நரேந்திர மோதி - நிதீஷ்குமார் கூட்டணி: "பிரசாந்த் கிஷோர் நியாயமற்ற தொழில் செய்கிறார்"- ஐக்கிய ஜனதா தளம்

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி: "பிரசாந்த் கிஷோர் நியாயமற்ற தொழில் செய்கிறார்"
ஆட்சி, அதிகார வேட்கை காரணமாகவே பாஜகவுடன் நிதீஷ் குமார் கூட்டணி வைத்துள்ளார் என்று தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோா் குற்றம்சாட்டியுள்ளார்.
பிகாா் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோா் அண்மையில்தான் நீக்கப்பட்டார். இந்நிலையில், அவா் நிதீஷ் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
பாட்னாவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:
ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் நான் இணையும்போது எனது தந்தை ஸ்தானத்தில் நிதீஷ் குமாரை வைத்திருந்தேன். எனவே, அவருக்கு தனிப்பட்ட முறையில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில்தான் நான் பேச மாட்டேன். காந்தியடிகளின் கொள்கைகளைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொண்டு, அவா் பாஜகவுடன் கூட்டணியில் தொடா்வது எனக்கும், அவருக்கும் பிரச்சனை ஏற்படக் காரணமாக அமைந்தது. பாஜகவின் தேர்தல் நடவடிக்கைகள் மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சேயின் கொள்கைகளை ஒத்துள்ளன.
காந்தியடிகள், சோஷலிச தலைவா்கள் ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராம் மனோகா் லோகியா ஆகியோரது கொள்கைகளில் இருந்து மாறுபட மாட்டேன் என்று நிதீஷ் குமாா் எப்போதும் கூறுவாா். ஆனால், கோட்சேவின் கொள்கைகளை ஆதரிக்கும் (பாஜக) நபர்களுடன் அவா் கூட்டணியைத் தொடா்வது எப்படி என்பது தெரியவில்லை? ஏனெனில், காந்திய கொள்கைகளும், கோட்சேவின் கொள்கைகளும் சோ்ந்து பயணிக்க முடியாது. பாஜகவுடன்தான் கூட்டணி என்பதில் நிதீஷ் குமாா் உறுதியாக இருந்தால் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அவா் காந்திய கொள்கைகளை கடைப்பிடிப்பதாகக் கூறக் கூடாது. இது தொடா்பாக எனக்கும், அவருக்கும் இடையே பலமுறை விவாதம் நடைபெற்றுள்ளது. அவா் அவரது யோசனையில் உறுதியாக இருந்தாா். நான் எனது கருத்துகளில் உறுதியாக இருந்தேன். ஆட்சி, அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற வேட்கை காரணமாகவே நிதீஷ் குமாா் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார் என்றார் பிரசாந்த் கிஷோா்.

பட மூலாதாரம், Getty Images
ஐக்கிய ஜனதா தளம் பதிலடி: பிரசாந்த் கிஷோரின் இந்த பேட்டிக்கு ஐக்கிய ஜனதா தளம் பதிலடி கொடுத்துள்ளது. இது தொடா்பாக அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் கே.சி.தியாகி கூறுகையில், 'பிரசாந்த் கிஷோா் அரசியலில் மூழ்கி முத்தெடுக்கும் முயற்சியை விட்டுவிட்டு, தனது வேலையில் கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும். அரசியல் என்பது அவா் நினைக்கும் அளவுக்கு சாதாரண விஷயமில்லை. ஒவ்வோரு தோ்தலிலும் வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் பணியாற்றும் தொழிலைச் செய்து வரும் அவருக்கு என்ன தொழில் தா்மம் இருக்கிறது. அவரது தொழிலே நியாயமற்றது. கடந்த 2014-ஆம் ஆண்டு நரேந்திர மோதியை பிரதமராக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொழில் செய்த போது அவருக்கு இந்த கொள்கைகள் எல்லாம் இல்லையா?' என்று கேள்வி எழுப்பினாா்.


இந்து தமிழ் திசை: "இந்தியாவுக்கு வெங்காயம் விற்போம். கிரிக்கெட் விளையாட மாட்டோமா?" - பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயிப் அக்தர் ஆதங்கம்

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷோயிப் அக்தர் தனது யூடி யூப் சேனலில் கூறியிருப்பதாவது:
இந்தியாவும், பாகிஸ்தானும் டேவிஸ் கோப்பைப் போட்டியில் விளையாடுகின்றன. கபடி விளையாட்டில் இரு அணிகளும் பங்கேற்கின்றன. ஆனால், கிரிக்கெட்டில் மட்டும் ஏன் இந்தியா, பாகிஸ்தான் விளையாடுவதில்லை. இந்தியாவுடன் உறவைப் பாகிஸ்தான் துண்டிக்க முடிவு செய்தால், ஒட்டு மொத்தமாகத் துண்டித்துவிடுங் கள். வர்த்தகத்தையும் நிறுத்த வேண்டும், விளையாட்டையும் நிறுத்த வேண்டும்.
கிரிக்கெட் என்று வரும்போது மட்டும் அரசியலாக்கப்படுகிறது. இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இருநாடுகளிலிருந்து ஏற்றுமதி, இறக்குமதியாகும் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை இரு நாட்டு மக்களும் சாப்பிடுகின்றனர்.
ஆனால், கிரிக்கெட் போட்டிகளை மட்டும் ஏன் நடத்துவதில்லை? இந்தியா, பாகிஸ்தானுக்குச் செல்ல முடியாது, பாகிஸ்தான் இந்தியாவுக்கு செல்ல முடியாது என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.
ஆனால், ஆசியக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை போன்ற போட்டிகள் நடுநிலையான இடங்களில் நடக்கும் போது விளையாடுகிறோம். இதேபோன்று இருதரப்பு தொடர்களை நடத்த முடியாதா?
உலகிலேயே மிகச்சிறந்த விருந்தோம்பல் கொண்ட நாடாக நாங்கள் திகழ்கிறோம். இதை முதலில் பார்த்தது இந்தியாதான்.
சேவாக், சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரிடம் கேளுங்கள். அவர்களை நாங்கள் அதிகமாக விரும்புகிறோம். இரு நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகளால் கிரிக்கெட் பாதிக்கக்கூடாது. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விரைவில் இரு தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடும் என நம்புகிறேன். இரு அணிகளுக்கும் இடையே அந்த போட்டித் தொடர் முக்கியமானதாகவும், கடினமானதாகவும் இருக்கும்.
பாகிஸ்தான் பயணம் மேற் கொள்ளப் பாதுகாப்பான நாடுதான். இந்திய கபடி அணிகூட இங்கு வந்து விளையாடியுள்ளார்கள். எங்களின் அன்பையும்,வரவேற்பையும் பார்த்திருப்பார்கள். வங்கதேச அணி இங்கு வந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியது. ஆனால் இன்னும் சந்தேகம் இருந்தால் நடுநிலையான இடத்தை நான் பரிந்துரை செய்கிறேன்.
இவ்வாறு ஷோயிப் அக்தர் கூறியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் அணி கள் 2013-ம் ஆண்டுக்குப் பிறகு இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் 2008-ம் ஆண்டு மோதியிருந்தன.

தினத்தந்தி: "மாதவிலக்கு பெண்கள் உணவு சமைத்தால் மறுபிறவியில் நாயாக பிறப்பார்கள்"
குஜராத் மாநிலம் புஜ் மாவட்டத்தில் உள்ள சாமி நாராயணன் கோவிலை நடத்திவருபவர் கிருஷ்ணசொரூப் தாஸ். இந்த கோவில் சார்பில் நடத்தப்பட்டுவரும் பெண்கள் கல்லூரியில் மாணவிகள் மாதவிலக்கு சமயத்தில் மற்ற மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிடக்கூடாது என கூறப்படுகிறது. இதனை மீறியதாக சந்தேகம் அடைந்த கல்லூரியின் முதல்வர், விடுதி தலைவர், குமாஸ்தா ஆகியோர் 60 மாணவிகளை குளியலறைக்கு அழைத்துச் சென்று உள்ளாடைகளை கழற்றி சோதனை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மறுநாள் அந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சாமியார் கிருஷ்ணசொரூப் தாஸ் நடத்திய சொற்பொழிவு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் பேசும்போது, "மாதவிலக்கு காலத்தில் இருக்கும் பெண்கள் தங்கள் கணவருக்காக உணவு சமைத்தால் அந்த பெண் மறுபிறவியில் பெண் நாயாக பிறப்பார். அந்த உணவை சாப்பிடும் கணவன் மறுபிறவியில் எருதாக பிறப்பான். எனது இந்த கருத்தை நீங்கள் விரும்பாவிட்டால் அதுபற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் இவை எல்லாம் நமது சாஸ்திரத்தில் எழுதப்பட்டுள்ளன" என்றார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "மதுவிலக்கு எப்போது?"

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் மதுபானக் கடைகள் எதுவும் புதிதாகத் திறக்கப்படவில்லை என்றும் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம் என்றும் அமைச்சா் பி.தங்கமணி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம் என்று தோ்தல் வாக்குறுதி கொடுத்தீா்கள். நெடுஞ்சாலைத் துறையில் மூடப்பட்ட கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மது மூலமான வருமானம் அரசுக்கு அதிகரித்துள்ளது என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் சட்டமன்றத்தில் பேசினார்.
அப்போது, அமைச்சா் பி.தங்கமணி குறுக்கிட்டுப் பேசிய தங்கமணி, "மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்," என்றார்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













