இரு சக்கர வாகனத்தில் சென்ற ஆசிரியர்: 'சீட் பெல்ட்' அணியவில்லை என ரூ.100 அபராதம்

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: இரு சக்கர வாகனத்தில் சென்ற ஆசிரியர்: 'சீட் பெல்ட்' அணியவில்லை என அபராதம்'
மோட்டார்சைக்கிளில் சென்ற ஆசிரியருக்கு 'சீட் பெல்ட்' அணியவில்லை என ரூ.100 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை கொருக்குப்பேட்டை தட்டாங்குளம் ரோட்டை சேர்ந்தவர் சிவா(வயது 26). இவர், சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவர், சொந்தமாக மோட்டார் சைக்கிள் ஒன்றை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் விற்பனை முகவரிடம் தவணை முறையில் வாங்கினார்.
கடன் தொகை முழுவதையும் தவணை முறையில் கட்டிமுடித்து விட்டார். இதையடுத்து மோட்டார் சைக்கிளுக்கான கடன் ரத்து சான்றிதழ் பெறுவதற்காக தண்டையார்பேட்டை வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
சிவா பெயரில் பதிவாகி இருந்த மோட்டார் சைக்கிள் எண்ணை அலுவலக ஊழியர் கம்ப்யூட்டரில் பதிவு செய்தார். அப்போது அவர், இந்த எண் கொண்ட வாகனத்தில் சென்றவர் 'சீட் பெல்ட்' அணியாததால் போக்குவரத்து போலீசார் 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அந்த அபராதத்தை செலுத்தினால்தான் உங்கள் மோட்டார் சைக்கிளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க முடியும் என்று தெரிவித்தார்.
அதற்கு சிவா, "என்னிடம் கார் இல்லை. மோட்டார் சைக்கிள்தான் இருக்கிறது. 'சீட் பெல்ட்' அணியவில்லை என்று அபராதம் விதித்திருப்பது தவறு" என்றார். ஆனால் அபராததொகையை செலுத்தினால்தான் கடன் ரத்து சான்று வழங்க முடியும் என்று ஆர்.டி.ஓ. அலுவலக ஊழியர் தெரிவித்தார். இதையடுத்து, மோட்டார் சைக்கிளில் சென்ற சிவா, வேறு வழி இல்லாமல் 'சீட்பெல்ட்' அணியவில்லை என்பதற்காக விதிக்கப்பட்டிருந்த அபராதத்தொகை ரூ.100-ஐ செலுத்தினார். அதன்பிறகே அவருக்கு கடன் ரத்து சான்று சான்றிதழ் வழங்கப்பட்டது.
அபராதம் செலுத்திய ஓவிய ஆசிரியர் சிவா, "கடந்த 17-ந் தேதி காணும்பொங்கல் தினத்தில் 'சீட் பெல்ட்' அணியவில்லை என்று அபராதம் விதித்துள்ளனர். கொடுங்கையூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இந்த அபராதத்தை விதித்து இருக்கிறார்.அன்றையதினம் நான் வீட்டில்இருந்து வெளியே செல்லவில்லை. கொடுங்கையூர் பகுதிக்கு போகவேண்டிய அவசியமே எனக்கு இல்லை. காரில் செல்பவர்கள்தான் 'சீட்பெல்ட்' அணிய வேண்டும். எனது மோட்டார் சைக்கிள் எண்ணை எப்படி பதிவு செய்தார்? என்பது தெரியவில்லை. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.

தினமணி: ரஜினிகாந்துக்கு எதிராக வருமானவரித் துறை தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

பட மூலாதாரம், Getty Images
நடிகா் ரஜினிகாந்துக்கு எதிராக தொடா்ந்திருந்த மேல்முறையீட்டு வழக்கை வருமானவரித் துறை வாபஸ் பெற்றதைத் தொடா்ந்து வழக்கை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகா் ரஜினிகாந்துக்கு, கடந்த 2002-2003 ஆம் நிதியாண்டில் ரூ.6 லட்சத்து 20 ஆயிரத்து 235, கடந்த 2003-2004-ஆம் நிதியாண்டில் ரூ.5 லட்சத்து 56 ஆயிரத்து 326, கடந்த 2004-2005 ஆம் நிதியாண்டில் ரூ.54 லட்சத்து 45 ஆயிரத்து 875 ரூபாய் அபராதம் விதித்து வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி ரஜினிகாந்த் சென்னையில் உள்ள வருமான வரித் துறை மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீா்ப்பாயம், நடிகா் ரஜினிகாந்துக்கு எதிராக கடந்த 2013-ஆம் ஆண்டு வருமான வரித்துறை பிறப்பித்த நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிா்த்து வருமானவரித் துறை கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வருமானவரித் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சுவாமிநாதன், மத்திய நேரடி வரிகள் வாரியம், ஒரு நிதியாண்டில் ஒரு கோடி ரூபாய் மற்றும் அதற்கு குறைவான அளவில் அபராதத் தொகை விதிக்கப்பட்டிருந்தால், அதனை எதிா்த்து புதிதாக வழக்குத் தொடர வேண்டியதில்லை எனவும், ஏற்கெனவே வழக்குத் தொடா்ந்திருந்தால், அந்த வழக்குகளை வாபஸ் பெறவும் கொள்கை முடிவெடுக்கப்பட்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. எனவே அந்த உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்குகளை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா். இந்த வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனா்.

இந்து தமிழ் திசை: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு -தமிழ், சமஸ்கிருதத்தில் நடத்தப்படும்

பட மூலாதாரம், M Niyas Ahmed
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு ஆகம விதிப்படி தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் நடத்தப்படும் என உயர் நீதிமன்றக் கிளையில் அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தஞ்சை பெரிய கோயிலில் பிப்.5-ல் குடமுழுக்கு நடைபெறுகிறது. இந்த குடமுழுக்கைத் தமிழ் மொழியில் நடத்தக்கோரி ராமநாதபுரம் திருமுருகன், தஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக் கழக ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன் ஆகியோர் உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களில், தஞ்சையில் காவிரிக்கரையில் ராஜராஜன் சோழனால் கட்டப்பட்ட பெரிய கோயில் சைவ வழிபாட்டுத் தலமாகும். சைவத் தலங்களில் தமிழ் மொழியிலேயே குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். தஞ்சை கோயிலில் பூஜைகள் இதுவரை தமிழ் மொழியிலேயே நடத்தப்பட்டுள்ளன. இதற்கு சங்ககால இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன. இந்த ஆகம விதிகள் மீறப்பட்டபோது பெரியளவில் விபத்துகள் நடை பெற்றுள்ளன.
பெரிய கோயிலில் பிப்.5-ல் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. சம்ஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கெனவே ஆகம விதிகள் மீறப்பட்டபோது நடைபெற்றதுபோல் இப்போதும் விபத்துகள் நடைபெறும் என மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, குடமுழுக்கை தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தன. மனு தாரர்களின் வழக்கறிஞர்கள் அழகு மணி, லஜபதிராய் வாதிடுகையில், ''பெரிய கோயிலில் சம்ஸ்கிருதத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. தமிழக அரசின் அர்ச்சகர் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று தமிழ் மற்றும் சம்ஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லத் தகுதியான 206 பேர் உள்ளனர். அவர்களை வைத்து பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை நடத்தலாம்" என்றனர்.
அறநிலையத் துறை இணை ஆணையர் (சட்டம்) சிவகுமார் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: தஞ்சை பெரிய கோயில் உட்பட அனைத்துக் கோயில்களிலும் ஆகம விதி களைப் பின்பற்றியும், கோயில்களில் காலம் காலமாக புழக்கத்தில் இருந்து வரும் பழக்க வழக்கப்படியும் பூஜைகள், அர்ச்சனை கள் நடைபெறுகின்றன. தஞ்சை பெரிய கோயிலில் 1980, 1997-ல் நடைபெற்ற குடமுழுக்கின்போது கடைபிடிக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றி ஆகம விதிப்படி தமிழ் மற்றும் சம்ஸ்கிருதத்தில் பிப்.5-ல் குடமுழுக்கு நடத்தப்படும்.
பிப்.1 முதல் 5 வரை யாகசாலை பூஜையும், 5-ல் மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. இதில் பன்னிரு திருமுறை, அபிராமி அந்தாதி, திருப்புகழ் ஆகிய திருமுறை பாராயணம் தமிழில் பாடப்படும்.
பெரிய கோயிலில் ஒதுவார்களுடன் சேர்ந்து குடமுழுக்கை நடத்த மதுரை ஆலவாய் அண்ணல் அறக்கட்டளை, சிதம்பரம் ஆலவாய் அண்ணல் அறக்கட்டளை தேவார பாடசாலையிலிருந்து திரு முறைகள் நன்கறிந்த 80-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் அழைக்கப் பட்டுள்ளனர். பெரிய கோயிலில் தமிழ் புறக்கணிக்கப்படுவதாகக் கூறப்படுவது உண்மையல்ல. கோயிலில் தமிழுக்கும், சம்ஸ் கிருதத்துக்கும் சமமான முக்கியத் துவமே வழங்கப்படுகிறது.
சம்ஸ்கிருதத்தில் பூஜைகள் நடத்தியதால் பெரிய கோயிலில் விபத்துகள் நடைபெற்றதாகக் கூறுவது தவறு. விபத்துகள் எதிர் பாராமல் நடைபெற்றவை. மனு தாரர்கள் மனு அனுப்பி, அதை பரிசீலிக்க வாய்ப்பு வழங்காமல் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். எனவே, மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது.
பின்னர் தமிழ், சம்ஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாகவும், குடமுழுக்கு நடத்த 15 நிபந்தனைகளுடன் தொல்லியல் துறை வழங்கிய அனுமதி தொடர்பாகவும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
தொல்லியல் துறையிடம் அனுமதி பெறாமல் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை நடத்தத் தடை விதிக்கக்கோரி சரவணன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தொல்லியல் துறை மற்றும் தஞ்சை பெரியகோயில் தேவஸ்தானம் சார்பிலும் குடமுழுக்கு நடத்த தொல்லியல் துறையிடம் நவம்பர் மாதம் அனுமதி பெறப்பட்டுள்ளது. 15 நிபந்தனைகளுடன் குடமுழுக்குக்கு தொல்லியல்துறை அனுமதி வழங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுவை முடித்துவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













