திமுக போராட்டம்: 'குடியுரிமை சட்டமா? குழிபறிக்கும் சட்டமா?' - மு. க. ஸ்டாலின் கேள்வி

குடியுரிமை சட்டத் திருத்தம்

பட மூலாதாரம், Ani

''இதுவரை இஸ்லாமியர்களுக்கு எதிராகத்தான் பாஜக அரசு இருந்துவருகிறது என்று நினைத்து வந்தோம். ஆனால், இந்த குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு பிறகு அவர்கள் இலங்கை தமிழர்களுக்கும் எதிராக உள்ளார்கள் என்று தெரிய வருகிறது,'' என்று குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக இன்று (செவ்வாய்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது.

நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசு அவசர அவசரமாகவும், தான்தோன்றித்தனமாகவும் இந்த சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது என்றும், பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம் இஸ்லாமியர்களை ஒடுக்குவதுதான் என்றும் தனது உரையின்போது ஸ்டாலின் குறிப்பிட்டார்.

பல்வேறு மதங்கள் மற்றும் இனங்களைச் சேர்ந்தவர்கள் எந்த வேற்றுமையும் இல்லாமல் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்துவரும் இந்தியாவின் ஒற்றுமையில் நஞ்சைக் கலக்கும் முயற்சி என்று குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை ஸ்டாலின் விமர்சித்தார்.

"'குடியுரிமைச் சட்டம் என்பது குடிகளுக்கு உரிமை வழங்கும் சட்டம் என்றே பொருள். ஆனால், குடியுரிமைச் சட்டம் மூலமே குடிமக்களின் உரிமைகளை பாஜக அரசு பறிக்கிறது," என்று அவர் கூறினார். 'இது குடியுரிமை சட்டமா? குழிபறிக்கும் சட்டமா?' என்றும் அவர் வினவினார்.

''ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு எனும் நோக்கத்துடன் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது,'' என்றார் அவர்.

திமுக போராட்டம்:

பட மூலாதாரம், ANI

பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்காவுக்கு சென்றபோது திருக்குறள் மற்றும், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று பேசிவிட்டு, அனைத்து மக்களும் தங்கள் மக்கள், அனைத்து ஊர்களும் தங்கள் ஊரே என்று அதன் பொருளைப் மத்திய அரசு பின்பற்றாமல் இருப்பதாக நாடாளுமன்றத்தில் திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் பேசியதை தமது உரையில் குறிப்பிட்டார் ஸ்டாலின்.

"பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் மத சிறுபான்மையினருக்கு மட்டும் அனுமதி என்று இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் இலங்கை அண்டை நாடில்லையா," என்று கேள்வி எழுப்பினார் ஸ்டாலின்.

அண்டை நாடுகளில் கொடுமைகளுக்கு உள்ளான அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களுக்கும் குடியுரிமை என்றால் அதைத் திமுக எதிர்க்காது என்றும் அவர் பேசினார்.

இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கியதை, இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின், "அது முழுக்க முழுக்க அபாண்டமான, தவறான தகவல். இந்தியத் தமிழர்களுக்கு இலங்கையில் குடியுரிமை மறுக்கப்பட்டபோது லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோர் பிரதமராக இருந்தபோது இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டது. அதில் அமித் ஷாவுக்கு எந்தப் பெருமையும் இல்லை. புலம்பெயர்ந்து வந்த ஈழத் தமிழர்களுக்கே குடியுரிமை கேட்கிறோம்," என்றார் ஸ்டாலின்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: