திருச்சி கோயிலில் தங்கப் புதையல் கிடைத்தது எப்படி?

பட மூலாதாரம், ANI
திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோயில் வளாகத்தில் நந்தவனம் வைப்பதற்காக நிலத்தை சமன்செய்தபோது, அங்கு பெரும் எண்ணிக்கையில் தங்கக் காசுகள் கிடைத்துள்ளன. இவை எந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை என ஆராயப்பட்டுவருகிறது.
திருவானைக்காவலில் உள்ள புகழ்பெற்ற ஜம்புகேஸ்வரர் கோயிலில், அகிலாண்டேஸ்வரி அம்மன் சந்நிதிக்கு முன்பாக இருக்கும் காலி இடத்தில் பூச்செடிகள் வைப்பதற்காக சமன்செய்யும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
கோயிலின்நிர்வாக அதிகாரி முன்பாக, புதன்கிழமையன்று இந்தப் பணிகள் நடந்தபோது குழிகளை அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது ஒரு அடி ஆழத்தில் பித்தளை போன்ற உலோகத்தால் ஆன குடுவை ஒன்று கிடைத்தது. அந்தக் குடுவையில், பெரும் எண்ணிக்கையில் தங்கக் காசுகள் இருந்தன.

பட மூலாதாரம், ANI
"மொத்தம் 505 காசுகள் கிடைத்துள்ளன. இவற்றில் 504 காசுகள் 3 கிராம் முதல் 3.5 கிராம் வரையிலான எடையுடையவை. ஒரே ஒரு காசு மட்டும் சுமார் பத்து கிராம் எடை உடையது. இதில் அரபு எழுத்துகள் காணப்படுகின்றன. இந்தக் காசுகளின் மொத்த எடை ஒரு கிலோ 716 கிராம்" என கோயிலின் நிர்வாக அதிகாரி மாரியப்பன் பிபிசியிடம் தெரிவித்தார்.
தங்கக் காசுகள் கிடைத்த விவகாரம் உடனடியாக வருவாய்த் துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. வருவாய் அதிகாரிகள் அந்தக் காசுகளைப் பெற்று தற்போது மாவட்டக் கருவூலத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். அந்தக் காசுகள் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை என்பதை மாநில தொல்லியல் துறை அதிகாரிகள் விரைவில் ஆய்வு செய்யவிருக்கின்றனர்.

பட மூலாதாரம், ANI
இந்தக் காசுகள் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருக்கக்கூடுமென பழங்கால நாணயங்களை சேகரிப்பவரும் ஆய்வாளருமான 'பழங்காசு' ஸ்ரீநிவாசனிடம் கேட்டபோது, "3 முதல் 3.5 கிராம் எடையுடைய காசுகள் வராகன்கள் எனப்படும். இவை விஜயநகர ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவை. துவக்கத்தில் பன்றியின் உருவம் பொறிக்கப்பட்டிருந்ததால், அவை வராகன்கள் என்று அழைக்கப்பட்டன.
அதன் பிறகு, வேறு உருவம் பொறிக்கப்பட்டும் காசுகள் வெளியாயின. ஒன்று இவை விஜயநகர அரசர்கள் வெளியிட்ட காசுகளாக இருக்க வேண்டும். அல்லது கோனேரிராயன் என ஒரு விஜயநகர ஆளுநர் இருந்தார். அவர் வெளியிட்ட காசுகளாகவும் இருக்கலாம். அரபு எழுத்துகள் பொறிக்கப்பட்ட காசு பாமினி சுல்தான்களுடையதாக இருக்கலாம்" என்று தெரிவித்தார்.
இந்தப் புதையல் கிடத்துள்ள ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோவில், தமிழகத்தின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்று. பராந்தகச் சோழன் கால கல்வெட்டு உட்பட 156 கல்வெட்டுகள் இந்தக் கோயிலில் கிடைத்துள்ளன. ஹொய்சாள மன்னர்கள், விஜயநகர அரசர்கள், மதுரை நாயக்கர்கள் இந்தக் கோயில்களுக்கு திருப்பணிகளைச் செய்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













