தமிழகத்தில் கல்வித் தரம் குறைவாக இருப்பதை மறுக்க முடியாது: பாஜக நாராயணன்

நீட் கொண்டு வந்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. நீட் தேவையில்லை என குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோதி கூறினார். கல்வித்தரத்தை உயர்த்திக்கொள்ள அவர் ஓராண்டு அவகாசம் கேட்டார் என பிபிசி தமிழின் 'தமிழர் குரல்' எனும் தேர்தல் சிறப்பு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களுடன் நடத்திய உரையாடலின்போது தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் நாராயணன் கூறினார்.
இது பற்றி மேலும் கூறிய அவர், தமிழகத்தில் முதல் முறையாக கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. நீட் தேர்வை நடைமுறைப்படுத்த வேண்டும் எனும் நீதிமன்ற உத்தரவைத்தான் பாஜக அமல்படுத்தியது என்றார்.
நீட் கொண்டுவரவேண்டும் என்றது காங்கிரஸ். பாஜக அரசு அவசர சட்டம் மூலம் ஓராண்டு தமிழகத்துக்கு விலக்கு அளித்தது என்றார் அவர்.
தமிழக அரசு நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டிருப்பதற்கு ஒப்புதல் கொடுக்கலாமே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நாராயணன், தமிழகத்தில் கல்வித் தரம் குறைவாக இருப்பது மறுக்க முடியாது, அதை உயர்த்த வேண்டும் என்றார்.
தலைசிறந்த 100 இந்தியப் பல்கலைக்கழகங்களில் சுமார் 30 தமிழகத்தில்தான் உள்ளது என்று அப்போது அவரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
தமிழகத்தில் மக்கள் உணர்வுகளுக்கு எதிராக பாஜக இருப்பதுபோல சில ஊடகங்களும், அமைப்புகளும் பரப்புகின்றனர். பாஜக தமிழகத்துக்கு எதிராக இருப்பதுபோல ஒரு கட்டமைப்பு உள்ளது. பாஜக இங்கு வலுவாக இல்லை என்பது உண்மைதான், என்று மேலும் கூறினார் நாராயணன்.
மாணவர்கள் உடனான அவரது உரையாடலை பிபிசி தமிழின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன் நெறிப்படுத்தினார்.
தமிழகத்தின் உணர்வுகளுக்கு எதிரானதா பாஜக என அவரிடம் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு, தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டை கொண்டு வந்தது பாஜக. காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் சேர்த்தது காங்கிரஸ் ஆட்சியில்தான் என்று கூறிய நாராயணன், தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டபோது நாங்கள் ஆட்சியில் இல்லை. மீண்டும் கொண்டு வந்தது தாங்கள்தான் என்று அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஏற்கனவே தமிழகத்தில் இருக்கும் முன்னேற்றங்களை மறுத்து கழகங்கள் இல்லாத தமிழகம் எனும் முழக்கத்தை பாஜக முன்வைப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தியாவிலேயே என்னுடைய மாநிலமான தமிழகம்தான் வளர்ச்சியடைந்த மாநிலம். அதிலென்ன சந்தேகம் என்று கேட்டார்.
ஆனால், கடந்த 25 - 30 ஆண்டுகளாக தமிழகத்தில் எல்லா துறைகளும் ஊழலில் ஊறிப்போயுள்ளன. இந்த அமைப்பை மாற்ற வேண்டும். தமிழகத்தைவிட பிற மாநிலங்கள் வேகமாக முன்னேறி வருகின்றன.
நாம் நன்றாக இருந்ததை ஏற்றுக்கொள்கிறோம். பிற மாநிலங்கள் முன்னேறுவதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.

தூய்மை இந்தியா திட்டம் வெறும் குப்பை அள்ளும் திட்டம் அல்ல. நாடு முழுதும் 15 லட்சம் கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளும் திறந்த வெளியில் மலம் கழிப்பதால் இறப்பதாக தரவுகள் கூறுகின்றன. அதை ஒழிக்கவே இந்தத் திட்டம் என்றார்.
பியரில் 12 ஆயிரம் கோடி ஊழல்
"டாஸ்மாக்கில் ஒரு பியருக்கு 10 ரூபாய் அதிகம். தமிழகத்தில் உள்ள 6000 கடைகளில் கணக்கு போட்டால் நாளொன்றுக்கு 30 கோடி ரூபாய். ஆண்டுக்கு கணக்கில் வராமல் 12,000 கோடி ரூபாய் ஊழல் நடக்கிறது" என்றார் அவர்.
பெரு நிறுவனங்கள் செய்யும் ஊழல் பற்றி ஏன் பேசுவதில்லை என்ற கேள்விக்கு, டாஸ்மாக்கில் 10 ரூபாய் அதிகம் வாங்குவது ஒரு விஷயமா என எளிதில் கடந்து செல்கிறோம். ரஃபேல் ஒப்பந்தத்தில் உச்ச நீதிமன்றமும், சி.ஏ.ஜி-யும் முறைகேடு இல்லையென சொல்லிவிட்டன என்றார் அவர்.
"அனில் அம்பானிக்கு 30,000 கோடி ரூபாய் கொடுத்துவிட்டதாக கூறுகிறார்கள். இந்தியாவில் தயாரிக்க வேண்டும் என ஒப்பந்தத்தில் உள்ளது. அதில் 79 நிறுவனங்கள் உள்ளன. அனில் அம்பானி நிறுவனத்துக்கு 3% தான். 30,000 கோடி அனில் அம்பானிக்கு கொடுத்ததற்கு கணக்கு உள்ளதா?" என்று கேட்டார்.
ஆயுத பேர ஊழல்தான் உலகிலேயே மிகப்பெரிய ஊழல். போஃபர்ஸ், அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் உள்ளிட்டவற்றை நாம் கண்டுள்ளோம். ராபர்ட் வத்ராவுக்கு நெருக்கமான சஞ்சய் பண்டாரி என்பவர் வேறு நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை கொடுக்கு முயல்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார் நாராயணன்.
கஜ புயல்: ஏன் மோதி வரவில்லை?
"பிரதமர் நரேந்திர மோதி கஜ புயல் பாதிப்பு உண்டான சமயத்தில் தமிழகத்துக்கு வரவே இல்லை. சமீபத்தில் நான்கு முறை வந்துள்ளார். ஓட்டு வேண்டும், மக்கள் தேவை இல்லையா" என் மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய நாராயணன் "எதிர்க்கட்சிகளிடம் கேட்கிறேன். தானே புயலுக்கு மன்மோகன் சிங் வந்தாரா? அவர் வரவில்லை என்பதால், மோதி வரவில்லை என்று கூறவில்லை. கஜ சமயத்தில் பிரதமர் மோதி இந்தியாவில் இல்லை. அதனால்தான் வரவில்லை. ஆனாலும் உடனடியாக, எடப்பாடி பழனிசாமி உடன் பேசினார். உதவிகள் தர உறுதியளித்தார். ஒக்கி புயல் வந்த ஒரு வாரத்தில் வந்தார் மோதி. பேரிடர் காலங்களில் மக்களுக்கு நிதி எப்படி திரட்டுவது என யாரும் சிந்திக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
சுனாமி நிகழ்ந்தபோது, தேசியப் பேரிடர் நிவாரண நிதி, மாநிலப் பேரிடர் நிவாரண நிதி அதன் பின் சட்டம் மூலம் கொண்டுவரப்பட்டது.
தேசிய பேரிடர் நிதி தொடக்கத்தில் 700 கோடி ரூபாய்தான் இருந்தது. இப்போது 7,000 கோடி ரூபாய் உள்ளது. மாநிலப் பேரிடர் நிவாரண நிதி 90% மட்டத்திய அரசின் பங்கு. கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்துக்குத்தான் அதிக பேரிடர் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினார் நாராயணன்.
"பேரிடர் காலங்களில் கொடுப்பது அவசர தேவைக்குதான். பின்னர் சம்மந்தப்பட்ட அமைச்சகம் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு பின்னர் நிதி ஒதுக்கப்படும்.
ஒரு லட்சம் கோடி தேவை. 10,000 கோடிதான் கொடுக்கப்பட்டது என்பதால் மீது நிதி எங்கிருந்து வழங்கப்படும் என்பதை யோசிக்க வேண்டும்.
பிரதமர் பாதுகாப்பு அல்லது வேறு காரணங்களுக்காக வராமல் இருந்திருக்கலாம். ஆனால், வளர்ச்சிப் பணிகள் நடந்ததா என்பதே முக்கியம்" என்றார் நாராயணன்.
கழகங்கள் இல்லாத தமிழகம் என்று கூறும் நீங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது ஏன் என பிபிசி தமிழின் சமூக வலைத்தள நேயர் ஒருவர் கேட்ட கேள்வியை முன்வைத்த போது "தங்கள் கட்சியும் கொள்கையும் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்பதே நோக்கம். அதிமுக , திமுகதான் தமிழகத்தில் பெரிய கட்சிகள். நமக்கு எதிராக 10 பேர் அணி சேரும்போது, அதை நாங்களும் செய்ய வேண்டும். இது ஒரு 'நம்பர் கேம்' தான்" என்றார் அவர்.
எதிர்த்துக் கேட்போரை ஏன் ஆன்டி-இந்தியன் என எச்.ராஜா போன்ற பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள் என மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "யார் கேட்டார்கள், என்ன கேட்டார்கள் என்பது முக்கியம். எந்த சூழலில் சொல்லப்பட்டது என்பது முக்கியம். இந்தியாவை விமர்சிப்பவர்களைத்தான் சொல்கிறோம். தரம் தாழ்ந்து பேசுவது தவறு" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
ரூபாய் 3000 கோடியில் ஒற்றுமை சிலை முக்கியமா? சர்தார் வல்லபாய் படேல் கேட்டாரா? என்று ஒரு மாணவர் இந்த நிகழ்ச்சியின்போது நாராயணனிடம் கேட்டார்.
