விடுதலைப் புலிகள் காலத்தில் வன வளம் பாதுகாக்கப்பட்டது - மைத்திரிபால சிறிசேன

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடந்தபோது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள வனப் பகுதிகள் பாதுகாக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
திம்புலாகலை - வெஹெரகல பகுதியில் இன்று இடம்பெற்ற சர்வதேச வனப் பாதுகாப்பு தின நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போதுள்ள வன அடர்த்தியை பாதுகாப்பதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்படாவிட்டால், சுமார் 15 வருடங்களில் இலங்கையின் வன வளம் அழியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் எஞ்சியுள்ள 28 சதவீத வன அடர்த்தியில் பெருமளவு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த பகுதிகளில் இடம்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்த நடவடிக்கைகளினால் அந்த வன வளம் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
யுத்தம் இடம்பெறாத ஏனைய பகுதிகளில் அரசியல்வாதிகள் மற்றும் கடத்தல்காரர்களினால் வனவளம் அழிக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நினைவூட்டியுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் 3 வருடங்களில் 32 சதவீதமான வன வளத்தை அதிகரிக்கும் நிகழ்ச்சி திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாக கூறிய அவர், அதற்காக 1,48,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் புதிதாக மரம் நடுகைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு, ஆண்டொன்றிற்கு 15,000 மரங்களை நட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சி திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க அரசாங்கம், தனியார் துறையினர், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பாடசாலை மாணவ மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












