போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களின் தயாரிப்பு தற்காலிக நிறுத்தம் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
வரும் ஜனவரி மாதம் முதல் சர்ச்சைக்குரிய 737 மேக்ஸ் விமானங்களின் தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தப்படும் என போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.
இரண்டு பெரிய விபத்துகளுக்கு பிறகு அந்த வகை விமானங்கள் பறப்பதற்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டிருந்த போதும், அதன் தயாரிப்பு நிறுத்தப்படவில்லை.
இந்தோனீசியா மற்றும் எத்தியோப்பியாவில் 737 மேக்ஸ் ரக விமானங்கள் விபத்துக்கு உள்ளானதில் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
விமானத்தின் புதிய தொழில்நுட்ப அம்சத்தில் பழுது இருப்பதாக அப்போது கூறப்பட்டது.
இந்த வருடத்தின் தொடக்கத்தில் 737 மேக்ஸ் ரக விமானங்கள் பறப்பதற்கான தடை நீக்கப்படும் என போயிங் நம்பியது.
ஆனால் அமெரிக்காவில் உள்ள விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள், அந்த ரக விமானங்கள் பறப்பதற்கான அனுமதி அத்தனை எளிதில் கிடைக்காது என தெரிவித்திருந்தனர்.
வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டலிலிருந்து இயங்கிவரும் போயிங் நிறுவனம் அமெரிக்காவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக உள்ளது.
737 மேக்ஸ் தயாரிப்பு நிறுத்தப்பட்டதால் அதன் ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அதன் விற்பனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படக்கூடும்.

வடகொரியாவை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அமெரிக்கா

பட மூலாதாரம், Reuters
அமெரிக்கா - வட கொரியா பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, வட கொரியா கடந்த வாரம் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து முக்கிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், பேச்சுவார்தையைத் தொடரும்படி வட கொரியாவை மீண்டும் அழைத்துள்ளது அமெரிக்கா.
வடகொரியாவுக்கான அமெரிக்க பிரதிநிதி ஸ்டீஃபன் பீகன் இவ்விதம் அழைப்பு விடுத்தார்.
இந்த ஆண்டு முடிவுக்குள், வடகொரியா மேல் விதித்த தடைகளை நீக்கும் ஷரத்துகளுடன் கூடிய அணு ஆயுதநீக்க ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா எட்டவேண்டும் என வடகொரியா கூறியிருந்தது.
தவறினால் அமெரிக்கா அபாயகரமான கிறிஸ்துமஸ் பரிசு ஒன்றை எதிர்பார்க்கலாம் எனவும் வடகொரியா கூறியிருந்தது.

தமிழர்களுக்கு அதிகார பகிர்வு சாத்தியமற்றது: கோட்டாபய ராஜபக்ஷ

பட மூலாதாரம், GOTABAYA RAJAPAKSA FACEBOOK
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்குவது நடைமுறை சாத்தியமற்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
70 வருடங்களாக அதிகார பகிர்வு தொடர்பில் அரசியல்வாதிகள் கருத்துக்களை மாத்திரமே வெளியிட்டு வருகின்ற நிலையில், அது தொடர்பில் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் வாழ்கின்ற அனைத்து மக்களும் சமவுரிமையுடன் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தான் உள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அதிகார பகிர்வு என்பது ஒரு அரசியல் மயப்பட்ட விடயம் மாத்திரமே எனவும் அவர் குறிப்பிட்டார்.

டெல்லி போலீசார் பேருந்துகளுக்கு தீ வைத்தார்களா? #BBCFactCheck

டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த ஆர்பாட்டங்களின்போது நடந்த வன்முறைச் சம்பவங்களின் காணொளிகள் வைரலாகி வருகின்றன.
இந்த காணொளி ஒன்றில், எரிந்து கொண்டிருக்கும் இரு சக்கர வாகனம் ஒன்றின் தீயை அணைக்க முயற்சிக்கிறார் ஒருவர். அருகிலேயே ஒரு டெல்லி போக்குவரத்துக்கு கழகப் பேருந்து ஒன்றும் நிற்கிறது.
காவல்துறையைச் சேர்ந்த சிலர் மஞ்சள் பிளாஸ்டிக் பெட்டிகளில் நிரப்பப்பட்ட சில பொருட்களை காரில் கொண்டு செல்கின்றனர். இந்த 20 வினாடி நீளமுள்ள காணொளியில், "அணைந்துவிட்டது... அணைந்துவிட்டது..." என்ற குரல் பின்னால் இருந்து கேட்கிறது.

உன்னாவ் வன்புணர்வு: முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. குற்றவாளி என தீர்ப்பு

பட மூலாதாரம், Getty Images
உன்னாவ் இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சேங்கர் குற்றவாளி என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், வழங்கவேண்டிய தண்டனை குறித்து நாளை செவ்வாய்க்கிழமை வழக்குரைஞர்கள் வாதிடுவார்கள். பாலியல் வன்புணர்வு குற்றத்தில் சேங்கர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடத்தல் குற்றச்சாட்டில் என்ன முடிவு என்று இன்னும் தெரியவில்லை.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபரான சஷி சிங் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் போக்சோ சட்டத்தை பயன்படுத்திய விதம் குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் காட்டிய சிபிஐ போக்கை கண்டித்தனர்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 (வன்புணர்வு) மற்றும் பாலியல் தாக்குதல்களில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) பிரிவு 5(C) மற்றும் 6 ஆகியவற்றின் கீழ் சேங்கர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












