நடிகர் சங்கத்திற்கு மறுதேர்தல்: மூன்று மாதத்திற்குள் நடத்தி முடிக்க உத்தரவு

விஷால்

பட மூலாதாரம், Twitter

படக்குறிப்பு, விஷால்

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கில், கடந்தாண்டு நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது என்றும் மறுதேர்தல் நடத்த வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019 ஜூன் மாதம் 23ம் தேதி நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு அடுத்த தேர்தலை மூன்று மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் காலக்கெடு விதித்துள்ளது.

News image

கடந்த 2019 ஜூன் 23ம் தேதி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், தபால் வாக்குகள் செலுத்த அனுமதிக்கவில்லை என்பதால் நடந்து முடிந்த நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்யக்கோரி உறுப்பினர்கள் பெஞ்சமின் மற்றும் ஏழுமலை உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது நீதிபதி கல்யாணசுந்தரம் அமர்வில் இன்று (ஜனவரி 24) விசாரணைக்கு வந்தது. நடிகர் விஷால் மற்றும் கார்த்திக் ஆகியோர் நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துபேசி, தீர்மானம் எடுத்துள்ளதாக கூறி தேர்தல் தேதியை அறிவித்தனர்.

ஆனால் தேதியை அறிவித்த நேரத்தில் அவர்கள் இருவரின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டதால், அவர்களின் அறிவிப்பு செல்லாது என வாதிடப்பட்டது என நீதிமன்ற செய்தியாளர் சஷி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

புதிதாக வாக்காளர் பட்டியல் தயாரித்து தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறிய நீதிபதி, மறு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை சங்க நிர்வாகத்தை சிறப்பு அதிகாரியாக செயல்படும் கீதா தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சங்கத் தேர்தல் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி தாக்கல் செய்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

கடந்த முறை தேர்தலை நடத்திய நீதிபதி கோகுல்தாஸ்தான் தற்போது நடைபெற உள்ள மறு தேர்தலையும் நடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: