டெல்லி வன்முறைக்கும், 1984 சீக்கிய கலவரத்திற்கும் என்ன தொடர்பு?

பட மூலாதாரம், Getty Images
"நாங்கள் மீண்டும் 1984 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கொடூரச் செயல்களை அனுமதிக்க மாட்டோம். குறைந்தபட்சம் இந்த நீதிமன்றம் இருக்கும்வரை கண்டிப்பாக அவ்வாறு நடக்காது."
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதர் புதன்கிழமை மத்திய அரசையும் டெல்லி அரசையும் கடிந்துக் கொள்ளும்போது இவ்வாறு கூறினார்.
நீதிபதி முரளிதர் குறிப்பிட்ட 1984ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில், டெல்லியில் மட்டும் 3000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
மறுபுறம் சிவசேனை கட்சி டெல்லியில் தற்போதைய வன்முறையை 1984 கலவரங்களுடன் ஒப்பிட்டது. "டெல்லியின் தற்போதைய 'திகில் படம்', 1984 கலவரத்தின் கொடூரத்தை நினைவுபடுத்துகிறது. இந்த வன்முறையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிய வேண்டும்" என்று சிவசேன தெரிவித்திருக்கிறது.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் நடைபெற்று 36 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி இவ்வளவு பெரிய அளவிலான வன்முறையை எதிர்கொண்டிருக்கிறது. ஆனால் உண்மையில் 1984 கலவரத்துக்கும் தற்போதைய வன்முறைக்கும் ஏதேனும் ஒற்றுமை இருக்கிறதா?
அப்படி இருந்தால், அன்றைய மற்றும் இன்றைய நிலைமையில் காணப்படும் வித்தியாசம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
1984 ஆம் ஆண்டில், `தி இந்தியன் எக்ஸ்பிரஸ்` ஆங்கில செய்தித்தாளில் குற்றப்பிரிவு செய்தியாளராக பணியாற்றியவர் சஞ்சய் சூரி. அவர் 1984 கலவரங்களின்போது, அவற்றைப் பற்றிய செய்திகளை விரிவாக கொடுத்தார். மேலும் அதன் கொடூரங்களை நேரில் கண்ட சாட்சியாகவும் இருந்தார்.
பிபிசி செய்தியாளர் சிந்துவாசினியிடம் பேசிய சூரி, "ஒவ்வொரு கலவரமும் வித்தியாசமானவை. இரண்டு கலவரங்களையும் எந்த விதத்திலும் ஒப்பீடு செய்ய முடியாது. ஆனால் ஒவ்வொரு கலவரத்திலும் சட்ட அமைப்பு முற்றிலுமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது என்பதுதான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது" என்றார்.
"1984 ல் பெரிய அளவிலான வன்முறை நடந்தது. அப்போது 3,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தற்போது 38 பேர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால் மரணங்களின் எண்ணிக்கையை வைத்து தற்போது கலவரத்தின் கொடூரத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. கலவரத்தில் ஒர் உயிர் பறிபோனாலும் அல்லது காயமடைந்தாலும் மக்களின் அச்சம் அதிகமாகிவிடும்." என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
பிபிசி செய்தியாளர் செளதிக் பிஸ்வாஸிடம் பேசிய ப்ரவுன் பல்கலைக்கழகத்தின், அரசியல் அறிவியல் பேராசிரியர் அஷுடோஷ் வர்ஷ்னே, "1984 மற்றும் 2002ஆம் ஆண்டில் நடைபெற்றது போல் ஒரு குறிப்பிட்ட இனத்தை நோக்கி நடத்தப்படும் வன்முறையின் தொடர்ச்சியாக இது தெரிகிறது," என்றார்.
இவர் இந்தியாவில் மதரீதியாக நடைபெற்ற கலவரங்கள் பலவற்றை ஆராய்ச்சி செய்தவர்.
"டெல்லி மற்றும் குஜராத் கலவரம் அளவிற்கு இது இன்னும் செல்லவில்லை என்றாலும் மேலும் வன்முறைகள் தீவிரமாவதை தடுப்பதே நமது தற்போதைய கடமை," என்கிறார் அஷுடோஷ்.
