தமிழர் குரல்: "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொய் சொல்லாது" - டி.எஸ் கிருஷ்ணமூர்த்தி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்தியாவின் பெருமை. இதனால், காகிதங்கள் வீணாகாது. நேர விரையத்தை இது குறைப்பதோடு, இதனால் விரைவாக முடிவுகளை அறிவிக்க முடியும் என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
பிபிசி நடத்தும் தமிழர் குரல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்த அமர்வை பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
இந்தியாவை தவிர பிரேசிலிலும் இந்த வாக்குப்பதிவு முறை இருப்பதாக அவர் கூறினார்.
கட்சிகள் ஏதேனும் குறைப்பாடு சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள். மனிதர்கள் பொய் சொல்வார்கள். ஆனால் இயந்திரங்கள் பொய் சொல்லாது என்று அவர் கூறினார்.
நம் வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்பாமல் இருப்பது கவலையளிக்கிறது என்றும் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் முதன்முலில் மெட்ராஸ் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் தான் கொண்டுவரப்பட்டன. பிறகு தேசிய அளவில் இது அமல்படுத்தப்பட்டது.
'அரசியல் கட்சிகளுக்கு தனி சட்டம் வேண்டும்'
ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்றால், இந்தியாவில் அரசியல் கட்சிகளை முறைப்படுத்த தனியே சட்டம் கொண்டுவர வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும், தேர்தகளுக்கான நிதி என்று ஒன்று அமைக்கப்பட வேண்டும். "தற்போது பெரும் நிறுவனங்கள் அவர்களது நிதியுதவியை நேரடியாக கட்சிகளுக்கு கொடுக்கிறார்கள். இது மாற வேண்டும். அப்படி இருந்தால், தேர்தலில் நம் போன்ற சாதாரண குடிமகன்கள் போட்டியிட முடியாது" என்றார்.
அவர் பேசியதை தொடர்ந்து மாணவர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பதிலளித்தார்.

பட மூலாதாரம், SAM PANTHAKY
கேள்வி: வாக்குக்கு பணம் கொடுப்பதை சிறு வயதில் இருந்து பார்த்து வருகிறேன். ஆனால், இது குறித்து தேர்தல் ஆணையம் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை?
பதில்: வாக்குகளுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்பது உண்மைதான். சொல்லப் போனால் இது தமிழகத்தில் மிகவும் பிரபலமானது.
பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பணத்துக்கு பதிலாக மது பாட்டில்கள் வழங்குவார்கள். அங்கு பணத்தைவிட, அதற்குதான் மதிப்பு அதிகம்.
இது ஒரு பெரிய குறைபாடு என்பது உண்மைதான். நாங்கள் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். ஆனால், மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க முடியும். தேர்தல் ஆணையத்திற்கு அந்த அதிகாரம் கிடையாது.
கேள்வி: நூறு சதவீத வாக்குப்பதிவு சாத்தியமா?
உலகத்தில் எங்கேயுமே நூறு சதவீத வாக்குப்பதிவு என்பது சாத்தியம் இல்லாதது. அதற்கு கட்டாயம் வாக்குப்பதிவை கொண்டுவந்தால்தான் உண்டு.
உதாரணமாக ஆஸ்திரேலியாவில் கட்டாய வாக்குப்பதிவு உள்ளது. மக்கள் யாரேனும் வாக்களிக்கவில்லை என்றால் அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.
இந்தியாவில் இதற்கு சாத்தியமில்லை. அப்படி இருந்தால், லட்சக்கணக்கான மக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டியிருக்கும்.
அதுமட்டுமில்லாமல், இந்தியாவில் Right not to Vote என்ற ஒன்றும் இருக்கிறது. வாக்களிப்பது எப்படி மக்கள் உரிமையோ, வாக்களிக்காமல் இருப்பதும் மக்கள் உரிமைதான்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












