'ரஃபேல் ஒப்பந்தத்துக்கு பின் அனில் அம்பானி நிறுவனத்துக்கு பிரான்சில் ரூ.1,044 கோடி வரி தள்ளுபடி'

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: பிரான்ஸில் அனில் அம்பானி நிறுவனத்துக்கு ரூ.1,044 கோடி வரி தள்ளுபடியா?
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை அடுத்து அம்பானி நிறுவனத்துக்கு பிரான்ஸ் அரசு ரூ.1,044 கோடி வரி தள்ளுபடி வழங்கியதாக வெளியான பத்திரிகை தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
"பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப்படைக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய பாரதிய ஜனதா கூட்டணி அரசு முடிவு எடுத்தது. 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ந் தேதி இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆனால், இந்த பேரத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி புகார் எழுப்பி வருகிறது.
இந்த நிலையில் ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் அனில் அம்பானியின் பிரான்ஸ் நிறுவனத்துக்கு அந்த நாட்டு அரசு வரித்தள்ளுபடி வழங்கி உள்ளதாக அந்த நாட்டின் லே மாண்ட் செய்தித்தாள், செய்தி வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் மொத்தம் 151 மில்லியன் யூரோ செலுத்த வேண்டும் என்று 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரான்ஸ் அரசு வரித்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.
ஆனால், 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸ் அரசுடன் பிரதமர் நரேந்திர மோதி ஒப்பந்தம் செய்து சில மாதங்கள் ஆன நிலையில், பிரான்ஸ் அரசு வரித்துறை அதிகாரிகள் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் 151 மில்லியன் யூரோ பெறுவதற்கு பதிலாக வெறும் 7.3 மில்லியன் யூரோவை தீர்வு தொகையாக (செட்டில்மென்ட்) பெற்றுக்கொண்டு மற்றவற்றை தள்ளுபடி செய்து விட்டனர்.
இதுபற்றி ரிலையன்ஸ் செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், "பிரான்ஸ் அரசு கேட்ட வரி நிலைத்து நிற்கத்தகுந்தது அல்ல; சட்டவிரோதமானதும்கூட. இது தொடர்பான தீர்வில், எந்த தவறும் நடக்கவில்லை" என கூறியதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - மாட்டிறைச்சி தாக்குதல் சம்பவம்
அஸ்ஸாமில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கும்பல் ஒன்றால் இஸ்லாமியர் ஒருவர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, அந்த மாநிலத்தின் பிஸ்வாநாத் மாவட்டக் காவல் துறை தெரிவித்துள்ளது.
45 வயதான சௌகத் அலி எனும் இஸ்லாமியர் தாக்கப்பட்டபின், அவர் ஒரு இரவு முழுதும் எதற்காக காவல் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்று அவரது உறவினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
வெளியில் சூழ்நிலை சரியில்லாததால், பாதுகாப்பு கருதி அவரைக் காவல் நிலையத்தில் வைத்திருந்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தினமணி: "வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு"

பட மூலாதாரம், AFP
ஆந்திரத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலின்போது, பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
"டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை சனிக்கிழமை சந்தித்த சந்திரபாபு நாயுடு, அவரிடம் இதுதொடர்பாக புகார் மனுவை அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆந்திரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், 175 பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதில், பல இடங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால், வாக்காளர்கள் 2 முதல் 6 மணி நேரம் வரை காத்திருந்து வாக்களித்தனர். சில இடங்களில் வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.
வாக்குப்பதிவு இயந்திரம் இயங்காததால், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியே வாக்களிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
எனவே, பல மணி நேரமாகியும் வாக்குப்பதிவு தொடங்காத 618 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும்" என்று சந்திரபாபு கூறியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தி இந்து - 'தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்படும்'
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23 வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும் ஏப்ரல் 18 அன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தபின், அவை ஓரளவு தளர்த்தப்படும் என்று தமிழகத்தின் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு தெரிவித்துள்ளார்.
இந்தத் தளர்வுகள் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கும், ஒரு வேளை மறுதேர்தல் நடந்தால், அந்தப் பகுதிகளுக்கும் பொருந்தாது.
தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டால் அடுத்த சில வாரங்களில் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளை அரசு மீண்டும் தொடங்கலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












