நிஜ Man Vs Wild - வழி தெரியாமல் காட்டில் சிக்கிக் கொண்ட ஒரு குடும்பம் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
உண்மையான Man Vs Wild
வழி தெரியாமல் காட்டில் சிக்கிய கொலம்பிய நாட்டு தாய் ஒருவரும் , 14, 12 மற்றும் 10 வயதுடைய அவரது மூன்று குழந்தைகளும் 34 நாட்களுக்குப் பின் பெரு பூர்வகுடிகளால் உயிருடன் மீட்கப்பட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
ஏறத்தாழ 5 வாரமாக வெறும் இலை, தழைகளை மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்து வந்துள்ளனர். பெரு - கொலம்பியா எல்லையில் உள்ள உறவினர்களை சந்தித்துவிட்டுத் திரும்பும் போது காட்டில் வழி தெரியாமல் சிக்கிக் கொண்டுள்ளனர். 34 நாட்களாகக் காட்டில் சுற்றித் திரிந்த இந்த நான்கு பேரையும், செகோயா பூர்வகுடி மக்கள் பார்த்து, அவர்களை மீட்டுள்ளனர். அவர்களது பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த நால்வரும் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ்: இலங்கை வரும் சீனர்களுக்கு கட்டுப்பாடுகள்

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான ஒருவர் முதற்தடவையாக நேற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து இலங்கையர்களை காப்பாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்றது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சி இதனைக் குறிப்பிட்டார்.
விரிவாகப் படிக்க:கொரோனா வைரஸ்: இலங்கை வரும் சீனர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?

ஹெச்.ராஜா நாராயணசாமிக்கு பதிலடி

பட மூலாதாரம், Alamy
தமிழக அரசை நரேந்திர மோதியின் அடிமை ஆட்சி என்று விமர்சித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை இத்தாலிப் பெண்ணின் அடிமை என்று கடுமையாக பதில் விமர்சனம் செய்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா.
நீட் தேர்விற்கு எதிராக திராவிடர் கழகம் நேற்று நடத்திய பொதுக்கூட்டத்தில் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, "மத்திய அரசை எதிர்த்து தமிழகத்தில் இருந்து எதற்கும் குரல் கொடுத்ததில்லை, இதன் மூலம் தமிழகத்தில் நரேந்திர மோதி அரசின் அடிமையாட்சி நடப்பது தெரிகிறது," என்று பேசியிருந்தார்.
விரிவாகப் படிக்க:'நாராயணசாமி இத்தாலி பெண்ணின் அடிமை' - ஹெச்.ராஜா பதிலடி

அமெரிக்க ராணுவம் - 'ஆப்கானிஸ்தானில் நொறுங்கி விழுந்த விமானம் எங்களுடையதுதான்'

பட மூலாதாரம், Reuters
கிழக்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் திங்களன்று விபத்துக்குள்ளான விமானம், தங்களுக்குச் சொந்தமானதுதான் என அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது.
விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மேலும் தங்கள் எதிரிகளால்தான் இந்த விபத்து ஏற்பட்டது என்பதற்கு எந்த தடயமும் இல்லை என அமெரிக்க ராணுவ அதிகாரி கர்னல் சன்னி லெகெட் கூறியுள்ளார்.
தாலிபன் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருக்கும் கஸ்னி மாகாணத்தில் டே யாக் மாவட்டத்தில் திங்களன்று விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

மு.க. ஸ்டாலின் மீது தமிழக அரசின் சார்பில் அவதூறு வழக்கு

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மீது தமிழக அரசின் சார்பில் இரண்டு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன.
முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் அவதூறு கருத்துகளைத் தெரிவித்துள்ளதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன.
விரிவாகப் படிக்க:மு.க. ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு - பின்னணி என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













