பொது சுகாதாரத்தில் தனியார் முதலீடு: சர்ச்சைக்குள்ளாகும் நிதிக் குழு பரிந்துரை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
15-வது நிதிக் குழு பொது சுகாதாரம் பற்றி ஆராய அமைத்த உயர்மட்டக் குழு ஒன்று பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகளை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்ற வேண்டுமென பரிந்துரைத்திருக்கிறது. தனியார் முதலீட்டையும் ஊக்குவிக்கச் சொல்கிறது. இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?
பதினைந்தாவது நிதிக் குழு சமீபத்தில் (2019) பொது சுகாதாரத்துறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆராய உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு தற்போது அளித்திருக்கும் பரிந்துரைகளின்படி, 2022ஆம் ஆண்டில் பொது சுகாதாரத்தை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்பதோடு, அதனை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்றும் கூறியிருக்கிறது. மருத்துவக் கல்வி, குடும்பக் கட்டுப்பாடு ஆகியவை பொதுப் பட்டியலில் இருக்கும்போது பொது சுகாதாரமும் பொதுப் பட்டியலில் இருப்பதுதான் சரி என இந்தக் குழு கூறியிருக்கிறது.
வேறு சில பரிந்துரைகளையும் இந்தக் குழு முன்வைத்திருக்கிறது. அதன்படி, மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள், தனியாக மருத்துவம் பார்க்கக்கூடாது. மேலும் தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு, தேசிய அளவிலான தகுதித் தேர்வு ஒன்று வைக்கப்பட்டு, அதில் தேறுபவர்கள் மட்டுமே மருத்துவர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள்.
ஒவ்வொரு கல்லூரியிலும் பயிலும் மாணவர்களின் திறமையைப் பொறுத்தே, அடுத்த ஆண்டு அந்தக் கல்லூரிக்கான இடங்கள் முடிவுசெய்யப்படும். மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரமே அதை வைத்துத்தான் முடிவுசெய்யப்படும்.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் ரன்தீப் குலேரியாவை தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த உயர்மட்டக் குழுவில் பெங்களூருவில் உள்ள நாராயணா ஹெல்த் சிடியின் தலைவர் தேவி ஷெட்டி, குர்காவ்னில் உள்ள மெதாந்தா சிடியின் தலைவர் நரேஷ் ட்ரேஹன், பப்ளிக் ஹெல்த் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் தலைர் ஸ்ரீநாத் ரெட்டி, மகாராஷ்டிரா மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மைஷேகர், கொல்கத்தாவில் உள்ள கே.ஜி. கார் மருத்துவக் கல்லூரியின் இருதய - நெஞ்சகப் பிரிவின் தலைவர் பபதோஷ் பிஸ்வாஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
நிடி ஆயோக், மத்திய சுகாதார அமைச்சம், எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த வேறு பத்து உறுப்பினர்களும் இந்தக் குழுவில் இருந்தனர். மாநில அரசு அதிகாரிகளோ, அமைப்புகளோ இந்தக் குழுவில் இடம்பெறவில்லை.

நாடு முழுவதுமே இந்தக் குழுவின் பரிந்துரைகள் குறித்து கடுமையான வாத - பிரதிவாதங்கள் நடந்துவருகின்றன. பொது சுகாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாநிலங்களை மனதில் வைத்து, பலர் இந்தப் பரிந்துரைகள் சரியானவை என்கின்றனர். ஆனால், இது தனியார் மருத்துவமனைகள் லாபம் பெறவே உதவும் என்கிறார்கள் இதனை எதிர்ப்பவர்கள்.
இந்தப் பரிந்துரைகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.
"இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் அரசு மற்றும் தனியார் துறை கூட்டு முயற்சியில் 3000-5000 மருத்துவமனைகளை அமைக்கலாம் என்றும் அக்குழு பரிந்துரைத்துள்ளது. இது அரசின் வளங்களை தனியாருக்கு வாரி வழங்கும் நோக்கம் கொண்டதாகும். நிதி ஆணையத் துணைக்குழுவில் இடம் பெற்ற 5 உறுப்பினர்களில் இருவர் தனியார் மருத்துவமனை அதிபர்கள் எனும் நிலையில் இந்த பரிந்துரையை ஏற்கக் கூடாது" என்று அவர் கூறியிருக்கிறார்.
"மாநில அரசுகள் வெறும் பஞ்சாயத்துகள் ஆகும்"
தி.மு.க. பொருளாளர் துரைமுருகனிடம் இது குறித்துக் கேட்டபோது, அப்படி நடந்தால் மாநில அரசுகள் வெறும் பஞ்சாயத்துகளாக சுருங்கிவிடும் எனக் குறிப்பிட்டார்.
