இலங்கை குண்டுவெடிப்பு சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமுக்கு தமிழ்நாடு, கேரள முஸ்லிம்களுடன் தொடர்பா?

ISLAMIC STATE

பட மூலாதாரம், ISLAMIC STATE

படக்குறிப்பு, ஐ.எஸ் வெளியிடும் பல காணொளிகளின் இறுதியில் காணப்படும் படம்.
    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி-க்காக

இலங்கை தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல்தாரியான சஹ்ரான் ஹாசிமை பின் தொடர்பவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இந்திய பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு கேரளாவில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

வன்முறை ஜிஹாத்தில் நம்பிக்கை உடையவர்கள் என சந்தேகிக்கும் நபர்களை அடையாளம் காணும் விசாரணையை தேசிய புலனாய்வு முகமையும் (என்.ஐ.ஏ) முழுவீச்சில் முடுக்கிவிட்டுள்ளது.

ஹாசிமை பின் தொடரும் இந்த உதிரிகளை சந்தேகிக்க பல்வேறு விஷயங்கள் காரணமாக உள்ளன.

முதல் காரணம், காசிம் பிரசாரம் செய்யும் ஒலிநாடாக்கள் கேரளாவில் பரவி உள்ளன.

இந்த ஒலிநாடாக்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் இஸ்லாம் மத நம்பிக்கைக்கு எதிரானது என்கிறார்கள் மத அறிஞர்கள்.

'3 ஐஎஸ் தீவிரவாதிகள் கேரளாவில் கைது'

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

இரண்டாவது காரணம், இந்த ஒலிநாடாக்கள் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று கோவையில் கைது செய்யப்பட்ட கடும்போக்குவாதிகள் என கருதப்படும் இளைஞர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த வழக்கை விசாரணை செய்த தேசிய புலனாய்வு முகமை, ராஜீய உறவுகள் மூலம் இலங்கையை எச்சரித்ததாக தரவுகள் கூறுகின்றன.

கேரளாவை சேர்ந்த 21 இளைஞர்களை கருத்தியல் ரீதியாக மூளைச் சலவை செய்யப்பட்டு, அவர்கள் இலங்கை வழியாக சிரியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் செல்ல 2016ஆம் ஆண்டு உதவியதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

தேசிய புலனாய்வு அமைப்பு காசர்கோடில் இரண்டு வீடுகளையும் மற்றும் பாலக்காட்டில் உள்ள ஒரு வீட்டையும் சோதனையிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து விசாராணையில் உள்ள மூன்று இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கும் 2016 ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர இந்தியாவைவிட்டு வெளியேறியவர்களுக்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்கிறது தேசிய புலனாய்வு முகமை.

தேசிய தவ்ஹீத் ஜமாத்

ஹாசிமால் இலங்கையில் தொடங்கப்பட்டது தேசிய தவ்ஹீத் ஜமாத் . இலங்கையில் செயல்படும் ஸ்ரீ லங்கன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பிலிருந்து இந்த அமைப்பு முற்றிலும் வேறுபடுகிறது. ஸ்ரீ லங்கன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு வன்முறை வழிகளை பரிந்துரைப்பதில்லை.

தமிழ்நாட்டிலும் தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு செயல்படுகிறது. ஆனால், கேரளாவில் தவ்ஹீத் ஜமாத் ஏதும் இல்லை. ஆனால், இஸ்லாமின் சலாஃபி சிந்தனை உடைய மூன்று குழுக்கள் கேரளாவில் செயல்படுகின்றன.

இந்த குழுக்களில் உள்ள சில நபர்களின் சமய பேருரைகள், இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் சிந்தனையை ஒட்டி உள்ளன.

"இது எவ்வளவு பெரிய குழு என இப்போது எங்களால் சொல்ல முடியாது. ஏனெனில், இப்போதெல்லாம் தகவல் தொடர்பு பெரும்பாலும் இணையம் மூலமே நடைபெறுகிறது" என்று பெயர் வெளியிட விரும்பாத ஓர் அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.

கேரளாவில் கைப்பற்றப்பட்ட ஒலிநாடாக்களில் ஹாசிமின் தமிழ் உரைகள் இருந்ததாகவும், அதில் அவர் வன்முறை ஜிஹாத்துகள் குறித்து உரையாற்றுவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

என்ன உரையாற்றுகிறார்கள்?

ஹாசிம் தன் உரையில் செளதி சலாஃபி சிந்தனை பள்ளி குறித்து ஷேக் ஃபயுசான் எழுதிய 'அல் வாலா மற்றும் அல் பாரா' குறித்து உரையாற்றுகிறார். இந்த புத்தகமானது ஓர் இஸ்லாமியர், இஸ்லாமியரிடமும், இஸ்லாமியர் அல்லாதவரிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென விவரிக்கிறது.

இலங்கை தாக்குதல்களுக்கு சூத்திரதாரியாக சந்தேகிக்கப்படும் சஹ்ரான் ஹாசிம்
படக்குறிப்பு, இலங்கை தாக்குதல்களுக்கு சூத்திரதாரியாக சந்தேகிக்கப்படும் சஹ்ரான் ஹாசிம்

"உதாரணமாக, இஸ்லாமியர்கள் எந்தக் காரணத்தை கொண்டும் இஸ்லாமியர் அல்லாதவருடன் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என்கிறது. இஸ்லாமியருக்கே அனைத்திலும் முக்கியத்துவம் தர வேண்டும். இஸ்லாமியர்கள் இல்லாத சூழலில் வசிக்கும் ஒரு முஸ்லிம், முஸ்லிம் பகுதிகளுக்கு குடிபெயர வேண்டும் என்கிறது" என்கிறார் கேரள பல்கலைக்கழகத்தில் இஸலாமிய கல்வித் துறை பேராசிரியரான அஷ்ரஃப் கடக்கல்.

ஆனால் சலாஃபி சிந்தனைக்கும், ஹாசிமின் பிரசாரத்துக்கும் வேறுபாடு உள்ளது என்கிறார்கள்.

சலாஃபி சிந்தனை தாங்கள் முன்மொழியும் இஸ்லாமே உண்மையான இஸ்லாம் என்கிறது. ஆனால், சலாஃபி சிந்தனையாளர்கள் சிலர் ஐ.எஸ் அமைப்பை கண்டிக்கின்றனர். அதற்கு காரணம். அதற்கு அவர்கள் ஐ.எஸ் அமைப்பின் வன்முறை செயல்களை சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த வன்முறை குழுக்கள் எழுச்சி பெறுவது எப்படி?

"ஐ.எஸ் கருத்தியல் மீது ஆர்வங்கொண்டவர்கள் நிச்சயம் மதராஸாக்களிலோ அல்லது உலமாக்களிடமோ பயிற்சி பெற்றவர்கள் இல்லை. இவர்கள் இஸ்லாம் நெறியிலிருந்து வழிபிறழ்ந்தவர்கள்" என்கிறார் பேராசிரியர் அஷ்ரஃப்.

"2016ஆம் ஆண்டு சிரியா, ஆஃப்கானிஸ்தான் சென்றவர்கள் யார் என்று ஆய்வு செய்தீர்களானால், அவர்கள் யாரும் குரானை நன்கு படித்தவர்களோ அல்லது ஹதீஸில் புலமை பெற்றவர்களோ இல்லை. அவர்கள், சிலரின் பேச்சுகள், புத்தகங்கள் மூலம் இஸ்லாம் கற்றவர்கள்" என்கிறார் அவர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பெயரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் துணை தலைவர் அப்துல் ரஹ்மான், "எங்களுக்கும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. எங்களுக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை. நாங்கள் கிராமங்களுக்கு சென்று பயங்கரவாதத்திற்கு எதிராகவும், அமைதிக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்கிறோம்" என்கிறார்.

'அல் வாலா அல் பாரா'

"நம் நாட்டில், இந்து, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என அனைத்து மத மக்களும் வசிக்கிறார்கள். ஏன் கடவுளே இல்லை என்பவர்களும் இருக்கிறார்கள்.மக்கள் இணக்கமாக வாழ வேண்டும் என கடந்த முப்பது ஆண்டுகளாக பிரசாரம் செய்கிறோம். இவர்கள் மத்தியில் சமூக நல திட்டங்களை செயல்படுத்துகிறோம், வரதட்சணைக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்கிறோம். நாங்கள் ஏன் ஒருவர் இன்னொருவருடன் இணக்கமாக வாழக் கூடாது என பிரசாரம் செய்ய போகிறோம்?" என்கிறார் ரஹ்மான்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

என்ன செய்ய வேண்டும்?

"இவர்களுக்கு எந்த ஆதரவும் இல்லை என்பதால் கேரள போலீஸ் இதனை தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால், இது முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும். இல்லையென்றால், தீவிரவாத சிந்தனை உடையவர்கள் சமூகத்தில் வளர இதுவே ஓர் ஊக்கியாக அமையும்" என்கிறார் பேராசிரியர் அஷ்ரஃப்.

தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், அதே நேரம் தீவிரவாத சிந்தனை உடைய இளைஞர்களை மீட்டெடுக்க சில திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்கிறார் ஒரு தேசிய புலனாய்வு அதிகாரி.

தீவிரவாத சிந்தனையுடன் சிரியாவுக்கு செல்ல முயன்ற ஒரு மும்பை இளைஞரை மீட்டு அவரை சரியான வழியில் நெறிப்படுத்திய வெற்றிக் கதையும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு உண்டு.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :