சூடான் தமிழர் ராஜசேகர் மரணம்: "குழந்தை என்னை அடித்தால்கூட அவர் தாங்கமாட்டார்" - குமுறும் மனைவி

- எழுதியவர், நட்ராஜ் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கடந்த செவ்வாய் கிழமையன்று சூடான் நாட்டின் தலைநகரான கார்டூம் பகுதியில் உள்ள செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பலர் உயிரிழந்தனர். இவர்களில் 16 பேர் இந்தியர்களாவர்.
தீ விபத்தில் உயிரிழந்த 16 இந்தியர்களில் மூன்று பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள், அதில் ராஜசேகர் (வயது 35) என்பவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகாவிற்கு உட்பட்ட மானடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவராவர்.
இவருக்கு கலைச்சுந்தரி (வயது 33) என்பருடன் திருமணமாகி மூன்று வயதில் ஷிவானி என்ற பெண் குழந்தை உள்ளது. டிப்ளமோ படிப்பு முடித்த ராஜசேகர் தனது குடும்ப சூழல் மற்றும் எதிர்கால குடும்ப நலனிற்காக வெளிநாடு சென்று பணிபுரிய முயற்சி செய்து வந்த நிலையில், கடந்த 2017 ஆண்டு அக்டோபர் மாதம் சூடான் நாட்டில் செயல்பட்டு வரும் செராமிக் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றார்.
ராஜசேகர் வேலைக்கு சென்று 14 மாதங்களுக்கு பிறகு, கடந்த ஜனவரியில் இரண்டு மாத விடுப்பில் தனது சொந்த ஊருக்கு வந்து சென்றார்.

ராஜசேகர் தனது குடும்பத்தினரிடம் தினமும் தொலைபேசியில் பேசுவதை வழக்கமாக கொண்ட நிலையில், கடந்த செவ்வாய்கிழமையன்று இந்திய நேரப்படி சரியாக பிற்பகல் 1 மணியளவில் தனது மனைவி கலைச்சுந்தரியுடன் வழக்கம் போல தொலைபேசியில் வீடியோ கால் அழைப்பில் பேசிக்கொண்டிருந்தார்.
தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த போது திடீரென்று பயங்கர சத்தத்துடன் வீடியோ அழைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜசேகரின் மனைவி சம்பவம் குறித்து தனது உறவினரிடம் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சூடான் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு அங்கு இருக்கும் அதிகாரி ஒருவரின் உதவியுடன் சூடான் செராமிக் தொழிற்சாலையில் ராஜசேகருடன் பணியுரியும் சக தொழிலாளி ஒருவரின் தொலைபேசி எண் கிடைத்தது.
அதன் மூலம், அதிகாரியை தொடர்பு கொண்டு விசாரித்த போது, 16 இந்தியர்கள் இறந்துவிட்டதாகவும் அதில், 3 பேர் தமிழர்கள் என தெரிவித்தார். ஆனால் ராஜசேகர் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கையில் இருந்தபோது, சூடானில் இருக்கும் இந்திய தூதரகத்தின் மூலம் செராமிக் தொழிற்சாலையில் உயிரிழந்த இந்தியர்களின் பெயர் பட்டியலை அனுப்பினர். அதில் தமிழகத்தை சேர்ந்தவர்களில் ராஜசேகரும் இறந்தது உறுதியானதால் ராஜசேகரின் மனைவி மற்றும் உறவினர்கள் மத்தியில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் தற்போது ராஜசேகரின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்காக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டு சொந்த ஊருக்கு அவரது உடல் எப்போது வருமென்று ராஜசேகரின் மனைவி, உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கவலையுடன் காத்திருக்கின்றனர்.

குடும்பத்தின் துயர் நீக்க, பணிக்கு சென்ற தனது கணவர் இனிமேல் வர மாட்டார் என மனைவியும், குழந்தையும் ஏங்கி தவிக்கின்றனர்.
ராஜசேகரின் மனைவி இதுகுறித்து கூறும்போது, "என் மீது அவர் பாசமாக இருப்பார். என் குழந்தை, என்னை அடித்தாலே அதை தாங்கிக்கொள்ள மாட்டார். எனது பெற்றோர் இறந்துவிட்டனர், சொந்தங்கள் யாரும் இல்லை, எனது உறவு என்பது என் கணவனும். குழந்தையும் தான்.
அவர் வெளிநாடு சென்றதில் இருந்து ஒரு நாள் கூட என்னிடம் பேசாமல் இருந்ததில்லை. தினமும் தொலைபேசியில் பேசுவோம், அவரும் விடுமுறை நாளென்றால் அதிக நேரம் தொலைபேசியில் பேசிக்கொண்டே இருப்பார்.
வீடியோ அழைப்பிலேயே குழந்தையுடன் விளையாடுவார்; இங்கு உள்ள உறவினர்கள் அனைவரிடமும் பேசுவார். அதுபோல் தான் அன்று செவ்வாய்க்கிழமை விடுமுறை நாளென்பதால் நன்றாக பேசிக்கொண்டிருந்தார். வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு வருவாக கூறி ஆசையாக பேசிக்கொண்டிருந்த போது, திடீரென்று அவருக்கு பின்னால் பெரிதாக ஏதோ ஒன்று பயங்கரமாக வெடித்தது. பிறகு அவரது அழைப்பும் துண்டிக்கப்பட்டது.
தொடர்ந்து தொலைபேசியில் முயற்சி செய்தும் இணைப்பு கிடைக்கவில்லை. உடனே அச்சத்தில் எனது கணவரின் சித்தப்பாவிடம் ஓடிசென்று நடந்த சம்பவம் பற்றி கூறினேன்," என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
மேலும் ராஜசேகரின் சித்தப்பா திருநாவுக்கரசு இதுகுறித்து பேசும்போது, "எனது மருமகள் (ராஜசேகரின் மனைவி) என்னிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். உடனே நான் வலைதளத்தில் சூடான் நாட்டின் இந்திய தூதரகத்தின் தொலைபேசி எண்ணை எடுத்து தகவலை கூறினேன், அவர்களுக்கே நான் சொன்ன பிறகு தான் அங்கே ஏற்பட்டிருக்கும் விபத்து குறித்து தெரிந்தது.

உடனே அங்கே தொலைபேசியில் பேசிய அதிகாரி ஒருவர் செராமிக் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் தொலைபேசி எண்ணை என்னிடம் பகிர்ந்தார். அதன் மூலம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தபோது, தொழிற்சாலையில் நிறுத்தி வைக்கப்படிருந்த எல்பிஜி கேஸ் டேங்கர் வெடித்ததால் அங்கே தீப்பரவி பெரும் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
பிறகு ராஜசேகர் குறித்து விசாரித்த போது தகவல் ஏதும் கிடைக்கவில்லை. பிறகு மறுநாள் சூடானில் இருந்து இந்திய தூதரகம் கொடுத்த இந்தியாவை சேர்ந்த இறந்தவர்கள் பெயர் பட்டியலை பார்த்ததும் தான் ராஜசேகரும் உயிரிழந்து விட்டார் என்று தெரியவந்தது. உடனே சம்பவம் இந்த விபத்து குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு தகவலை தெரிவித்ததுடன், ராஜசேகரின் உடலை விரைந்து தமிழகம் கொண்டுவர மனுவையும் அளித்தோம்," என்றார் ராஜசேகரின் சித்தப்பா திருநாவுக்கரசு.
ராஜசேகரின் உடலை தமிழகம் கொண்டுவருவது குறிந்து கடலூர் மாவாட்ட ஆட்சியர் அன்புசெல்வன் அவர்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, "ராஜசேகரின் உடலை இங்கே கொண்டு வருவது குறித்த மனுக்கள் சென்னை தலைமை செயலகத்திலுள்ள சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது'' என்றார்.
"சூடான் நாட்டின் இந்திய தூதரகத்தையும் தொடர்பு கொண்ட போது, இறந்தவர்கள் பற்றியும், அவர்களின் உடலை இங்கே கொண்டுவருவது குறித்தும் நடவடிக்கைகள் கேட்டறியப்பட்டுள்ளது. முதற்கட்ட தகவலில் ராஜசேகர் இறந்துவிட்டதாகவும், மேலும் விருதாச்சலத்தை சேர்ந்த நபர் ஒருவர் இந்த தீ விபத்தினால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமாக இருக்கிறார் என்றும் சூடானிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று அவர் மேலும் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