இந்தக் குழு அமைக்கப்பட்டதிலேயே பிரச்சனை இருக்கிறது என்கிறார் திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவரான நாகநாதன்.
"நிதி ஆணையங்கள் என்பவை மத்திய - மாநில அரசுகளுக்கிடையே நிதியைப் பகிர்வது குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்படுபவை. இந்தக் ஆணையத்தை சேர்ந்தவர்கள் எல்லா மாநிலங்களுக்கும் பயணம் செய்து, அந்தந்த மாநிலங்களின் பற்றாக்குறை, தேவை ஆகியவற்றை அறிந்து அவற்றைப் பரிந்துரைக்க வேண்டும். இதைத் தவிர, வேறு எந்த பரிந்துரையையும் செய்யக்கூடாது. மாநிலப் பட்டியல், மத்தியப் பட்டியல், பொதுப் பட்டியல் போன்றவற்றில் மாற்றங்களை பரிந்துரைக்கக் கூடாது" என்கிறார் அவர்.
அதேபோல, நிதி ஆணையங்கள் அமைக்கும் குழுக்களின் பரிந்துரைகளை அரசு விரும்பினால் ஏற்கலாம்; இல்லாவிட்டால் விட்டுவிடலாம். அவற்றை ஏற்பது கட்டாயமல்ல என்கிறார் அவர்.

பொது சுகாதாரத்தை மத்திய அரசிடம் கொடுத்தால், அது மிகப் பெரிய தீமையை உருவாக்கும் என்கிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத்.
"ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொருவிதமான நிலப்பகுதி, அதற்கேற்ற வகையில் நோய்கள் இருக்கும். அதற்கேற்ற வகையில் அரசு மருத்துவமனைகள் செயல்படும். மத்திய அரசிலிருந்து மாவட்டங்களில் இருக்கும் மருத்துவமனைகளைக் கண்காணிப்பதெல்லாம் எப்படி சரியாக இருக்கும். பொது சுகாதாரத்தின் தரம் மேலும் கீழேபோகும். இத்தனை ஆண்டுகளாக தமிழ்நாடு அடைந்திருக்கும் முன்னேற்றம் பாதிக்கப்படும்" என்கிறார் ரவீந்திரநாத்.
மருத்துவக் கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றுவது மாநில அரசின் உரிமைப் பறிக்கும் செயல் என்பதோடு, தனியார் மருத்துவமனைகளை அதிகம் திறப்பதன் மூலம் எப்படி சுகாதாரத்தை அடிப்படை உரிமையாக்குவார்கள்? எனக் கேள்வி எழுப்புகிறார் நாகநாதன்.
"தமிழ்நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் கிராமங்களில்கூட சிறப்பாகச் செயல்படுகிறது. இந்தியாவில் பொது சுகாதரத்திற்கென 2 சதவீதம்கூட செலவழிப்பதில்லை. தமிழ்நாட்டில் பத்து சதவீதத்திற்கு மேல் செலவழிக்கிறோம். இந்த நிலையில் இதையெல்லாம் மாற்றினால் வறுமை நிலையில் இருப்பவர்கள்தான் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்" என்கிறார் அவர்.
மேலே குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளைத் தவிர, வேறு சில பரிந்துரைகளையும் இந்தக் குழு முன் வைத்திருக்கிறது. அதாவது, மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்களுக்கு இணையாக முதுநிலை இடங்களை 2015க்குள் உருவாக்குவது, இந்திய அரசு மருத்துவத்திற்கு செலவு செய்யும் தொகையை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதமாக உயர்த்துவது, அரசு - தனியார் பங்களிப்பில் சுமார் மூவாயிரம் சிறிய மருத்துவமனைகளை (200 படுக்கை வசதியுள்ளவை) இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் கட்டுவது ஆகியவற்றையும் இந்தக் குழு பரிந்துரைத்திருக்கிறது.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: உயரும் பலி எண்ணிக்கை, இறங்கு முகத்தில் பங்கு சந்தை - 24 மணி நேரத்தில் நடந்தவை
- கொரோனா வைரஸ் இலங்கையை தாக்கியது - சீனப் பயணிகளுக்கு உடனடி விசா முறை ரத்து
- "தமிழகத்தில் நடைபெறுவது மோதி அரசின் அடிமை ஆட்சி": புதுவை முதல்வர் நாராயணசாமி
- பொதுவெளியில் 7 ஆண்டுகளுக்கு பின் தோன்றிய கிம் ஜாங் உன் உறவினர் - நடப்பது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













