"ஜாமியா போராட்டத்தில் குறைவாகவே பலப்பிரயோகம் செய்தோம்" - டெல்லி போலீஸ் விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெற்கு டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது குறைவாகவே பலப்பிரயோகம் செய்ததாக டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று டெல்லியில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், நேற்று மதியம் 2 மணியளவில் தொடங்கிய போராட்டம், மாலை 4:30 மணிக்கு மாதா மந்திர் பகுதியில் ஒரு பேருந்துக்கு தீவைக்கப்பட்டதன் மூலம் வன்முறையாக உருமாறியதாக டெல்லி காவல்துறையின் செய்தித்தொடர்பாளராக ரந்தவா கூறியுள்ளார்.
"இந்த போராட்டத்தில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர். இந்த போராட்டம் தொடர்பாக பரப்பப்பட்டு வரும் புரளிகளை யாரும், குறிப்பாக மாணவர்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். எனினும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
"இந்த வன்முறையில், கிட்டத்தட்ட 30 காவல்துறையினர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் இரண்டு பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், படுகாயமடைந்த ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன."
அதுமட்டுமின்றி, போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் குறைந்தபட்ச காவல்துறையினரே பயன்படுத்தப்பட்டகாகவும், அச்சமயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் டெல்லி காவல்துறையின் செய்தித்தொடர்பாளர் ரந்தவா செய்தியாளர்களிடம் கூறினார்.
நேற்று ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துக்குள் காவல்துறையினர் எவ்வித அனுமதியும் இன்றி அத்துமீறி நுழைந்ததாக அதன் துணைவேந்தர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, "வன்முறையில் ஈடுபட்ட ரௌடிகளை நாங்கள் பிடிக்க முற்பட்டபோது, அவர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் சென்றதால்தான் காவல்துறையினரும் உள்ளே நுழைய வேண்டியதாயிற்று. அப்போது, காவல்துறையினர் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது. இதுகுறித்து நாங்கள் விரிவாக விசாரணை நடத்த உள்ளோம்" என்று ரந்தவா விளக்கம் அளித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












