''எம்எல்ஏ பதவியை ஏலம் விடுவார்களா?'' உள்ளாட்சித் தேர்தல் விதி மீறல்களுக்கு காரணம் என்ன?

''எம்எல்ஏ பதவியை ஏலம் விடுவார்களா?'' உள்ளாட்சித் தேர்தலில் விதிமீறல்களுக்கு காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக தினமும் அதிரடி அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளன. ஊராட்சித் தலைவர் பதவிகளை ஏலம் விடுவது, தேர்தல் வருவதற்கு முன்பே தாங்களாகவே தேர்தல் நடத்தி தலைவரை தேர்வு செய்வது என பலவிதமான முறைகேடுகள் நடப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.

உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்த மூன்று ஆண்டுகளில் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தை கவனிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும், மக்கள் தங்களது பிரதிநிதிகளிடம் பிரச்சனைகளைத் தெரிவித்து, தங்களது கிராமங்களுக்குத் தேவையான வசதிகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் சிரமப்பட்டனர்.

இதற்கிடையில், மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகத் தேர்தலாக நடத்த அதிமுக அரசு மாற்றங்களைக் கொண்டுவந்தது.

அதேபோல உள்ளாட்சித் தேர்தலை நகரம், கிராமம் என பிரித்து நடத்துவது தொடர்பான விமர்சனம், 1991ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளாட்சிப் பதவிகளுக்கான இட ஒதுக்கீட்டினை செய்திருப்பதாக மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மீது விமர்சனம் வைக்கப்பட்டது என்று பல சர்ச்சைகள் எழுந்தன.

உள்ளாட்சித் தேர்தல் எவ்வாறு நடத்தப்படுகிறது?

உள்ளாட்சித் தேர்தல் என்றால் என்ன? உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு என்ன? உள்ளாட்சித் தேர்தல் மூன்று ஆண்டு காலம் நடக்காமல் இருந்ததால் வளர்ச்சிப்பணிகள் எவ்வாறு தடைபட்டன என இது தொடர்பாக ஆழமான புரிதல் உள்ளவர்களிடம் பிபிசி தமிழ் கேட்டது.

தமிழகத்தில் 15 மாநகராட்சிகள், 152 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள் மற்றும் 12,524 ஊராட்சிகள் உள்ளன.

தற்போது ஊரகப் பகுதியை சேர்ந்த வாக்காளர்கள் முன்பு இருந்தபடியே நான்கு வாக்குகள் போடுவார்கள். அதாவது ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒரு வாக்கு, ஊராட்சித் தலைவர் பதவிக்கு ஒரு வாக்கு, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு ஒரு வாக்கு, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பவிக்கு ஒரு வாக்கு ஆகிய நான்கு வாக்குகளை ஊரக வாக்காளர்கள் செலுத்தவேண்டும்.

நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் முன்பு தலைவர்/மேயர் பதவிகளுக்கு ஒரு வாக்கும், வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒரு வாக்கும் செலுத்தும் நிலை இருந்தது. இப்போது பேரூராட்சித் தலைவர், நகராட்சித் தலைவர், மாநகர மேயர் பதவிகளை நேரடியாக மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்காமல், வார்டு உறுப்பினர்கள் (கவுன்சிலர்கள்) தேர்ந்தெடுக்கும் வகையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, நகர, மாநகரப் பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் ஒரு வாக்கு மட்டுமே செலுத்துவார்கள்.

ஆனால், தற்போது ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடக்கவுள்ளது.

தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மறைமுக தேர்தலின்படி,பேரூராட்சி மற்றும் நகராட்சியில், வார்டு உறுப்பினர்களை வாக்காளர் தேர்வு செய்வார்கள். தலைவர், துணைத்தலைவர்களை, வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பர்கள்.

மாநகராட்சியைப் பொறுத்தவரை, வார்டு உறுப்பினர்களின் ஆதரவில் மேயர் தேர்வு செய்யப்படுவார். இதற்கு முந்தைய காலத்தில் மேயருக்கு நேரடியாக வாக்காளர்கள் ஓட்டு போடும் முறை இருந்தது. துணை மேயர் பதவிக்கு முன்னர் இருந்தபடி, வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யும் மறைமுக முறை தொடர்கிறது.

ஊராட்சிப் பகுதிகளில் தேர்தல் நடத்துவதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஊராட்சி மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு 500-600 வாக்காளர்களுக்கு ஒரு வார்டு உறுப்பினர் தேர்வு செய்யப்படுவார். ஒரு ஊராட்சிக்கு குறைந்தது ஆறு முதல் அதிகபட்சமாக 15 வார்டுகள் வரை இருக்கும்.

வார்டு உறுப்பினருக்கு அடுத்தபடியாக, 5,000 வாக்காளர்களுக்கு ஒரு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினரும், 50,000 பேருக்கு ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினரும் தேர்வு செய்யப்படுவார்.