"டெல்லி தேர்தல்களில், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பெயரில் மக்களை ஒன்றுதிரட்ட முயன்றனர், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியது, அயோத்தியாவில் புதிய கோயில் கட்டுவது போன்ற விஷயங்களையும் அவர்கள் தேர்தல்களில் பயன்படுத்தினர். பாஜகவின் தலைவர்கள் வெறுப்பு பேச்சுக்களை தயங்காமல் பேசி வந்தனர். அவர்கள் தேர்தல் அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்டனர். ஷாஹின் பாக் போராட்டக்காரர்கள் தொடர்ந்து துரோகிகள் என விமர்சிக்கப்பட்டனர்,"
"இது வாட்சப் குழுக்கள், முகநூல் பக்கங்களில் வெளிப்படும் வெறுப்பை சகஜமாக்குவது போல் இருந்தது," என்கிறார் அரசியல் ஆராய்ச்சியாளர் பானு ஜோஷி
போலீசாரின் செயலற்ற நிலை
பிபிசி செய்தியாளர் - சிந்துவாசினி
"1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் மற்றும் அதற்குப் பிறகு" (1984: The Anti Sikh Riots and After) புத்தகத்தை எழுதிய சூரி தனது அன்றைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்: "சீக்கிய எதிர்ப்பு கலவரத்தின் போது, சட்டம் ஒழுங்கு முறை முற்றிலுமாக சீர்குலைந்தது. காவல்துறை முற்றிலும் ஸ்தம்பித்துப்போய்விட்டது. அல்லது, வழக்கத்திற்கு மாறாக காவல்துறையினர் கலகக்காரர்களுடன் கைகோர்த்து, வன்முறையில் ஈடுபட்டார்கள் என்றே கூறலாம்.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களை கண்ணால் கண்ட சாட்சியாக இருந்து வந்த சஞ்சய் சூரியே, டெல்லியில் இன்று நடைபெறும் வன்முறைகளையும், கலவரங்களையும் ஒப்பு நோக்குவதற்கு சரியான தேர்வு. "வன்முறையில் காவல்துறை எவ்வாறு ஈடுபட்டது என்பதை என் கண்களால் பார்த்தேன். வேறொருவர் இந்த விஷயங்களை என்னிடம் சொல்லியிருந்தால் அதை நம்பியிருக்க மாட்டேன். ஆனால் நானாகவே, என் கண்களால் கண்ட காட்சிகளை எப்படி பொய் என்று நம்புவேன்?" என்கிறார் சூரி.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களை நேரில் கண்ட சாட்சியாக விசாரணை ஆணையம் முன் பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளார் சூரி.
டெல்லியில் நடைபெற்ற வன்முறைகளில் காவல்துறையினரின் பங்கு குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. காவல்துறையின் மெத்தனமான நடவடிக்கை குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா மற்றும் அனுராக் தாக்கூர் போன்ற தலைவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் கருத்துக்கள் குறித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாதது, சமூக ஊடகங்களில் வன்முறை குறித்த வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டதை விசாரிக்காதது மற்றும் அது தொடர்பாக உடனடி நடவடிக்கைகளை எடுக்காதது என பணியில் அலட்சியமாக இருந்ததாக டெல்லி போலீசாரை நீதிமன்றம் கண்டித்துள்ளது.
1984 கலவரத்தைப் பற்றிய செய்திகளை வழங்கிய மூத்த பத்திரிகையாளர் ராகுல் பேடி"காவல்துறையின் செயலற்ற தன்மையே, அன்றைய மற்றும் இன்றைய கலவரங்களின் மிகப் பெரிய ஒற்றுமை," என்கிறார்.
"போலீஸ் கலவரங்களில் ஈடுபடுகிறது என்று சொல்வது, அவர்கள் கலவரக்காரர்களுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தத் தொடங்குவதாக அர்த்தமல்ல. கலவரங்களில் காவல்துறை ஈடுபடுவது என்பது, குற்றவாளிகளை கண்டுக் கொள்ளாமல் விட்டுவிடுவது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது. வன்முறைகளை தடுக்காமல் இருப்பது" என்று அவர் கூறுகிறார்.
வன்முறையை கட்டுப்படுத்தாமல் இருப்பது என்பது, கலவரக்காரர்களுக்கு ஊக்கம் கொடுப்பதாக இருக்கும், அவர்களைப் பாதுகாப்பதற்கு சமமானது என்றும் சொல்லலாம்.

பட மூலாதாரம், Getty Images
இப்போது கூட சமூக ஊடகங்களில் இதுபோன்ற பல விஷயங்களை பார்க்க முடிகிறது. நடைபெறும் கலவரங்களிலும், அடிதடிகளிலும் காவல்துறையினர் பார்வையாளர்களாக இருப்பதை பார்க்க முடிகிறது. காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்களும், வன்முறைக் கலவரங்களை நேரில் கண்ட சாட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளனர்.
சீக்கிய எதிர்ப்பு கலவரங்களை உன்னிப்பாக கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் பத்ராவும், இரு கலவரங்களிலும், போலீசாரின் செயல்பாடுகளில் பல ஒற்றுமைகள் இருப்பதாக நம்புகிறார்.
அவரது கருத்துப்படி, "84வது ஆண்டில், தங்கள் முன்னால் நடைபெறும் வன்முறைகளை காவல்துறை எவ்வாறு புறக்கணிக்கிறது என்பதை நான் கண்டேன். இந்த முறையும், காவல்துறையின் அதேபோன்ற செயலற்ற தன்மையை பார்க்க முடிந்தது," என்கிறார்.
கலவரத்தைத் தடுக்க காவல்துறை பக்கச்சார்பற்ற முறையில் செயல்படாதபோது, அரசியல் அறிவியலின் மொழியில் `இது ஒரு இனத்துக்கு எதிரான கலவரம்` என்று அழைக்கப்படுகிறது. டெல்லியில் தற்போதைய வன்முறையிலும் இதேபோன்ற ஒன்று நடந்தது என்று பல அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
நிர்வாகத்தின் குறைபாடு
நிர்வாகம் நினைத்தால், கலவரம் தொடங்குவதற்கு முன்பு நிலைமையைக் கட்டுப்படுத்த முடியும் என்று சஞ்சய் சூரி கூறுகிறார்.
"நிர்வாகத்திடம் அளப்பரிய அதிகாரம், இயந்திரங்கள், போதுமான வளங்களும், வசதிகளும் உள்ளன. எனவே, நிர்வாகம் வன்முறையை நிறுத்தவேண்டும் என உண்மையிலேயே விரும்பினால், அதை கண்டிப்பாக செய்ய முடியும்" என்று சொல்கிறார் சஞ்சய் சூரி.
வன்முறை நடக்கலாம் என்று முன்னறிவிப்பு இருந்தபோதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், கலவரம் கட்டுப்பாட்டை மீறிவிடும் என்பது தெரிந்தும், அரசாங்கமும் நிர்வாகமும் கலவரத்தைத் தடுக்க விரும்பவில்லை என்று சூரி கூறுகிறார்.
"டெல்லியின் நிலைமை, உணர்ச்சிகரமான கருத்துக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் எழுதப்படும், பதியப்படும் மற்றும் பேசப்படும் விஷயங்களைப் பார்த்தாலே, அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து நிர்வாகத்திற்கு புரிந்துவிடும். இருந்தாலும், உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை," என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
சி.ஏ.ஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது சில காலத்திற்கு முன்பு, டெல்லியின் பல பகுதிகளில் மொபைல் இணைய சேவை நிறுத்தப்பட்டது. ஆனால் சமீபத்திய பதற்றமான சூழ்நிலைக்குப் பிறகு இது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இது குறித்தும் கேள்விகள் கேட்கப்படுகின்றன.
"2002 குஜராத் கலவரத்திலும் இதேபோன்ற ஒன்று நடந்தது" என்று ராகுல் பேடி நினைவு கூர்ந்தார். குஜராத் கலவரத்தின்போது ராணுவமும் அழைக்கப்பட்டது, ஆனால் உண்மையில் நடவடிக்கை எடுப்பதற்கான எந்த அதிகாரமும் ராணுவத்திற்கு வழங்கப்படவில்லை.''
1984 ஆம் ஆண்டு கலவரத்தை நினைவு கூர்ந்த பேடி, "அந்த நேரத்தில் நிர்வாகம் வேண்டுமென்றே இதைச் செய்திருந்தது. அது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, இந்திரா காந்தி புதன்கிழமை கொல்லப்பட்டார், சனிக்கிழமை பிற்பகலில் ராணுவத்திற்கு துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடப்பட்டது. ஆனால் அதற்குள் வன்முறைக் கலவரங்களால் அழிவுகள் உச்சக்கட்டத்தை எட்டியிருந்தன."
கலவரத்தின் இந்த டெம்ப்லெட் அதாவது வடிவம் 1984 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது என்று நம்பும் பேடி, அது இப்போது மேம்படுத்தப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது என்று கூறுகிறார்.
உணர்ச்சியை தூண்டும் பேச்சுக்கள்
தலைவர்களின் உணர்சியைத் தூண்டும் கருத்துக்களும் டெல்லி வன்முறையின் பின்னணியில் உள்ள காரணமாக கருதப்படுகின்றன. இந்த கருத்துக்கள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக நீதிமன்றமும் கண்டித்துள்ளது.
1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களின் போதும் உணர்ச்சியைத் தூண்டும் உரைகள் மற்றும் கருத்துக்களுக்கு பஞ்சமில்லை. அன்றும் இன்றும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம் சமூக ஊடகங்கள் மட்டுமே.
சீக்கிய எதிர்ப்பு கலவரத்தை நேரில் கண்ட ஊடகவியலாளர்கள், தற்போது சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகள் வேகமாக பரவுவதாகவும், சமூக ஊடகங்களில் குழுக்களை அமைத்து மக்கள் வதந்திகளை பரப்புவதாகவும் கூறுகின்றனர்.
"இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், அவரது உடல் தீன் மூர்த்தி பவனிற்கு கொண்டு வரப்பட்டது. அந்த நேரத்தில், மக்கள் பேருந்துகளில் அங்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் 'ரத்தத்திற்கு ரத்தத்தின் மூலம் பழிவாங்கப்படும்' என்று முழக்கங்களை எழுப்பினர். இந்த முழக்கங்கள் தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. இதற்குப் பிறகு ரகாப்கஞ்ச் குருத்வாராவிலிருந்து வன்முறை தொடங்கி, டெல்லி முழுவதும் பரவியது.
கலவரங்கள் நடைபெறும் இடங்களில் ஒரு கட்டத்திற்குப் பிறகு நிலைமை சீரடையத் தொடங்கியதும், நிலைமை இயல்பாகிவிடும். ஆனால் அது பாதிக்கப்படாதவர்களுக்கு மட்டுமே. பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதிக்காக காத்திருக்கும் அவர்களது குடும்பங்களுக்கும், வன்முறையும், கலவரங்களும் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிவிடும் என்று சொல்கிறார் சஞ்சய் சூரி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