"தமிழகத்தில் சிலை கலாசாரம் அதிகம் உள்ளது. இந்தியாவின் அனைத்து சமஸ்தானங்களையும் இணைந்தவர் பட்டேல். 3000 கோடி ஒரு செலவல்ல. அது ஒரு முதலீடு. இதன்மூலம் தினமும் வருமானம் வருகிறது.
சிலைகள், வளைவுகள் அமைப்பது விழிப்புணர்வுக்குத்தான். தூய்மை இந்தியா திட்டத்துக்கும் அதிகம் விளம்பரச் செலவு செய்யப்பட்டதாக விமர்சனம் உள்ளது. எந்த அளவுக்கு விளம்பரம் தருகிறோமோ அந்த அளவுக்கு அதிகம் அது சென்று சேரும்" என்று பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் பதில் சொன்னார்
"வெளிப்படையாக சொல்ல முடியாது"
கடவுள் மறுப்பை தவிர பெரியாரிடம் பாஜக மாறுபடுவது என்ன என மாணவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, "நாங்கள் எதிர்க்கக் காரணம் கலாசார சீர்கேடு. அவற்றையெல்லாம் வெளிப்படையாகச் சொல்ல முடியாது" என்று கூறிய நாராயணன், இந்து கலாசாரம் இந்தியாவின் கலாசாரம். அதை எதிர்த்து ஈவெரா பிரசாரம் செய்தார் என்றும் இந்தியாவில் 99 சதவீதம் பேர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். 99 சதவீதம் பேரின் பேரின் நம்பிக்கையை எதிர்த்தவரை நாங்கள் எதிர்ப்போம் என்றார்.
பெண்கள் இட ஒதுக்கீடு குறித்து சமூக வலைத்தள நேயர் ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார். அரசியல் கட்சிகள் ஏன் பெண்களுக்கு அதிகம் வாய்ப்பளிக்கவில்லை என்பதே அந்தக் கேள்வி.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் 48.4 சதவீதம் பேர் பெண்கள். அவர்களில் 71.5% பேர் வேலைக்கு செல்லவில்லை. பெண்கள் வேலைக்கு செல்லாதது இங்கு வழக்கமாக இருந்துள்ளது.
சமூக அமைப்பு மாற மாற பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். முடிந்த வரை எங்கள் கட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம் என்கிறார்.
பாஜக ஆட்சியில் கடந்த ஐந்து வருடங்களில் வெளிவந்த கருப்புப் பணம் எவ்வளவு என்ற மாணவர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த நாராயணன், பணமதிப்பு நீக்கம் மூலம் 99.9% பணம் வங்கிகளுக்கு திரும்பி வந்துவிட்டது. 2004இல் பாஜக ஆட்சியில் இருந்து வெளியேறியபோது 500-1000 ரூபாய் நோட்டுகள் 38%தான். அதுவே 2014இல் 84% ஆனது. அதே காலகட்டத்தில் பொதுத்துறை கடன் 18 லட்சம்கோடியில் இருந்து 54 லட்சம் கோடியானது.
2007-2014இல் வீட்டு விலை குறைந்துள்ளது. இப்போது கருப்பு பணம் பரிமாற்றம் நிகழ்வதில்லை.
சுவிட்சர்லாந்துக்கு சென்ற கருப்பு பணம் மொரீசியஸ் மூலம் மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது. அவை நிலங்களில் முதலீடு செய்யப்பட்டன.
நீரவ் மோதி தப்பிச்செல்லவில்லை. இந்திய அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகளால் ஓடிப்போய் விட்டார் என்று நாராயணன் குறிப்பிட்டார்.
'மோடி வெறுப்பு, பாஜக எதிர்ப்பு'

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் சென்ற அபிநந்தன் இரண்டு நாளில் இந்தியா வந்ததன் காரணம், இந்தியாவின் முக்கியத்துவத்தை உணர்ந்த வெளிநாடுகள் கொடுத்த அழுத்தம். அதை பேச மறுக்க காரணம் மோடி வெறுப்பு, பாஜக எதிர்ப்பு என்று கூறிய நாராயணன் விமர்சனங்கள் இருக்கலாம். சில தவறுகள்கூட இருக்கலாம். அவை பிழைகள்தான். அவற்றை பூதாகரப்படுத்தக்கூடாது என்றார்.
பணமதிப்பு நீக்கத்தால் மக்கள் இறந்தார்கள் என்பதே தவறு. வங்கிகளின் வரிசையில் இறந்தவர்கள், வங்கிக்கு வராமல் இருந்திருந்தால் இறந்திருக்க மாட்டார்கள் என கூட முடியுமா?
எனக்கே வியாபாரம் பாதித்தது. ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின் 10 நாட்கள் சாப்பிடக்கூடாது என்றால் அதைக் கேட்கவே வேண்டும் என்றார்.
அடுத்துவரும் சந்ததிகளுக்கு எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அமைப்பை மாற்றியுள்ளோம். இதன் பலன்களை அனுபவிக்க இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகும் என்று இறுதிக்கு கேள்விக்கு பதிலளித்தார் நாராயணன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