ஊராட்சியில் தலைவரை மக்கள் நேரடியாக தேர்வு செய்வார்கள். வார்டு உறுப்பினர்கள் இணைந்து பஞ்சாயத்து துணைத் தலைவரை தேர்வு செய்வார்கள். ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய உறுப்பினரை மக்கள் தேர்வு செய்வார்கள். ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவரை ஒன்றிய உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள்.

அடுத்தபடியாக மாவட்ட ஊராட்சியில், வார்டு உறுப்பினர்களை மக்கள் தேர்வு செய்ய, அந்த உறுப்பினர்கள், தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்வு செய்வார்கள்.

தற்போது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைமுறையில், மறைமுக தேர்தல் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நடைமுறை பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி அங்கீகரிக்கப்பட்ட நடைமுறை ஆகும் என அதிமுக சொல்கிறது. எதிர்க்கட்சியான திமுக இதனை கண்டித்துள்ளது. இந்தியாவில் கேரளா, ஆந்திரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கும் மறைமுகத் தேர்தல் நடைமுறையில் உள்ளது.

''எம்எல்ஏ பதவியை ஏலம் விடுவார்களா?'' உள்ளாட்சித் தேர்தலில் விதிமீறல்களுக்கு காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

நேரடி தேர்தல் மூலம் தேர்வாகும் நகராட்சி, பேரூராட்சித் தலைவர் மற்றும் மாநகர மேயர்களுக்கு முழு அதிகாரம் இருப்பதால், அவர்கள் வார்டு உறுப்பினர்களுக்கு கட்டுப்படத் தேவையில்லை என்ற நிலை இருந்தது. தற்போது கொண்டுவரப்பட்ட மறைமுகத் தேர்தல் நடைமுறையில், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள், மேயர்கள் வார்டு உறுப்பினர்களின் ஆதரவுடன் செயல்படவேண்டிய தேவை உள்ளது. அதேநேரத்தில் மறைமுகத் தேர்தல் முறையில், சாதி அமைப்புகள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

அதிகாரம் நிறைந்த உள்ளாட்சிகள்

உள்ளாட்சித் தேர்தல் என்பது சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் முறையில் இருந்து சில அம்சங்களில் வித்தியாசாமான தேர்தல். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் வாக்காளர் தேர்ந்தெடுத்த நபர், தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை பலவகையான திட்டங்களுக்கு செலவிடுவார். உள்ளாட்சியில் மக்கள் தங்களது பகுதிக்கு தேவைகள் என்ன என விரிவாகப் பேசி, தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிடம் கேட்டுப்பெறமுடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.

திருவள்ளூர் மாவட்டம் கூத்தம்பாக்கம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் இளங்கோ. மத்திய அரசு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருந்தவர், தனது கிராமம் முன்னேற வேண்டும் என்பதற்காக, அரசுப்பணியைத் துறந்து, கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டார். இரண்டு முறை கிராம பஞ்சாயத்துத் தலைவராக இருந்தவர், தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

''உள்ளாட்சி அரசாங்கம்தான் மக்களுக்கு நெருக்கமான அரசாங்கம். பஞ்சாயத்து ராஜ் அமைப்பு என்பது நேரடியாக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து, அவர்களின் கிராமம் மற்றும் நகரத்திற்கு நிலையான வளர்ச்சியைத் தருவதற்காக ஏற்படுத்தப்பட்டது,''என்கிறார் இளங்கோ

இளங்கோ

பட மூலாதாரம், Ilango

படக்குறிப்பு, இளங்கோ

கிராம பஞ்சாயத்து அமைப்புகளுக்கு முழுமையான அதிகாரத்தை அரசியல் சாசனம் கொடுத்துள்ளது என்கிறார் இளங்கோ. ''கிராம சபை தீர்மானம் கொண்டுவந்தால், அதனை நடைமுறைப்படுத்தவேண்டும் என்கிறது சட்டம். நீதிமன்றம்கூட கிராமசபை தீர்மானம் கொண்டுவந்துள்ள விவகாரங்களில் தலையிடுவதில்லை. கூத்தம்பாக்கம் கிராமம் சென்னைக்கு அருகில் இருப்பதால், நகரத்தின் குப்பையைக் கொட்ட கூத்தம்பாக்கம் கிராமத்தின் விளைநிலங்களை அரசாங்கம் ஒதுக்கியபோது கிராம பஞ்சாயத்து தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியது. சென்னை உயர்நீதிமன்றத்தில் குப்பைக் கிடங்கு வழக்கு வந்தபோது, நீதிமன்றத்தின் தீர்ப்பு கிராம சபை தீர்மானத்திற்கு ஆதரவாக இருந்தது,'' என நினைவுகூர்கிறார்.

கேரளாவில் நிலங்களை பாழ்படுத்தியாக பன்னாட்டு நிறுவனமான கோக் நிறுவனத்திற்கு மாநில அரசாங்கம் அனுமதி தந்திருந்தாலும், கிராமசபை தீர்மானத்தால் அந்த நிறுவனம் மூடப்பட்டது என்கிறார்.

விலைபோகும் வாக்குகளால் நஷ்டம்

உள்ளாட்சி மன்றங்களின் முக்கியத்துவம் அறியாமல் நல்ல தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, தலைவர் பதவிகளில் சாதி ரீதியான நபர்களுக்கும், காசு கொடுப்பவர்களுக்கும் சிலர் வாக்களிக்கிறார்கள் என விமர்சிக்கிறார் காந்தியவாதி அ. அண்ணாமலை.

டெல்லியில் உள்ள தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குனரான அண்ணாமலை, முன்னர் தமிழக பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு பயிற்சி அளிப்பது, கிரமங்களில் மதுவிலக்கு கொண்டுவருவது தொடர்பாக பணியாற்றியவர். வலுவான கிராம சபைகள் இருந்தால்தான் கிராமங்கள் வளப்படும் என்ற விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படவேண்டும் என்கிறார் அவர்.

''கிராமங்கள் முன்னேற கிராமசபைகள் எடுக்கும் முடிவுகள்தான் காரணம். ஆனால் சமீப காலங்களில் ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு வருபவர்கள் மக்களுக்கு சேவை செய்யவருவதில்லை. ஏலத்தில் தலைவராக ஒருவர் தேர்வு செய்யப்பட்டால், அவர் தான் செலுத்திய ஏலத்தொகையை முதலில் திரும்பப் பெறவேண்டும் என்பதில்தான் கவனமாக இருப்பார். கிராம மக்கள் தங்களது குறைகளை தீர்க்கவோ, தங்களது ஊருக்கு

தேவையான வசதிகளைப் பெறுவதற்கோ லஞ்சம் கொடுக்கவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள்,''என்கிறார் அண்ணாமலை.

''எம்.எல்.ஏ பதவியை ஏலம் விடுவார்களா?''

கிராமம்

பட மூலாதாரம், Ilango

காந்தி கிராம பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் பழனித்துரையிடம் பேசினோம். "முறையாக தேர்தல் நடந்து தலைவர்கள் தேர்வாகும் பஞ்சாயத்துகள் மற்றும் கிராம அளவில் தேர்தல் அல்லாத முறையில் தலைவர்கள் தேர்வாகும் பஞ்சாயத்துகள் ஒப்பீட்டளவில் எவ்வாறு செயல்படுகின்றன என ஆய்வு செய்தோம். தேர்தல் இல்லாத பஞ்சாயத்துகளில் சாதி ரீதியாக வாக்களிப்பது, தேர்தல் நடத்தாமல் இருப்பதற்கு வழிவகை செய்வது போன்றவை நடக்கின்றன என ஆய்வில் தெரியவந்தன.

அதேநேரம் தற்போது தலைவர் பதவிகள் ஏலம் விடுவது, சீட்டு குலுக்கி தேர்வு செய்வது போன்ற பல விதிமீறல்கள் அரங்கேறினாலும், மாநில தேர்தல் ஆணையம் இதுவரை கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்" என்றார் அவர்.

''டி.என்.சேஷன் இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்தபோதுதான், தேர்தல் அதிகாரிகளுக்கு என்ன அதிகாரம் உள்ளது, நியாயமான தேர்தல் நடப்பதற்கு தேர்தல் அதிகாரிகள் எந்தவிதத்தில் தங்களது அதிகாரங்களை பயன்படுத்தலாம் என தெரியவந்தது. ஆனால் மாநிலத் தேர்தல் ஆணையம் தனது முக்கியத்துவத்தைக் கணக்கில் கொண்டு செயல்படவில்லை என்று தோன்றுகிறது. தேர்தல் விதிமீறல்கள் சமூகவலைத்தளங்களில் காணொளி காட்சிகளாக வெளியாகின்றன. விதிமீறலில் ஈடுபடும் நபரின் பெயர்,கிராமத்தின் பெயர் என பலமான ஆதாரங்கள் கிடைக்கின்றன,''என்கிறார் பழனித்துரை.

''எம்.எல்.ஏ பதவியை ஏலம் விடுவார்களா? அதுபோன்ற ஏலம் நடந்தால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை என்ன மாதிரியாக இருக்கும்? ஆனால் உள்ளாட்சியில் இதுபோல நடப்பதற்கு ஆதாரங்கள் இருந்தும் பலமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. மாநில தேர்தல் ஆணையரின் தகுதி நிலை, பணியில் உள்ள ஓர் உயர்நீதிமன்ற நீதிபதியின் தகுதி நிலைக்கு நிகரானதாகும். இத்தகைய முக்கியத்துவத்துடன் ஆணையம் செயல்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது,''என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: