குடியுரிமை திருத்த சட்டம்: 'தமிழக முதல்வர் நம்பிக்கை கொடுத்துள்ளார்' - இஸ்லாமிய அமைப்பினர்

இஸ்லாமிய அமைப்புகளோடு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்திய பேச்சுவார்த்தையில், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து விரைவில் நல்ல முடிவை அறிவிக்கவுள்ளதாக வாக்குறுதி அளித்துள்ளதால், தங்களது போராட்டம் வெற்றியுடன் முடிவடையும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
வியாழனன்று சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்தவகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை விளக்கும் ஆவணங்கள் அளித்ததாகவும், முதல்வர் நல்ல முடிவை அறிவிக்கவுள்ளதாக நம்பிக்கை கொடுத்தார் என்றும் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு மாத காலமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

15வது நாளை எட்டியிருக்கும் வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் பல பெண்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வண்ணாரப்பேட்டை போராட்டம் தொடங்கியது எப்படி?
முன்னதாக, பிப்ரவரி 14ம் தேதி இரவு வண்ணாரபேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைக் கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். சுமார் 120 பேர் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து போராட்டம் தொடங்கியது. அன்று இரவே கைதானவர்கள் விடுதலை செய்யப்பட்டும், போராட்டம் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியது.
பிப்ரவரி 15ம் தேதி தமிழ்நாடு அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர் சார்பாக, முதல்வருடன் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையின்போது, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய கேள்விகள் குறித்து விளக்கினர்.
அதேபோல குடியுரிமை சட்டம் காரணமாக இஸ்லாமியர்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது என்றும் விளக்கியதாக செய்தியாளர் சந்திப்பில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

பிப்ரவரி 19ம் தேதி சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த திருத்த சட்டத்தால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் யாரும் தமிழகத்தில் இல்லை என முதல்வர் பேசினார்.
யாரவது பாதிக்கப்பட்டிருந்தால் அடையாளம் காட்டவேண்டும் என்றும் அதற்கான தீர்வை தமிழக அரசு பெற்றுத்தரும் என்றார். அதேநேரம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் கொண்டுவரவேண்டும் என திமுக விடுத்த வேண்டுகோளை சரியான நேரத்தில் பரிசீலிப்பதாக அவைத்தலைவர் தனபால் தெரிவித்தார்.
பின்னர், தேசிய மக்கள் தொகை கண்ககெடுப்பில் சர்ச்சைக்குரிய ஆறு கேள்விகள் கேட்கக்கூடாது என எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக அறிக்கை விடுத்தனர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
இருந்தபோதும், சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரவில்லை என்பதால், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். சட்டமன்ற வளாகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து இஸ்லாமியர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர்.
சென்னை உயர் நீதிமன்றம் பேரணிக்கு தடை விதித்ததால், பிப்ரவரி 20ம் தேதி வாலாஜா சாலையில் அமைதி வழியில் பேரணி நடைபெற்றது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் எதிர்க்கட்சியினர், சமூக ஆர்வலர்கள், தேசிய கட்சித் தலைவர்கள், பிற மத தலைவர்கள் தினமும் போராட்டம் நடைபெறும் இடங்களில் ஆதரவு தெரிவித்தனர்.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிருந்தா காரத், அய்யா வைகுண்டர் அமைப்பினர், அமமுக கட்சியினர் என பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
சென்னையை அடுத்து, கோவை, கடையநல்லூர், நீலகிரி, வேலூர், சேலம், ராமநாதபுரம், திருச்சி என பிற இடங்களில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. குறிப்பாக, போராட்டத்தில் பெண்கள் தங்களது குழந்தைகளோடு கலந்துகொள்வது அதிகரித்துவருகிறது. இந்நிலையில், தற்போது வண்ணாரப்பேட்டை போராட்டக்குழுவுடன் முதல்வரின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பேச்சுவார்த்தை நம்பிக்கை தருவதாக அமைந்ததாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான கரீம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். ''சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என மீண்டும் எங்கள் கோரிக்கையை வைத்தோம். வண்ணாரப்பேட்டை போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம் என்றும் தெரிவித்தோம். விரைவில் நல்ல தகவலை அறிவிப்பதாக முதல்வர் எங்கள் குழுவினரிடம் தெரிவித்தார். இஸ்லாமியர்கள் அச்சப்படவேண்டாம் என உறுதி கொடுத்துள்ளார்,''என்றார் கரீம்.
வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதல் நாளில் இருந்து பங்கெடுத்த கதீஜா பீவியிடம் பேசினோம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் பலரும் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய சட்ட நுணுக்கங்களை கேட்டுத் தெரிந்துகொள்கின்றனர் என்கிறார்.
''போராட்டத்தில் உள்ளவர்கள் பலரும் இல்லாதரசிகள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், இந்த சட்டம் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என தெளிவாக வாதங்களை முன்வைப்பவர்களாக மாறியுள்ளார்கள். முதல்வருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது மகிழ்ச்சிதான். ஆனால் எங்களின் கோரிக்கை முழுமையாக ஏற்கப்படும்வரை நாங்கள் கலையமாட்டோம்,'' என்கிறார்.

பட மூலாதாரம், JAWAHIRULLAH
ஏப்ரல் மாதம் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, ''தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளோம். மீண்டும் அடுத்த கடிதம் அனுப்புகிறோம் என்கிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எளிமையான மக்கள். முதல்முறையாக உறுதியான கோரிக்கையோடு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என வெளிப்படையாக அறிவித்தால் மட்டும்தான் போராட்டக்காரர்கள் கலைந்து செல்வார்கள்," என்கிறார்.
தமிழக அரசு உறுதியுடன் செயல்பட்டால்தான் தொடர் போராட்டங்கள் முடிவுக்கு வரும் என்று குறிப்பிட்ட ஜவாஹிருல்லா, இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெறுவதால், அதே உணர்வு தமிழகத்திலும் தொடர்கிறது என்கிறார். ''முதல்வர் நம்பிக்கை தரும் வகையில் பேசினார் என்றாலும், எந்த விதமான நடவடிக்கை எடுக்கிறார் என்பதை பொறுத்துத்தான் மக்கள் முடிவு செய்வார்கள்,'' என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













