தமிழர் குரல் - "இந்தியாவில் ஒரு முஸ்லிம், கிறித்துவரால் பிரதமராக முடியாது" - தொல். திருமாவளவன்

வரவிருக்கும் 2019 மக்களவைத் தேர்தலையொட்டி பிபிசி தமிழ் சார்பில் சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் "தமிழர் குரல்" என்ற தேர்தல் சிறப்பு நிகழ்வு தொடங்கியது
2019 மக்களவை தேர்தலை ஒட்டி, பிபிசி இந்தியா முழுவதும் வெவ்வேறு மொழிச் சேவைகளின் மூலம் 'டவுன் ஹால்' என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது. இதில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பங்கேற்று மாணவ - மாணவிகளுடன் உரையாடுகிறார்கள்.
இந்தத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இந்தத் தேர்தலில் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள், ஜனநாயகம் குறித்த அவர்களுடைய கருத்து என்ன என்பவற்றை வெளிப்படுத்தவும் புரிந்துகொள்ளவும் வாய்ப்பளிப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

இதில் பங்கேற்பதற்காக அழைக்கப்பட்டுள்ள மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அரசியல் தலைவர்கள், மற்ற பிரபலங்களிடம் கேள்வி கேட்கும் வாய்ப்பும் அளிக்கப்படும்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நாராயணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதனை பிபிசி தமிழின் ஆசிரியர் தங்கவேல் அப்பாச்சி தொகுத்து வழங்குகிறார்.
முதல் அமர்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், ''நாடாளுமன்றத்தில் எங்கள் குரல் ஒலிக்க வேண்டும் என்றால், வளர்ந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டியது அவசியம். மக்கள் மன்றத்தில் பேசும் பேச்சு, சட்டமன்றம் நாடாளுமன்றத்தில் பேசினால் மட்டுமே சமூகத்தில் மாற்றம் ஏற்படும்'' என்று கூறினார்.
''வெற்றி பெற்ற எங்கள் உறுப்பினர்கள் மீது எந்த ஆளுங்கட்சியும் ஆதிக்கம் செலுத்த முடியாது'' என்று அவர் மேலும் கூறினார்.
ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் என்று நான் மட்டும் இன்று பேசவில்லை. இதெல்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. இதற்கு முன் போராடியவர்கள் தோற்று போயிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை என்று அவர் தெரிவித்தார்.
மதத்தை வைத்து ஆதாயம் தேடுவது ஆபத்தானது என்றும் அரசு மதம் சார்ந்து இருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார். மக்கள் எந்த மதத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். அதுதான் மதசார்பின்மை. ஆனால், அரசாங்கத்துக்கு மதம் இருக்கக்கூடாது என்றார்.
முதல் அமர்வை தொடர்ந்து, இரண்டாவது அமர்வில் முன்னாள் தலைமை ஆணையர் டிஎஸ். கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று பேசினார். இதனை பிபிசி செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்தியாவின் பெருமை. இதனால், காகிதங்கள் வீணாகாது. நேர விரையத்தை இது குறைப்பதோடு, இதனால் விரைவாக முடிவுகளை அறிவிக்க முடியும் என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
கட்சிகள் ஏதேனும் குறைப்பாடு சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள். மனிதர்கள் பொய் சொல்வார்கள். ஆனால் இயந்திரங்கள் பொய் சொல்லாது என்று அவர் கூறினார்.

நம் வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்பாமல் இருப்பது கவலையளிக்கிறது என்றும் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் முதன்முலில் மெட்ராஸ் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் தான் கொண்டுவரப்பட்டன. பிறகு தேசிய அளவில் இது அமல்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
கேள்வி: வாக்குக்கு பணம் கொடுப்பதை சிறு வயதில் இருந்து பார்த்து வருகிறேன். ஆனால், இது குறித்து தேர்தல் ஆணையம் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை?
பதில்: வாக்குகளுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்பது உண்மைதான். சொல்லப் போனால் இது தமிழகத்தில் மிகவும் பிரபலமானது.
பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பணத்துக்கு பதிலாக மது பாட்டில்கள் வழங்குவார்கள். அங்கு பணத்தைவிட, அதற்குதான் மதிப்பு அதிகம்.
இது ஒரு பெரிய குறைபாடு என்பது உண்மைதான். நாங்கள் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். ஆனால், மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க முடியும். தேர்தல் ஆணையத்திற்கு அந்த அதிகாரம் கிடையாது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












