கள்ள வாக்குகளை அச்சிட்டு போட்ட சம்பவங்கள் நடந்துள்ளன: முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
மின்னணு வாக்குப் பதிவு முறை மீது சந்தேகம் கொண்ட அரசியல் கட்சிகள், வாக்களிப்பதற்காக ஒப்புகைச் சீட்டு வழங்கும் விவிபாட்(VVPAT) வசதியை சந்தேகிப்பதைத் தடுக்கமுடியாது என முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார்.
2019 தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்தும், தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகள் குறித்தும் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தியிடம் பிபிசி தமிழ் கேள்விகளை முன்வைத்தது.
ஒவ்வொரு தேர்தலின்போதும் காசுக்கு வாக்கினை விற்காதீர்கள் என்ற பிரசாரம் செய்யும் ஆர்வலர்களில் முக்கியமானவர் கிருஷ்ணமூர்த்தி. அதோடு, கள்ள வாக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயந்திர வாக்குப்பதிவு அவசியம் என்ற கருத்தையும் வலியுறுத்துபவர் இவர்.

பட மூலாதாரம், SAM PANTHAKY
சவால் மிகுந்த 2004 நாடாளுமன்ற தேர்தலை நடத்திய கிருஷ்ணமூர்த்தி, இயந்திர வாக்குப்பதிவை சாடும் அரசியல்கட்சிகள் எழுப்பும் சந்தேகங்கள் பயனற்றவை என்றும் கூறுகிறார்.
''மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முழுக்க முழுக்க பாதுகாப்பானது. தற்போது விவிபாட் இயந்திரத்தை வாக்குப்பதிவு மையத்தில் வைக்கவுள்ளார்கள். விவிபாட் அத்தியாவசியமான இயந்திரம் இல்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்பாட்டுக்கு வந்தபோது சந்தேகங்களை அடுக்கிய அரசியல்கட்சிகள், விவிபாட் இயந்திரத்தின் மீதும் சந்தேகம் கொள்வார்கள். தேர்தல் நடைமுறையை கேள்விக்கு உட்படுத்த விவிபாட் இயந்திரத்தை ஒரு வாய்ப்பாக கருதுவார்கள்,'' என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
இயந்திர வாக்குப்பதிவுக்கு பதிலாக முன்னர் பயன்பாட்டிலிருந்த வாக்குப்பெட்டியில் வாக்குசீட்டை செலுத்தும் முறையை கொண்டுவரவேண்டும் என எழும் வாதம் ஏன் தவறானது என கிருஷ்ணமூர்த்தி தனது அனுபவத்திலிருந்து பதில் தருகிறார்.
''பெயர் குறிப்பிட்டு சொல்லவிரும்பவில்லை. இந்தியாவில் வாக்குப்பெட்டிகள் தவறாக பயன்படுத்தப்பட்டன. கள்ள ஓட்டுகள் போடப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இந்தியாவின் சில கிழக்கு மாநிலங்களில் கள்ள ஓட்டு சீட்டுகள் அச்சிடப்பட்டு, வாக்குப்பெட்டியில் போடப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. மின்ணணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சோதனை செய்யும் வசதி உள்ளது. மேலும் மக்கள்தொகை அதிகரித்துவரும் சூழலில் தொழில்நுட்பத்தின் உதவி தேவை,''என்று விளக்குகிறார்.
25 சதவீத வாக்கு இல்லாவிட்டாலும் அமைச்சர் பதவி
வெற்றி அடைந்த வேட்பாளர் பெறும் ஓட்டுகளின் சதவீதம் குறைவானதாக இருந்தாலும், அவரை மக்களின் பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளும் நிலையை பற்றி அவரிடம் கேள்வி கேட்டோம்.
''இந்தியாவில் பின்பற்றப்படும் நடைமுறையின்படி, எந்த வேட்பாளர் மற்றவர்களை விட அதிக வாக்குகளை பெற்றுள்ளாரோ அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார்.

ஒரு ஓட்டு அதிகமாக பெற்றாலும், அந்த நபர் வெற்றி பெற்றவர் ஆகிறார். சுமார் 15 வேட்பாளர்கள் போட்டியிடும் இடத்தில், வெற்றி பெறும் வேட்பாளர், மொத்தம் பதிவான வாக்குகளில் வெறும் 25 சதவீதம் பெற்றாலும், அவர் வெற்றிபெற்றவர் ஆகிறார். ஆனால் பிற 75 சதவீத வாக்காளர்கள் இவரை விரும்பவில்லை என்றாலும், அவரே பதவியைப் பெறுகிறார். அனைத்து மக்களின் பிரதிநிதியாக அவரை எவ்வாறு கொள்ளமுடியும்? அந்த நபர் அமைச்சராக கூட பதவி பெறமுடிகிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற சமயத்தில், பெரும்பாலான மக்களுக்கு படிப்பறிவு இல்லை என்ற காரணத்தில் இம்முறை பின்பற்றபட்டது. தற்போது இதை மாற்றவேண்டும்,''என்கிறார்.


வெற்றி வேட்பாளரை தேர்வு செய்யும் முறையில் எந்த விதத்தில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என அவர் விவரித்தார்.
''இந்தியாவில் படிப்பறிவு உயர்ந்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் பல தேர்தல்களை நடத்திய அனுபவம் நமக்கு உள்ளது. வெற்றி பெறுபவர், குறைந்தபட்சம் 33.13 சதவீதம் வாக்குகளை பெற்றவராக இருக்கவேண்டும். குறைந்த வாக்கு சதவீதம் பெற்றாலும் வெற்றி வேட்பாளராக ஒருவரை ஏற்றுக்கொள்வதை தவிர்த்து மறுதேர்தல் நடத்தப்படவேண்டும். சில காலங்களுக்கு பின்னர் 33.13% என்பதை 50% என மாற்றவேண்டும். இதை பின்பற்றினால், ஒவ்வொரு கட்சியும் தங்களது வேட்பாளர் சரியான நபராக, மக்கள் திரளின் செல்வாக்கை பெற்ற நபராக இருக்கவேண்டும் என்ற கட்டாயத்தில், சிறந்த வேட்பாளரை நிறுத்துவார்கள்''என்கிறார்.

பட மூலாதாரம், SAM PANTHAKY
தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் செலவு செய்வதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதால் இந்திய அரசாங்கம் தேர்தல் நிதி ஒன்றை உருவாக்கி செலவுகளை கட்டுப்படுத்தவேண்டும் என்ற பரிந்துரையை முன்வைக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
தேர்தலின்போது, அரசியல் கட்சிகளும், பெருநிறுவனங்களும் ஓர் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்கின்றன என்றும், குறிப்பிட்ட கட்சி ஆட்சிக்கு வந்தால், தனது நிறுவனத்திற்கு உதவி செய்யவேண்டும் என்ற உடன்படிக்கைதான் அது என்றும் கூறிய கூறிய கிருஷ்ணமூர்த்தி, எதிரெதிர் தரப்பில் உள்ள கட்சிகளுக்கும் பணம் தரப்படுகின்றன என்கிறார்.


தேர்தல் செலவுகளுக்கு நிதி கொடுப்பதில் சட்டவிதிகள் மீறப்படுவது குறித்து பேசிய அவர், ''முன்னர் லாபம் ஈட்டும் நிறுவனங்கள் 'எலக்ஷன் பாண்ட்' (election bond) என்ற பெயரில் குறிப்பிட்ட அளவு கட்சிகளுக்கு நிதி கொடுப்பதை அரசாங்கம் ஏற்றது. சமீபத்தில் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் கூட அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்பதில் எந்த சிக்கலையும் சந்திக்க தேவையில்லை என்ற விதிமுறை வந்துள்ளது. இது தேர்தல் செலவுகளை அதிகப்படுத்தும். மேலும் இது வெளிப்படைதன்மையற்ற செயல். இதற்கு மாற்று வேண்டும் என்றால் தேர்தல் நிதி ஒன்றை உருவாக்கி, தேர்தல் ஆணையம் அதனை மேற்பார்வை செய்யவேண்டும்" என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












