்ல உதவினார், இதனால் அவரது உயிர் காப்பாற்றப்படும் என்று நினைத்தார். முழுப் பகுதியும் இப்போது இந்துக்களாகவும் முஸ்லிம்களாகவும் பிரிந்து நிற்கிறது. பல தசாப்த காலமாக பக்கத்து வீட்டுக்காரர்களாக இருந்தவர்கள், இன்று இந்து முஸ்லிம் என்று வேறுபட்டு நிற்கின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













