இந்தோனீசியா சுனாமியை உருவாக்கிய எரிமலை துண்டுகள் இவைதான் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், COPERNICUS DATA 2019
ஒரு வருடத்திற்கு முன்பு இந்தோனீசியாவில் சுனாமியை உருவாக்கிய எரிமலையின் எச்சங்கள் முதன்முறையாக கடற்பரப்பில் படம் எடுக்கப்பட்டுள்ளன.
அனாக் க்ரகாடாவ் என்று அழைக்கப்படும் அந்த மலையின் ஒரு பக்கம் சரிந்து பெருங்கடலுக்குள் விழுந்ததை விஞ்ஞானிகள் சோனார் உபகரணங்கள் கொண்டு புகைப்படம் எடுத்துள்ளனர்.
இதில் சில துண்டுகள் 70-90 மீட்டர் உயரத்துக்கு உள்ளன.
2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அது கடலில் வீழ்ந்த போது சுமத்ரா மற்றும் ஜாவா கடற்கரை பகுதிகளில் பேரலையை உருவாக்கியது.
இரவு நேரத்தில் நடைபெற்ற அந்த பேரழிவால் ஜாவா மற்றும் சுமத்ராவுக்கு நடுவில் உள்ள சுண்டா ஜலசந்தியில் சுமார் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
அந்த சமயத்திலிருந்து என்ன நடைபெற்றது என ஆராய ஆய்வாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அவர்கள் பெற்ற படிப்பினைகள் எல்லாம் கடலுக்கு மேலே தென்படும் பாறையை கொண்டுதான் அமைந்துள்ளது.

பருவநிலை மாற்ற தடுப்பு திட்டங்களுக்கு இந்தியா, அமெரிக்கா, பிரேசில் எதிர்ப்பு

பட மூலாதாரம், Getty Images
ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றில் பருவநிலை குறித்து மாட்ரிட்டில் நடந்த மிக நீண்ட பேச்சுவார்த்தை, இறுதியில் ஒரு சமரச ஒப்பந்தத்துடன் முடிவடைந்தது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலகின் பல்வேறு சிறிய தீவு நாடுகளினாலும் முன்வைக்கப்படும் மேலதிக பருவநிலை மாற்ற தடுப்புத் திட்டங்களுக்கு அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.
கார்பனைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய செயல்பாட்டை அதிகரிப்பதற்கான முக்கிய கேள்விக்கு மாநாட்டின் இறுதிக்கட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டது.
இதன்படி, 2020ஆம் ஆண்டு டிசம்பரில் பிரிட்டனின் கிளாஸ்கோவில் நடைபெறும் அடுத்த மாநாட்டின்போது, அனைத்து நாடுகளும் புதிய பருவநிலை உறுதிமொழிகளை முன்வைப்பதற்கு உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

டெல்லியில் 3 பேருந்துகள் தீவைத்து எரிப்பு

பட மூலாதாரம், ANI
இந்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் ஏற்பட்ட வன்முறையில், குறைந்தது மூன்று பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டதாகவும், சில கார்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் ஏஎன்ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லியின் தெற்கு பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், அங்குள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் பங்கெடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக போராட்டக்காரர்களை நோக்கி காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதுடன், தடியடியும் நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள்

பட மூலாதாரம், BCCI
இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்தது.
முதலில் பேட் செய்த இந்தியா 8 விக்கெட்டுகள் இழந்து 287 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவது பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு விக்கெட்டுகள் இழந்து 291 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதையடுத்து, களமிறங்கிய இந்தியா அணி, 50 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்கத்தில் மேற்கு இந்தியத்தீவுகளின் பந்துவீச்சில் தடுமாறிய இந்திய அணி வீரர்கள் 100 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகள் இழந்தனர்.
பின்னர் களம் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் நிதானமாக விளையாடி அணிக்கு ரன் சேர்ந்தனர்.
இதில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 71 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 70 எடுத்து ஆட்டமிழந்தனர். கேதர் ஜாதவ் 40 ரன்னும், ரோகித் சர்மா 36 ரன்னும் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தனர்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் சார்பில் காட்ரல், கீமோ பால், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், பொல்லார்டு ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடியது மேற்கு இந்தியத் தீவுகள்.

நீரில் பயணிக்கும் சைக்கிள் படகு: கிராமத்திற்கு நீர் கிடைக்க உதித்த புதிய யோசனை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவிற்கு உட்பட்டது பாலபட்டு கிராமம், இங்கே உள்ள பெரிய ஏரியின் மையப்பகுதியில் உள்ள மின்விசை மோட்டார் இயந்திரத்தை இயக்குவதற்காக நீரில் பயணம் செல்லும் சைக்கிள் படகு ஒன்றை குடிநீர் பணியாளரின் நலன் கருதி வடிவமைத்திருக்கிறார் பாலப்பட்டு ஊராட்சி செயலர் பாலமுருகன்.
பாலப்பட்டு கிராமத்தில் 542 குடும்பங்கள் என மொத்தம் 3167 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் இந்த கிராமத்தில் உள்ள ஐந்து நீர்த்தேக்க தொட்டிகளின் மூலமாக தான் நீரானது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நீர்த்தேக்க தொட்டிகள் மொத்தமாக 1லட்சத்து 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது.
மேலும் நீர்த்தேக்க தொட்டிககள் அனைத்திற்கும் பாலப்பட்டு கிராமத்தின் பெரிய ஏரியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட கிணற்றில் இருந்து தான் நீரானது நிரப்பட்டு வருகிறது. அந்த கிணற்றில் இருந்து நீரை, நீர் தேக்க தொட்டிகளுக்கு செலுத்துவதற்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஏரியின் மையப்பகுதியில் உள்ள கிணற்றின் அருகே இருக்கும் அறைக்குச் சென்று மின்விசை மோட்டார் இயந்திரதை இயக்கி வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












