அமித் ஷா - "அயோத்தியில் 4 மாதங்களில் வானுயர்ந்த ராமர் கோயில் கட்டப்படும்"

அமித் ஷா

பட மூலாதாரம், Getty Images

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி - வானுயர்ந்த ராமர் கோவில்

அயோத்தியில் 4 மாதங்களுக்குள் வானுயா்ந்த ராமா் கோயில் கட்டப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான அமித் ஷா திங்கள்கிழமை தெரிவித்தார்; ஜார்க்கண்ட் தோ்தல் பிரசாரத்தின்போது, அவா் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் என்கிறது தினமணியின் செய்தி.

"ராம ஜென்ம பூமியில் பிரம்மாண்ட ராமா் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது உலகம் முழுவதும் உள்ள இந்தியா்களின் 100 ஆண்டு கால கோரிக்கையாகும். அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துவிட்ட நிலையில், அங்கு 4 மாதங்களுக்குள் வானுயா்ந்த ராமா் கோயில் கட்டப்படும் என்பதை மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்,"

"அயோத்தி விவகாரத்தை உச்சநீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது காங்கிரஸ்தான். மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்காத அக்கட்சியால், நாட்டில் வளா்ச்சியை ஏற்படுத்தவோ, எல்லைகளை பாதுகாக்கவோ முடியாது."

"வளா்ச்சி குறித்து பேசும் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஜார்க்கண்டில் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சித் திட்டங்களை பட்டியலிட வேண்டும்," என்று அமித் ஷா பேசியதாக மேலும் தெரிவிக்கிறது அச்செய்தி.

Presentational grey line

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா - அதிகப்படியான ஆர்டிஐ மனுக்கள்

உச்சநீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்யப்படும் அதிகப்படியான மனுக்கள் மாநில அரசுகளின் நிர்வாகத்தை பாதிப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார் என்கிறது தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி.

எனவே அந்தந்த பிரச்சனைகளோடு தொடர்புடையவர்கள் மட்டும் ஆர்.டி.ஐ மனுக்கள் தொடுக்கலாமா என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

"தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து பரவலாக அச்சம் எழுந்துள்ளது, கோப்புகளில் எந்த தகவலையும் வழங்குவதற்கே அதிகாரிகள் அஞ்சுகின்றனர். மகாராஷ்டிராவின் தலைமைச் செயலகம் அதிகப்படியான ஆர்டிஐ மனுக்களால் முடங்கியுள்ளதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது," என பாப்டே தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

Presentational grey line

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - மேகாலயா ஆளுநரின் விடுப்பு

சர்ச்சைகளுக்கு பெயர்போன மேகாலயாவின் ஆளுநர் டதாகடா ராய் விடுப்பில் சென்றுள்ளதால் நாகலாந்தின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கூடுதல் அப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.

வடக்கிழக்கு மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களில் டதாகடா ராய் தலையிடாமல் இருப்பதற்காக மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக ஊகங்கள் இருந்த நிலையில், "சில வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் திரும்ப வருவேன்," என தெரிவித்து கொள்கிறேன் என்று ட்விட்டரில் டதாகடா ராய் தெரிவித்துள்ளார்.

ஆதேபோல் குடியரசுத் தலைவர் அலுவலகமும், "டதாகடாவுக்கு 19 நாட்கள் ஆண்டு விடுமுறை உள்ளது. எனவே அவர் விடுமுறைக்கு சென்றுள்ளார். சில இடங்களுக்கு பயணம் செய்து கிறித்துமஸை கொண்டாட உள்ளார். அதன்பிறகு அவர் பணிக்கு திரும்புவார்," என தெரிவித்துள்ளது.

Presentational grey line

இந்து தமிழ் திசை - தமிழக உள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு

ஸ்டாலின்

பட மூலாதாரம், Facebook

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை மதிக்காமல் தன்னிச்சையாக தேர்தல் நடைமுறைகளை அமல்படுத்தியதாக தமிழகத் தேர்தல் ஆணையர் மீது உச்ச நீதிமன்றத்தில் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்துள்ளது. என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.

உள்ளாட்சித் தேர்தல் வழக்கு தொடர்ச்சியாக உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் நடந்தது. இறுதியாக உச்ச நீதிமன்றம் இறுதிக் கெடு கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

ஆனால், அதில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை தமிழகத் தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை என திமுக மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்றது. அப்போது உச்ச நீதிமன்றம் 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி தேர்தலை நடத்த உத்தரவிட்டது.

ஆனால், தேர்தல் ஆணையம் 1991-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தலை நடத்துவதாக கூறப்பட்டிருப்பதை திமுக சுட்டிக்காட்டி மீண்டும் முறையீடு செய்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் தேர்தலை நடத்தத் தடையில்லை. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மறுவரையறை செய்து தேர்தல் நடத்தவேண்டும் என உத்தரவிட்டது.

ஆனாலும் அவ்வாறு நடக்கவில்லை என மீண்டும் திமுக நீதிமன்றம் சென்றபோது உச்ச நீதிமன்றம் முறையீட்டை ஏற்க மறுத்துவிட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றவில்லை எனக் கூறி தமிழகத் தேர்தல் ஆணையர் பழனிச்சாமி மீது நீதிமன்ற அவதூறு வழக்கை திமுக தொடுத்துள்ளது என விவரிக்கிறது அச்செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: