உள்ளாட்சி தேர்தலில் மாற்றம் இல்லை - நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் இல்லை

தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே இரண்டு கட்டமாகத் தேர்தல் நடத்தப்படும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் இல்லை எனத் தேர்தல் ஆணையர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

நேற்று புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்துப் பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில் இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 - டிசம்பர் 30 என இரு கட்டங்களாக நடக்குமெனத் தமிழகத் தேர்தல் ஆணையம் டிசம்பர் 2ஆம் தேதி அறிவித்தது ஏற்கனவே அறிவித்திருந்தது இதற்கான வேட்புமனுத் தாக்கல் டிசம்பர் ஆறாம் தேதி துவங்கவிருக்கிறது என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது டிசம்பர் 9ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை செய்து 4 மாதங்களுக்குள் தேர்தலை அறிவிக்க வேண்டும் என்று நேற்றைய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகியவை இந்த ஒன்பது மாவட்டங்கள்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்வுசெய்யப்பட்டிருந்த உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 2016ல் முடிவடைந்தது. அதற்குப் பிறகு தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, முறையாக இட ஒதுக்கீடு செய்யப்படவில்லையென தி.மு.க. வழக்குத் தொடர்ந்தது. சரியான முறையில் இட ஒதுக்கீடு செய்த பிறகு, தேர்தலை அறிவிக்க வேண்டுமென நீதிமன்றம் கூறியிருந்தது.

ஆனால், அதற்குப் பிறகு தேர்தல் நடத்தப்படாத நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கோரி வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்கில் டிசம்பர் 13ஆம் தேதிக்கு முன்பாக தேர்தலை அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில்தான் டிசம்பர் 2ஆம் தேதியன்று ஊரகப் பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடக்குமென தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமல்லாமல், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளுக்கும் சேர்த்து தேர்தலை அறிவிக்க வேண்டுமென கூறினர்.

தி.மு.கவின் சார்பில் இந்த அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாட்டில் புதிதாக ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருப்பதால், 9 மாவட்டங்களின் எல்லைகள் மாறியிருக்கின்றன. அந்த மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும். மேலும், ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் தேர்தலை நடத்தாமல் மாநிலம் முழுவதும் தேர்தலை நடத்த வேண்டும் எனக் கோரப்பட்டது.

இது தொடர்பாக டிசம்பர் 2ஆம் தேதியே உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை காலையில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் ஒன்பது மாவட்டங்களைத் தவிர பிற 27 மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளில் தேர்தலை நடத்திக்கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: