குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம்: மார்க்சிஸ்ட் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

"குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம்: மார்க்சிஸ்ட் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி"

பட மூலாதாரம், Getty Images

இந்திய நாளிதழ்களில் இன்று (சனிக்கிழமை) வெளியான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி: "குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம்: மார்க்சிஸ்ட் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி"

அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டார். அதில், "17-ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைத் தோற்கடித்து மதச்சார்பற்ற மாற்று அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்துவது என்று சூளுரைத்துள்ளோம்.

விலைவாசியைக் கணக்கில் கொண்டு அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் 200 நாள்கள் வேலையும், ரூ.400 குறைந்தபட்ச கூலியும் கிடைக்கும் விதத்தில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படும்.

பெரு முதலாளிகள், பில்லியன் கோடீஸ்வரர்கள் மீது கூடுதல் வரி விதிப்பு என்ற முறையில் மாற்றம் செய்யப்படும். செல்வ வரியை மீண்டும் கொண்டு வருவோம். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்" உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அந்த கட்சி அறிவித்துள்ளது.

இலங்கை

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "ஐஏஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு"

"ஐஏஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு"

பட மூலாதாரம், Getty Images

இந்திய ஆட்சிப் பணி தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

"பல்வேறு கட்டங்களாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து நடந்து வந்த இந்திய ஆட்சிப் பணி தேர்வுக்கான இறுதி முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு ஆட்சிப் பணிகளுக்கு 759 பேர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, தேர்ச்சி பெற்றுள்ள 759 பேரில் 34 பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தமிழகத்தை சேர்ந்தவர்கள் சராசரியை விட மிகவும் குறைவாக கருதப்படுகிறது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை

தமிழ் இந்து - "வாரணாசியில் மோடியை எதிர்ப்பாரா பிரியங்கா?"

பிரியங்கா காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரியங்கா காந்தி

உ.பி.யின் முக்கிய தொகுதிகளில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் கிடைக்காமல் காங்கிரஸ் திணறி வருகிறது. இந்த நிலையில், வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோதியை எதிர்ப்பாரா பிரியங்கா காந்தி எனும் கேள்வி எழுந்துள்ளதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

"உ.பி.யின் 80 தொகுதிகளில் மாயாவதி, அகிலேஷ் யாதவ் தலைமையில் அமைந்த கூட்டணியில் காங்கிரஸை சேர்க்கவில்லை. இதனால், தனித்து விடப்பட்ட காங்கிரஸ் உ.பி.யின் சிறிய கட்சிகளை தம்முடன் சேர்த்துள்ளது. இவர்களுக்காக சில தொகுதிகளை ஒதுக்கியதுடன் அக்கட்சிகளை சேர்ந்த சிலரையும் தம் வேட்பாளராக்கி காங்கிரஸ் போட்டியிட வைக்கிறது.

இருப்பினும் அதற்கு போதுமான வேட்பாளர்கள் கிடைக்காமல் திணறி வருகிறது. இதனால், உ.பி.யின் முக்கிய தொகுதிகளான வாரணாசி, அலகாபாத், லக்னோ மற்றும் கோரக்பூர் ஆகியவற்றில் காங்கிரஸால் வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் உள்ளது.

வாரணாசியில் பிரதமர் மோதி மீண்டும் போட்டியிடுகிறார். இங்கு தமது பீம் ஆர்மி கட்சியின் சார்பில் அதன் தலைவர் ராவண் என்கிற சந்திரசேர ஆசாத் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இவருக்கு எந்த கட்சிகளும் இதுவரை ஆதரவளிக்க முன்வரவில்லை. இதனிடையில், அங்கு காங்கிரஸின் பொதுச்செயலாளர் பிரியங்கா போட்டியிட வேண்டும் என அவரது கட்சியில் குரல்கள் எழுந்துள்ளன. இதற்கு சாதகமான பதிலை பிரியங்கா நேரடியாக கூறவில்லை.

எனினும், மற்ற எதிர்க்கட்சிகளும் அவருக்கு ஆதரவளிக்க முன்வந்தால் பிரியங்கா வாரணாசியில் போட்டியிடும் வாய்ப்புகள் உள்ளன. இதன்மூலம், தனது வெற்றியை போட்டிக்கு முன்பாகவே உறுதிப்படுத்த பிரியங்கா விரும்புகிறார்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை

தினத்தந்தி: "தேர்தலில் போட்டியிடும் 401 வேட்பாளர்கள் கோடீசுவரர்கள்"

தேர்தலில் போட்டியிடும் 401 வேட்பாளர்கள் கோடீசுவரர்கள்

பட மூலாதாரம், Getty Images

நாடாளுமன்றத்துக்காக நடக்கும் முதல்கட்ட தேர்தலில் 401 வேட்பாளர்கள் கோடீசுவரர்கள் என்று தெரியவந்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"நாடாளுமன்ற தேர்தல் முதல்கட்டமாக வருகிற 11ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் 1,279 வேட்பாளர்களில் 1,266 பேரின் வேட்புமனு ஆவணங்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு ஆய்வு செய்தது. அதில், 1,266 பேரில் 401 வேட்பாளர்கள் ஒரு கோடி மற்றும் அதற்கு மேல் சொத்து உள்ளவர்கள். இவர்களில் 69 பேர் காங்கிரஸ், 65 பேர் பா.ஜனதா, 32 பேர் பகுஜன்சமாஜ், 25 பேர் தெலுங்குதேசம், 22 பேர் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், 17 பேர் டி.ஆர்.எஸ். ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள்.

23 வேட்பாளர்களுக்கு சொத்துகள் இல்லை. 33 வேட்பாளர்கள் ஆண்டு மொத்த வருமானம் ரூ.1 கோடிக்கு மேல் தெரிவித்துள்ளனர். ரூ.1 கோடிக்கு மேல் சொத்து உள்ளவர்களில் 70 பேர் தங்கள் வருமான வரி கணக்கை காட்டவில்லை.

213 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளது. 146 பேர் மீது தீவிர குற்ற வழக்குகளும், 12 பேர் மீது தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளும், 10 பேர் மீது கொலை, 25 பேர் மீது கொலை முயற்சி வழக்குகளும், 4 பேர் மீது கடத்தல் வழக்குகளும், 16 பேர் மீது கற்பழிப்பு உள்ளிட்ட பெண்கள் தொடர்பான வழக்குகளும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்" என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :